‘எனது சொற்படி கேட்டு செயற்படாவிட்டால் எமது அதிகாரங்களை பயன்படுத்த வேண்டியிருக்கும்

593

‘எனது சொற்படி கேட்டு செயற்படாவிட்டால் எமது அதிகாரங்களை பயன்படுத்த வேண்டியிருக்கும்’ என யாழ்.மாவட்ட  இராணுவத்தளபதி உதயபெரேரா  யாழ்.பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்திற்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். முன்னதாக யாழ்.பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத் தலைவர் ஆர்.இராசகுமாரன் விசாரணைக்காக பலாலிக்கு அழைக்கப்பட்டிருந்த வேளையிலேயே அவர் இம்மிரட்டலை விடுத்துள்ளார்.
பல்கலைக்கழக ஆசிரியர் சங்க ஏற்பாட்டில் நாளை முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு நடத்தப்பட இருந்த நிலையில் யாழ்.நகர கட்டளை தலைமையகத்திற்கு அவர் அழைக்கப்பட்டிருந்தார். அங்கு நடந்த பேச்சுக்கள் வெற்றிபெறாமையால் விடயம் யாழ்.மாவட்ட இராணுவத் தளபதி உதயபெரேராவின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டிருந்தது. அதையடுத்து அவரது பணிப்பின் பேரில் விசாரணைக்காக பலாலி பாதுகாப்பு கட்டளைத் தலைமையகத்துக்கு அழைக்கப்பட்டிருந்தார். எனினும் இராணுவத் தளபதியின் மிரட்டல்களும் எடுபடாத நிலையில் அவரை மேலதிக விசாரணைகளிற்காக கொழும்பிலுள்ள பயங்கரவாத தடுப்பு பிரிவு பொலிஸ் தலைமையகத்திற்கு நாளைய தினம் விசாரணைகளிற்கு செல்ல உதயபெரேரா அறிவுறுத்தியுளளார். இதையடுத்து அவர் தற்போது கொழும்பு பயணமாகியுள்ளார்.
நாளைய தினம் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு நடத்தப்படுமென அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அதனை தடுக்கவே இந்நாடகங்கள் அரங்கேற்றப்படுவதாக சந்தேகிக்கப்படுகின்றது.
இதனிடையே யாழ்ப்பாணத்தின் இரு இளம் ஊடகவியலாளர்களதும் பீடாதிபதிகள் மற்றும் விரிவுரையாளர்கள் சிலரதும் பெயர்கள் குறிப்பிட்டு மீண்டும் கொலை அச்சுறுத்தல் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை தடுக்கவென மூடப்பட்ட யாழ்.பல்கலைக்கழகம் நாளையே மீண்டும் திறக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

SHARE