மிதுனம் – ஆங்கில புத்தாண்டு ராசிப்பலன் 2023

241

திட்டமிட்டு வெற்றிபெறும் மிதுன ராசியினர் ஆங்கிலப் புத்தாண்டு மகிழ்ச்சியை அதிகரிக்கும் வருடமாகத் திகழ நல்வாழ்த்துக்கள். 2023ம் ஆண்டு உங்களை ரத்தின கம்பளம் விரித்து வளர்ச்சியின் உச்சத்திற்கு அழைத்துச் செல்லப் போகிறது.

இந்த வருடம் பனிரெண்டு ராசிகளில் உன்னதமான சுப பலன்களை அடையப் போவது மிதுன ராசி என்பதில் எந்தவிதமான மிகைப்படுத்தலும் இல்லை. இதுவரைப் பட்ட கஷ்டங்களும் அவமானங்களும் விலகும். தன்னம்பிக்கையும், தைரியமும் மேலோங்கும். முயற்சிகளில் முன்னேற்றத்தில் ஏற்பட்ட தடை, தாமதங்கள் விலகும். சனி,குரு, ராகு/கேது போன்ற வருட கிரகங்களின் சஞ்சாரம் அனைத்தும் மிக மிகச் சாதகமாக உள்ளது.

குருவின் சஞ்சார பலன்கள்: மிதுன ராசிக்கு 7, 10ம் அதிபதியான குரு பகவான் ஏப்ரல் 22, 2023 வரை ராசிக்கு 10ம் இடமான தொழில் ஸ்தானத்தில் ஆட்சி பலம் பெறுகிறார். அதன் பிறகு 11ம் இடமான லாப ஸ்தானத்திற்குச் சென்று ராகுவுடன் இணைகிறார். பாக்கிய ஸ்தானத்தில் நிற்கும் சனியின் 3ம் பார்வை குருவிற்கு கிடைப்பது தர்ம கர்மாதிபதி யோகம் . அதாவது குரு மற்றும் சனி சம்பந்தம் தர்ம கர்மாதிபதி யோகமாகும். உங்களின் 9ம் அதிபதி சனிக்கும் 10ம் அதிபதி குருவிற்கும் கோட்சார ரீதியான சம்பந்தம் ஏற்படுவதால் முன்னோர்களின் பூர்வ புண்ணியம் உங்களைக் காப்பாற்றும் காலம். வியாபாரம் பெருகும். பல தொழில் செய்யும் ஆர்வம் உண்டாகும்.

பிரமாண்டமான தொழில் சிந்தனை இருக்கும். லாபகரமான நிலைக்கு தொழிலை கொண்டு செல்வீர்கள். தொழில் வளர்ச்சிக்காக வாங்கிய கடன் தொகையை வட்டியுடன் திருப்பி செலுத்து காலம். கடன் பிரச்சனையால் நீண்ட நாட்களாக இருந்து வந்த சுணக்க நிலை மாறும். காசோலை தொடர்பான வம்பு வழக்குகள் முடிவுக்கு வரும். கடன் சுமையை குறைக்க அடகு வைத்த நகைகளை மீட்பீர்கள். இந்த காலகட்டத்தில் இழந்த வேலை மீண்டும் கிடைக்கும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளால் ஏற்பட்ட மன உளைச்சல் அகலும். வெறுப்பை உமிழ்ந்த மேல் அதிகாரி கருணை காட்டுவார். பணிச்சுமை குறையும். கர்மம் செய்ய புத்திரன் பிறப்பான். இழந்த நிம்மதி, சந்தோஷம் மீண்டும் உங்களுக்குள் குடிபுகும். அவப்பெயர்கள், சங்கடங்கள் விலகும். கணவன் மனைவி கருத்து வேற்றுமை நீங்கும். இழந்த சொத்துக்கள் மீண்டும் கைக்கு வந்து சேரும்.

சனியின் சஞ்சார பலன்கள்: மிதுன ராசிக்கு 8,9ம் அதிபதியான சனி பகவான் ஜனவரி 17, 2023 முதல் 9ம் இடமான பாக்கிய ஸ்தானம் செல்கிறார்.அஷ்டமச் சனியிலிருந்து முழுமையாக விடுபடுவதால் இழந்த அனைத்துவிதமான பாக்கியங்களையும் மீண்டும் அடைவீர்கள். புண்ணிய பலன்கள் அதிகரிக்கும். வாக்குவன்மையால் நன்மைகள் ஏற்படும். தெய்வ சிந்தனை அதிகரிக்கும். தாய், தந்தையின் அன்பும் நல்லாசிகள் கிடைக்கும். தீர்த்த யாத்திரை செல்லுதல், தானதர்மம் செய்வதில் ஆர்வம் மிகும். வெளிநாட்டு வாழ்க்கையை மனம் விரும்பும். தந்தை மற்றும் தந்தை வழி உறவுகளின் ஆதரவு கிடைக்கும்.

