இனவழிப்பு யுத்தத்தில் பாதிக்கப்பட்ட ஈழத்தமிழருக்கு ஐக்கியநாடுகள் சபையின் தீர்மானங்கள் இதுவரை வழங்கியது என்ன?

372

 

இலங்கை அரசானது தனது சொந்த மக்களான தமிழர்கள் மீதும், சிங்களவர்கள் மீதும் இரண்டாம் உலகப் போருக்குப் பின்னரான காலத்தில் மிகவும் கொடூரமான கொலைகளைப் புரிந்திருக்கிறது. இதன் உச்சகட்டமே 2009 மே மாதம் தமிழர்கள் மீது அது நடத்திய படுகொலைகள். இப்போரில் குறைந்தது 146,679 தமிழர்கள் காணாமற்போயும், 90,000 போர் விதவைகள உருவாகியும், 25,000 போர் அநாதைகள் உருவாக்கப்பட்டும், 160,000 வீடுகள் முற்றாக அழிக்கப்பட்டும் இருப்பதோடு, தமிழர்களின் தாயகமான 18,000 சதுரக் கிலோமீட்டர் நிலத்தில் குறைந்தது 8,000 சதுரக் கிலோமீட்டர் பரப்பளவு சிங்கள ராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்டிருப்பதாகவும் ஐக்கிய நாடுகள் சபையின் புள்ளிவிபரங்கள் கூறுகின்றன.

ஐக்கிய நாடுகள் சபையினால் உருவாக்கப்பட்ட மூவர் அடங்கிய நீதிபதிகள் குழு இறுதி யுத்தத்தில் குறைந்தது 40,000 தமிழர்களாவது கொல்லப்பட்டிருக்கலாம் என்று கணிப்பிட்டிருக்கிறது. அதேவேளை ஐக்கிய நாடுகள் சபையின் வல்லுனரான சார்ள்ஸ் பெட்ரியின் கருத்துப்படி இவ்வெண்ணிக்கை குறைந்தது 70,000 ஆவது இருக்கும் என்று மதிப்பிடப்பட்டிருக்கிறது. இலங்கையின் வடக்கு மாகாணமே உலகில் மிகவும் ராணுவ மயப்படுத்தப்பட்ட பிரதேசம் என்று கணிக்கப்பட்டிருப்பதோடு, யுத்தம் முடிந்த இத்தனை ஆண்டுகள் கடந்த நிலையிலும் கூட நிலைமை அப்படியே தான் இருக்கிறது.

ஆயிரக்கணக்கான தமிழர்கள் இன்றுவரை தமது வாழ்விடங்காளிலிருந்து இடம்பெயர்ந்து வேறு இடங்களில் அடைக்கலம் புகுந்திருக்கிறார்கள். இன்னும் பல நூற்றுக்கணக்கான அப்பாவிகள் காரணமின்றி சிறைகளில் வாடிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், இப்படியான நிரூபிக்கப்பட்ட சாட்சியங்களும், தமிழர்களின் அவலமும் உலகின் கண்களுக்குத் தெரிவதில்லை. ஏனென்றால், இந்தத்தமிழர்களைக் கொண்டு தமக்கு அரசியல் ரீதியிலான எந்த நண்மையையும் பெற்றுவிட முடியாதென்று அனைத்து நாடுகளும் இவர்களைக் கைகழுவி விட்டன.

தாயகத்திலும், புலம்பெயர்ந்து வாழும் சமூகங்களிலும் இருக்கும் தமிழர்களுக்கான ஒரே ஆறுதலான விடயம் ஐக்கிய நாடுகள் சபையின் மனிதவுரிமைக் கவுன்சில் இவர்களது ஆதங்கங்களைக் கையிலெடுத்து இவர்களுக்காக வாதாட முன்வந்ததுதான். அதுகூட, பல மனிதவுரிமை அமைப்புகளின் இடைவிடாத அழுத்தத்தின்மூலமே சாத்தியமாகியது என்பது உண்மை. ஐக்கிய நாடுகள் சபை உருவாக்கப்பட்டதே பாதிக்கப்படும் மக்களின் நலன்களைக் காப்பதற்காகத்தான். ஆனால், இன்றோ, அது இலங்கையாகட்டும், சிரியாவாகட்டும், தலையிடுவதுமில்லை, மக்களைக் காப்பதுமில்லை. அங்கத்துவ நாடுகளின் ஆள்புல ஒருமைப்பாட்டில் தலையிடுவதில்லை என்பதைக் காரணம் காட்டிக்கொண்டு அது வாளாவிருக்கிறது.

