தாமஸ் மற்றும் உபேர் கோப்பைக்கான உலக பேட்மிண்டன் போட்டி டெல்லியில் இன்று தொடங்குகிறது. இதில் சாய்னா, காஷ்யாப் தலைமையில் இந்திய அணிகள் பங்கேற்கின்றன.
உலக பேட்மிண்டன் போட்டி
இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் உலக ஆண்கள் (தாமஸ் கோப்பை) மற்றும் பெண்கள் (உபேர் கோப்பை) அணிகளுக்கான பேட்மிண்டன் போட்டி டெல்லியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் 25–ந் தேதி வரை நடக்கிறது. போட்டி 3 ஒற்றையர் மற்றும் இரண்டு இரட்டையர் ஆட்டங்களை உள்ளடக்கியதாகும்.
இதில் ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவில் தலா 16 அணிகள் கலந்து கொள்கின்றன. அவை 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. லீக் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் கால் இறுதிக்கு தகுதி பெறும்.
‘சி’ பிரிவில் இந்தியா
ஆண்களுக்கான போட்டியில் இந்திய அணி ‘சி’ பிரிவில் இடம் பெற்றுள்ளது. மலேசியா, தென் கொரியா, ஜெர்மனி ஆகியவை அந்த பிரிவில் உள்ள மற்ற அணிகளாகும். இதேபோல் பெண்களுக்கான போட்டியிலும் இந்திய அணி ‘சி’ பிரிவில் இடம் பெற்று இருக்கிறது. அந்த பிரிவில் தாய்லாந்து, கனடா, ஹாங்காங் ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன.
இந்திய ஆண்கள் அணி காஷ்யாப் தலைமையில் களம் காணுகிறது. ஸ்ரீகாந்த், குருசாய்தத், சவுரப் வர்மா, சாய் பிரனீத் ஆகியோரும் அணியில் இடம் பெற்றுள்ளனர். இந்திய பெண்கள் அணி லண்டன் ஒலிம்பிக்கில் வெண்கலப்பதக்கம் வென்ற சாய்னா நேவால் தலைமையில் களம் இறங்குகிறது. பி.வி.சிந்து, அருந்ததி, துளசி, தன்வி லாத், ஜூவாலா கட்டா, அஸ்வினி ஆகியோரும் அணியில் இடம் பிடித்துள்ளனர்.
முதல்முறை
தொடக்க ஆட்டங்களில் இந்திய ஆண்கள் அணி மலேசியாவையும், இந்திய பெண்கள் அணி கனடாவையும் சந்திக்கிறது. இந்த போட்டியில் 10 முறை சாம்பியன் சீனா, 13 முறை சாம்பியன் இந்தோனேஷியா மற்றும் டென்மார்க், ஜப்பான் ஆகிய வலுவான அணிகள் கலந்து கொள்கின்றன.
ஆண்கள் பிரிவில் இந்திய அணி இதுவரை 8 முறையும், பெண்கள் பிரிவில் 3 முறையும் தான் இறுதி சுற்றுக்குள் நுழைந்து இருக்கிறது. ஒரு முறையும் கோப்பையை வென்றது. உலகின் முன்னணி வீரர்–வீராங்கனைகள் பங்கேற்கும் இந்த போட்டி இந்தியாவில் நடைபெறுவது இதுவே முதல்முறையாகும்