தந்தை,மகன் உறவில் அன்பு வெளிப்படும். பிரிந்த தந்தை மகன் சேர்ந்து வாழ்வார்கள். தந்தையின் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். பித்ருக்களின் நல்லாசிகள் கிடைகும். பல தலைமுறையாக தீர்க்க முடியாத பித்ரு தோஷத்தை முறையான பித்ருக்கள் வழிபாட்டை கடைபிடித்து சரிசெய்வீர்கள். பல தலைமுறையாக பயன்படாத பூர்வீகச் சொத்துக்கள் நல்ல விலைக்கு விற்று பணம் கிடைக்கும். பல வருடங்களாக கண்டு பிடிக்க முடியாத, தெரியாத பூர்வீகம்,குலம், கோத்திரம், குல தெய்வம் பற்றிய தகவல் கிடைக்கும். சிலர் வெளிநாட்டு குடியுரிமை பெற்று வாழ்வார்கள். சிலருக்கு இரண்டாம் திருமணம் நடக்கும். புத்திர பேறு உண்டாகும். புதிய வேலைக்கு விண்ணப்பித்தவர்களுக்கு விரும்பிய உத்தியோகம் கிடைக்கும். என்ன நோய் என்றே தெரியாமல் குழப்பத்தில் இருந்தவர்களுக்கு நோயின் தன்மை புரியும். அறுவை சிகிச்சை செய்யும் நிலையில் இருந்த நோய் கூட அறுவை சிகிச்சையின்றி முற்றிலும் குணமடையும். வழக்குகளில் சாதகமான போக்கு காணப்படும். கருத்து வேறுபாட்டால் பிரிந்து வாழும் தம்பதிகள் கூடி மகிழ்வார்கள்.

ராகு/கேதுவின் சஞ்சார பலன்கள்: அக்டோபர் 30, 2023 வரை ராகு பகவான் 11ம் இடத்தலும், கேது பகவான் 5ம் இடத்திலும் சஞ்சாரம் செய்கிறார்கள். அதன் பிறகு ராகு 10ம் இடத்திற்கும் கேது 4ம் இடத்திற்கும் இடம் பெயருகிறார்கள்.சிலருக்கு குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்கும் எண்ணம் அதிகரிக்கும். பங்குச் சந்தை ஆதாயம் அதிகமாக கிடைக்கும். சொத்துச் சேர்க்கை அதிகமாகும். சொத்துக்களின் மதிப்பு உயரும். பூர்வீகச் சொத்து தொடர்பான சிக்கல்கள் நல்ல படியாக முடிந்து சாதகமான தீர்ப்பு வரும்.

நல்ல பொருளாதார விருத்தியை, மன நிம்மதியைக் தரக்கூடிய பூமியின் அதிர்வலை சிறப்பாக உள்ள வீடு, மனை அமையும். ஏற்கனவே சொந்த வீட்டில் குடியிருப்பவர்கள் வீட்டை புதுப்பிப்பார்கள். தங்கம், வெள்ளி, வைரம் போன்ற விலை உயர்ந்த பொருட்களின் சேர்க்கையால் மகிழ்ச்சி உண்டாகும்.

திருமணம்: ராசிக்கு 7ம் இடத்திற்கு குருப்பார்வை இருப்பதால் அஷ்டமச் சனி காலத்தில் தடைபட்ட திருமணம் குருபகவானின் நல்லாசியால் நடந்து முடியும்.

பெண்கள்: தாய் வழி உறவினர்களிடம் சொத்து, கொடுக்கல் வாங்கல் தொடர்பான சங்கடங்கள் மறையும். வீடு, வாகன யோகம் ஏற்படுவதில் சற்று கால தாமதம் ஏற்பட்டாலும் முயற்சிகள் வெற்றி தரும். தடைப்பட்ட பதவி உயர்வு, ஊதிய உயர்வு போன்ற பலன்கள் கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும்.

மாணவர்கள்: நீண்ட காலமாக தடைபட்ட உயர் ஆராய்ச்சி கல்வி விரும்பிய கல்லூரியில் சென்று படிக்கும் வாய்ப்புகள் கிடைக்கும். அதிக நேரம் ஒதுக்கி படித்தால் பள்ளி இறுதி தேர்வில் விரும்பும் மதிப்பெண்ணை பெற முடியும். உங்கள் முயற்சிக்கு ஏற்ற பலன் நிச்சயம் உண்டு. சில மாணவர்கள் பள்ளியை மாற்றுவார்கள்.

மிருகசீரிஷம் 3, 4,: எதிர்பாராத நல்ல திருப்பங்கள் உண்டாகும். சுணங்கிக் கிடந்த காரியங்களில் இருந்து வந்த தடை தாமதம் நீங்கும். எதிலும் வெற்றி உண்டாகும். அண்டை, அயலாருடன் நல்லிணக்கம் உண்டாகும். வீண் அலைச்சல், துக்கம் விலகும். குடும்ப வாழ்க்கையில் சில பிரச்சினைகள் தடைகள் வந்தாலும் குருப் பார்வையால் சுமூகமாகும்.புதிய தொழில் தொடங்க சாதகமான சூழல்கள் உருவாகும். வேலை இழந்தவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வேலையில் இருப்பவர்களுக்கு தடைபட்ட பதவி உயர்வு, இடமாற்றம் உண்டாகும். பிள்ளைகளுக்கு திருமணத் தடை அகலும்.

