ஏறாவூரில் இடம்பெற்ற வன்முறை சம்பவம்: கைதாகிய மாணவனுக்கு நீதிமன்றம் வழங்கியுள்ள உத்தரவு…

272

மட்டக்களப்பு – ஏறாவூரில் வன்முறைச் சம்பவம் தொடர்பாக மாவட்ட குற்ற விசாரணை பிரிவினரால் கைது செய்யப்பட்ட 16 வயது மாணவனை நீதிமன்றில் முன்னிறுத்தியபோது எதிர்வரும் 25 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

கடந்த 10 ஆம் திகதி இரவு ஹாபீஸ் நஸீர் அஹமட்டின் ஏறாவூர் பிரதான வீதியிலுள்ள காரியாலயம், வீடு, அவரது உறவினரின் வீடு, விடுதி, கடை என்பன தீக்கிரையாக்கியதுடன், 3 ஆடைத்தொழிற்சாலைகளினை முற்றுகையிட்டு சேதமாக்கினர்.

இந்த வன்முறைச் சம்பவம் தொடர்பாக மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சுகத் மாசிங்காவின் ஆலோசணைக்கமைய மாவட்ட குற்ற விசாரணைப்பிரிவு பொறுப்பதிகாரி பி.எஸ்.பி. பண்டார தலைமையிலான பொலிஸ் குழுவினர் விசாரணை மேற்கொண்டனர்.

ஏறாவூரில் இடம்பெற்ற வன்முறை சம்பவம்: கைதாகிய மாணவனுக்கு நீதிமன்றம் வழங்கியுள்ள உத்தரவு

 

இவ்விசாரணையில் நேற்று ஏறாவூர் பிரதேசத்தைச் சேர்ந்த, நாளை க.பொ.த சாதரணதரப் பரீட்சைக்குத் தோற்றவிருந்த 16 வயது மாணவனை கைது செய்துள்ளனர்.

இவ்வாறு நேற்று கைது செய்யப்பட்ட மாணவனை ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற நீதவான் முன்னிலையில் முன்னிறுத்தியபோது, அவரை எதிர்வரும் 25ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறும், க.பொ.த சாதாரண பரீட்சைக்குத் தோற்றவுள்ள பரீட்சை நிலையத்துக்குக் கொண்டு சென்று பரீட்சை எழுத அனுமதிக்குமாறும் சிறைச்சாலை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

இதேவேளை இந்த வன்முறைச் சம்பவம் தொடர்பாக விடுதி, கடையிலிருந்து கொள்ளையிடப்பட்ட பொருட்களுடன் கடந்த சில தினங்களுக்கு முன்னர் 14 பேரைக் கைது செய்து ஏறாவூர் சுற்றுலா நீதிமன்றத்தில் முன்னிறுத்தியபோது அவர்களை எதிர்வரும் 25 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

ஏறாவூரில் இடம்பெற்ற வன்முறை சம்பவம்: கைதாகிய மாணவனுக்கு நீதிமன்றம் வழங்கியுள்ள உத்தரவு

இந்த வன்முறைச் சம்பவம் தொடர்பாக இதுவரை 15 பேரைக் கைது செய்துள்ளதாகவும் இதனுடன் தொடர்புபட்ட பலர் தலை மறைவாகியுள்ளதாகவும் இதில் ஒருவர் நேற்றைய தினம் கட்டுநாயக்கா விமான நிலையத்தில் விமான நிலைய பொலிஸார் கைது செய்துள்ளதாகவும் தலைமறைவாகியுள்ள ஏனையவர்களைக் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மாவட்ட குற்ற விசாரணைப்பிரிவு பொறுப்பதிகாரி பி.எஸ்.பி. பண்டார தெரிவித்துள்ளார்.

SHARE