மனிதவுரிமைகளைக் கப்பதும், அப்பாவிகளைப் பாதுகாப்பதும் எவ்வாறு ஒரு நாட்டின் ஒருமைப்பாட்டைச் சிதைக்கும் என்று ஐக்கியநாடுகள் சபை இதுவரை தெளிவான பதில் எதையுமே தரவில்லை. நாட்டின் தேசிய பாதுகாப்பு என்கிற பெயரில் 99.99 வீதம் சிங்களவர்களைக் கொண்ட இலங்கை அரச ராணுவம் மிகக் கொடூரமான முறையில் தனது நாட்டின் ஒரு மக்கள் பிரிவின்மீது பாரிய போர்க்குற்றங்களை கட்டவிழ்த்துவிட்டிருக்கிறது.

2009 இலிருந்து இதுவரையில் நான்கு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன. அதில் முதலாவது பிரேரணை, உலகிலேயே முதன் முதலில் தீவிரவாதத்தை முற்றாக ஒழித்தமைக்காக இலங்கையைப் பாராட்டி கெளரவிக்கும் முகமாகக் கொண்டுவரப்பட்டது. இலங்கையில் மிக ஆளமாக காலூன்றியிருந்த சீனாவை அகற்றும் நோக்கிலேயே அமெரிக்கா இந்தியா ஆகிய நாடுகள் இலங்கை மீதான போர்க்குற்ற விசாரணைகளைத் தூக்கிப் பிடிக்கின்றன என்றும், அதனாலேயே இலங்கையில் ஆட்சிமாற்றம் ஒன்றினை ஏற்படுத்த முயன்றன என்றும் பரவலாகக் கணிக்கப்படுகிறது.

2012 மற்றும் 2013 ஆகிய வருடங்களில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் இலங்கை தனது விருப்பத்திற்கமைய விசாரணைகளை நடத்தலாம் என்று கூறுகிறது. அப்படி இலங்கை செயற்படத் தவறுமிடத்து, 2014 ஆம் ஆண்டின் தீர்மானம் ஐக்கிய நாடுகள் சபையின் மனிதவுரிமை கவுன்சில் தனது விசாரணை அமைப்பொன்றை நிறுவ முடியும் என்று பரிந்துரை செய்திருந்தது. ஆனால், இதன் தொடர்ச்சியாக நிறைவேற்றப்பட்டிருக்கவேண்டிய அடுத்த தீர்மானம் சுமார் 6 மாதங்களுக்குப் பிற்போடப்பட்டதுடன், புதிய ஜனாதிபதிக்கு அவகசாம் வழங்கவேண்டும் என்றும் கூறப்பட்டது. ஆனால், இன்றுவரை எந்தவிதமான விசாரணைகளையும் இலங்கை ஆரம்பிக்கவுமில்லை, அதுபற்றிப் பேசுவதுமில்லை.

2015 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் சபையின் விசாரணை அமைப்பு வெளியிட்ட அறிக்கையின்படி, தமக்கு இலங்கைக்குள் நுழையும் அனுமதி இதுவரை வழங்கப்படவில்லையென்றும், ஆட்சிமாற்றத்தின் பின்னரும் கூட இதே நிலைதான் என்றும் கூறுகிறது. சர்வதேச பிணக்குகள் அமைப்பு அண்மையில் வெளியிட்ட இலங்கை தொடர்பான அறிக்கையின்படி பின்வருமாறு சொல்லப்பட்டிருக்கிறது.