முன்னோர்களின் நல் ஆசியும் குலதெய்வ கடாட்சமும் உண்டாகும். இழந்த பதவிகள் மீண்டும் கிடைக்கும். பூர்வீகச் சொத்தில் இருந்து வந்த தீராத சிக்கல்கள் தீரும். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.

பரிகாரம்: தினமும் ஆஞ்சநேயர் கோவில் செந்தூரத்தை நெற்றியில் இட்டு வர வெற்றி உண்டாகும். அதிர்ஷ்டம் அதிகரிக்கும்.

திருவாதிரை: தடைபட்ட வெளிநாட்டு வேலை வாய்ப்பு இப்பொழுது கிடைக்கும். பிள்ளைகள் கல்விக்காக வெளியூர், வெளிநாட்டிற்கு இடம் பெயரலாம். வராகடன் என்று முடிவு செய்த பணம் உங்களைத் தேடி வரும். பாலிசி முதிர்வு தொகை, பூர்வீகச்சொத்து, பங்கு சந்தை முதலீடு என எதிர்பாராத பெரிய பணம் உங்களை மகிழ்விக்கும். தொழிலில் இருந்த மந்த நிலை மாறி சூடுபடிக்கும். கூட்டுக் குடும்பத்தை விட்டுப் பிரிந்த மூத்த சகோதரர் மீண்டும் குடும்பத்தில் இணைவார். விழிப்புணர்வோடு செயல்படுவீர்கள். தொழில் கூட்டாளிகள் மற்றும் நண்பர்களிடம் நிலவிய பகை விலகும். அதிக முதலீட்டில் சொந்த தொழில் செய்பவர்களுக்கு இமாலய வளர்ச்சி உண்டு. பொருளாதார நிலையில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். உத்தியோகத்தில் சாதகமான நிலை நீடித்தாலும் வேலைப் பளுவும் பொறுப்புகளும் அதிகரிக்கும்.

பரிகாரம்: ரோஜா மாலை சாற்றி சிவ பெருமானை வழிபடவும். புனர்பூசம் 1, 2, 3: தோரணையாலும் சாமர்த்தியத்தி னாலும் திட்டம் தீட்டி நல்ல பலன்களை பெறப் போகிறீர்கள். தடைபட்ட முயற்சிகள் துரித மாகும். மனதில் மகிழ்ச்சி உண்டாகும். சுறுசுறுப்பும் செயல்திறனும் கூடும். நோய்த் தொல்லை குறையும்.

திருமணம், குழந்தை பாக்கியம் போன்ற சுப காரியங்கள் அனுகூலமாகும். பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும். சொத்துகளின் வாடகைதாரர் மாறலாம். தாய்மாமாவுடன் ஏற்பட்ட மன வருத்தம் மாறும். தம்பதிகளின் கருத்து வேற்றுமை குறையும். குடும்பத்தேவைகள் பூர்த்தியாகும். பெண்களுக்கு கணவரின் அன்பும், ஆதரவும் உண்டாகும்.

தொழிலில் நிலவிய போட்டி, பொறாமைகள் விலகும். கடந்தகால உழைப்பிற்கான பலன் இப்பொழுது கை கொடுக்கும். சிறிய முயற்சியில் பெரிய லாபம் கிடைக்கும். சிலருக்கு இடப் பெயர்ச்சியுடன் பதவி உயர்வு, ஊதிய உயர்வு உண்டாகும்

பரிகாரம்: தசமித் திதியில் புனித நீரால் அல்லது சுத்தமான பசும் பாலால் சிவனுக்கு அபிசேகம் செய்து வழிபட தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். மிதுன ராசியினர் புத்தாண்டிற்கு சென்று வழிபட வேண்டிய ஸ்தலம் திருச்செந்தூர். முருகன் இங்கு நவகிரகங்களில் குரு பகவானின் சாராம்சத்தை கொண்டவராக இருக்கிறார்.

ஒரு மனிதன் வாழ்வில் வெற்றி பெற குரு பலம் மிக அவசியம். கடந்த இரண்டரை ஆண்டுகளாக மிதுன ராசியினர் அஷ்டமச் சனியால் பட்ட இன்னல்கள் அளப்பரியது. தொழில், உத்தியோகம், பொருளாதாரம், திருமண வாழ்க்கை, குழந்தைகளால் வேதனை என எண்ணிலடங்கா துயரங்களை அனுபவித்து விட்டார்கள். ஒருவருக்கு குருபலம் இருந்தால் இழந்த அனைத்தையும் மீண்டும் பெற முடியும்.

இந்த திருசெந்தூர் கோவில் சிறந்த குரு பரிகார தலமாகும். எனவே இந்த ஆங்கிலப் புத்தாண்டில் திருச்செந்தூர் சென்று முருகனுக்கு அபிஷேகம் செய்து வழிபட பட்ட துயரம் அனைத்து விலகி இன்பம் பெருகும்.

maalaimalar

SHARE