பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மேஜர் ஜெனரல் ஜெகத் அல்விஸ், பிரதம நீதியரசர் ஜெயந்த ஜெயசூரியவிடம் மன்னிப்புக் கோரியுள்ளார்.
பிரதம நீதியரசருக்கு நேரடியாக அனுப்பிய கடிதம் தொடர்பிலேயே ஜெகத் அல்விஸ் தமது மன்னிப்பைக் கோரியுள்ளார்.
இந்த கடிதம் தொடர்பில், ஜெகத் அல்விஸ் மீது நடவடிக்கை எடுக்குமாறு, பிரதம நீதியரசர், சட்டமா அதிபருக்கு அறிவித்தமையை அடுத்தே இந்த மன்னிப்பு கோரப்பட்டுள்ளது.
தனது அதிகாரத்தை மீறி, மேஜர் ஜெனரல் அல்விஸ், பிரதம நீதியரசருக்கு நேரடியாக கடிதம் எழுதியமைக்காக சட்டமா அதிபர் சஞ்சய் ராஜரத்தினம் கடுமையாக எச்சரித்துள்ளதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகியிருந்தன.
நாடு முழுவதும் நடந்து வரும் போராட்டங்களை கருத்தில் கொண்டு, சட்டம் மற்றும் ஒழுங்கை பாதுகாப்பதற்காக பொலிசார் போராட்டங்களுக்கு தடையை கோரியபோது, நீதிவான்கள் அதற்கு அனுமதி வழங்கவில்லை.
இதன் காரணமாகவே இன்றைய நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளதாக ஜெகத் அல்விஸ், பிரதம நீதியரசருக்கான கடிதத்தில் தெரிவித்திருந்தார்.
அத்துடன்,எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் தடைகள் குறித்து விவாதிக்க பொலிஸ் மா அதிபர் மற்றும் பிற சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளுடன் சந்திப்புக்கான வாய்ப்பையும் பிரதம நீதியரசரிடம் ஜெகத் அல்விஸ் கோரியிருந்தார்.
இதனையடுத்தே, முற்றிலும் தேவையற்ற கடிதத்தை அனுப்பிய அவரை, கடுமையாக எச்சரிக்குமாறு, பிரதம நீதியரசர், சட்டமா அதிபருக்கு கடிதம் அனுப்பியிருந்தார்.
பிரதம நீதியரசரின் கடிதத்தை தொடர்ந்து, அதிகாரத்தை மீற வேண்டாம் என்று அமைச்சின் செயலாளருக்கு, சட்டமா அதிபர், இறுதி எச்சரிக்கையை விடுத்திருந்தார்.
இந்தநிலையிலேயே பிரதம நீதியரசர் ஜெயந்த ஜெயசூரியவிடம், ஜெகத் அல்விஸ் தமது மன்னிப்பைக் கோரியுள்ளார்.