இலங்கையில் பல்லாயிரக்கணக்கான படுகொலைகள் மற்றும் காணாமல்ப் போதல்கள் நிகழ்ந்திருந்தாலும்கூட, நடத்தப்பட்ட அனைத்து விசாரணைகளும் தோல்வியிலேயே முடிந்துள்ளதாகவும், இதுவரையில் வெறும் 5 ராணுவ வீரர்கள் வரையிலேயே குற்றம்காணப்பட்டு தீர்ப்பு வழங்கப்பட்டிருப்பதாகவும் கூறுகிறது. மேலும், ராணுவத்தின் அதிகாரிகள் எவருமே இதுவரையில் நீதியின் முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்படவில்லை என்றும் அது கூறுகிறது. பாரிய படுகொலைகள், ஆட்கடத்தல்களில் ஈடுபட்ட ராணுவ அதிகாரிகள் மற்றும் வீரர்களுக்கு விசாரணைகளிலிருந்து முற்றான விலக்கும், அதிகாரிகளுக்கு பாதுகாப்பும் அரசினால் வழங்கப்பட்டிருப்பது தெளிவாகிறது. தமிழர்களின் தாயகத்தில் செயற்படும் ஊடகவியலாளர்கள் மற்றும் மனிதவுரிமைவாதிகள் தொடர்ச்சியாக ராணுவத்தினால் அச்சுருத்தப்பட்டும், சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டும் வருகிறார்கள். பாரிய படுகொலைகளைப் புரிந்த ராணுவ வீரர்களுக்கெதிராக பொலிஸாரினால் தாக்கல்செய்யப்பட்ட வழக்குகள் ராணுவத்தினால் கடுமையாக எதிர்க்கப்பட்டு கிடப்பில் போடப்பட்டுள்ளன. பாரளுமன்றத்தினால் தீர்மானிக்கப்பட்ட சாட்சிகளுக்கான பாதுகாப்பு எனும் திட்டத்தினை அமல்ப்படுத்துவதில் தொடர்ந்தும் இழுபறி நிலை காணப்பட்டு வருகிறது.

இலங்கை சர்வதேச மனிதவுரிமைச் சட்டங்களுக்கெதிராக இழைத்திருக்கும் மிகப்பாரிய அளவிலான போர்க்குற்றங்களையும், மனித குலத்திற்கெதிரான குற்றங்களையும் உள்நாட்டில் விசாரிப்பத்ற்கான சட்ட அமைப்புகளோ, வசதிகளோ இல்லாத நிலையில், ஐக்கிய நாடுகள் சபையின் அங்கத்துவ நாடென்கிற வகையில், சுதந்திரமான விசாரணை ஒன்றினை மேற்கொள்வது அவசியமாகிறது. ஆனாலும், 2015 ஆம் ஆண்டின் தீர்மானத்தின் நகலானது போர்க்குற்றம் என்பதையோ மனித குலத்திற்கெதிரான குற்றம் என்பதையோ குறிப்பிட மறுப்பதுடன், குற்றங்களின் வீரியத்தையும் வேண்டுமென்றே குறைத்து மதிப்பிடும் வகையில் அமைக்கப்பட்டிருக்கிறது.

நகல் தீர்மானம் வடிவமைக்கப்பட்டுள்ள விதத்தினைப் பார்க்கும்பொழுது, இலங்கையரசை எந்தவிதத்திலும் கோபப்படுத்தாத முறையில் , மிகவும் மென்மையான போக்குடன் அமெரிக்காவினால் இத்தீர்மான நகல் வடிவமைக்கப்பட்டிருப்பது அப்பட்டமாகத் தெரிகிறது. ஒருவகையில், இத்தீர்மானம் இலங்கையைக் குற்றம்சாட்டுவதைத் தவிர்த்து, உற்சாகப்படுத்தும் விதமாகவே வரையப்பட்டுள்ளதாக அவதானிகள் கருத்துத் தெரிவித்திருந்தனர்.

தனது நகல் தீர்மானத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளை கடுமையாக விமர்சித்திருந்த அதேவேளை, இடம்பெற்ற குற்றங்கள் தொடர்பாக இலங்கை செய்வதாக ஒப்புக்கொண்ட விசாரணைப் பொறிமுறையினை பெரிதும் வரவேற்றும் எழுதியிருந்தது.

இன்றிருக்கும் இலங்கை ஜனாதிபதியே போர்க்காலத்தில் பாதுகாப்பு ராஜாங்க அமைச்சரகா இருந்தார் என்பது மட்டுமல்லாமல், அவரை விசாரிக்கும் அதிகாரம் நாட்டில் வேறு எவருக்குமே இல்லையென்பது நாம் அறியாதது அல்ல. எந்தவித காலக் கெடுவும் இல்லாமல் வெறுமனே பாராட்டுகிறோம், வேண்டிக்கொள்கிறோம், என்று முடிக்கப்பட்ட இந்தத் தீர்மானத்தின்மூலம் தமிழருக்கு எந்தவிதமான நீதியும் கிடைக்கப்போவதில்லை என்பதே உண்மையாகும்,

விடுதலைப் புலிகளை கடுமையாகச் சாடும் அமெரிக்காவின் இந்த நகல், அரசாங்கத்தைப் பாராட்டுவதுடன், போர்க்கைதிகளாக பிடிக்கப்பட்ட சுமார் 18,000 விடுதலைப் புலி வீரர்களை விசாரணைகள் என்கிற பெயரில் இலங்கையரசு சித்திரவதைகள் செய்து தண்டித்துவருவதைப் பற்றி சிறிதளவேனும் நகலில் குறிப்பிடவில்லை.

விசாரணைகளிலிருந்து அரச அதிகாரிகளுக்கும், ராணுவ வீரர்களுக்குமான விலக்கு, பாரிய மனிதப் படுகுழிகள், வலுக்கட்டாயமாகக் காணாமலாக்கப்பட்டவர்கள், பாரிய சித்திரவதைகள், பாலியல் வன்கொடுமைகள், வெள்ளை வான் கடத்தல்கள், படுகொலைகள் என்கிற சரித்திரத்தைக் கொண்ட இலங்கையில், போர்க்குற்றங்களுக்கான சாட்சிகளின் பாதுகாப்பு எவ்வாறு அமைக்கப்படவேண்டும் என்பதுபற்றிய எந்தவித அழுத்தத்தையும் இந்த தீர்மானம் கொடுக்கவில்லை.

தமிழ் மக்களின் வாழ்விடங்களான சுமார் 67,000 ஏக்கர் நிலப்பரப்பில் வலுக்கட்டாயமாக ஆக்கிரமித்துக் குடியிருக்கும் சிங்கள ராணுவம் இதுவரையில் சுமார் 1,000 ஏக்கர்களை மட்டுமே மக்கள பாவனைக்கென்று மீள வழங்கியிருக்கிறது. உயர் பாதுகாப்பு வலயம் என்கிற போர்வையில் கடந்த 3 தசாப்த்தங்களாக ராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கும் தமிழர்களது வாழ்விடங்கள் மீளவும் தமிழர்களிடம் கையளிக்கப்படும் என்கிற எந்த உத்தரவாதமும் இதுவரைக்கும் வழங்கப்படவில்லை.

தீர்மானத்தின்படி, 2002 இலிருந்து 2012 வரையான காலப்பகுதியில் நடந்த போர்க்குற்றங்கள் பற்றி மட்டும்தான் விசாரிக்கப்படவேண்டும் என்று கூறப்படுவதன் மூலம், சிங்கள ராணுவத்தினால் 1983 ஆம் ஆண்டிலிருந்து 2002 வரையான காலப்பகுதியில் திட்டமிட்ட வகையில் தமிழர் மீது நடத்தப்பட்ட படுகொலைகளை விசாரிப்பதுபற்றி அதில் எதுவுமே சொல்லப்படவில்லை.

இனிமேல் கொண்டுவரப்படவிருக்கும் தீர்மானம் வக்களிப்பின்றி இலங்கையரசால் ஏற்றுக்கொள்ளப்படக்கூடிய வகையில் அமைக்கப்பட்டிருப்பதால், இனிவரும் 18 மாதங்களுக்கு எந்தவித அழுத்தங்களும் தமக்கு் இருக்கப்போவதில்லை என்று இலங்கை அரச மட்டம் கூறியிருக்கிறது. ஆனால், சிங்கள அரசினாலும் ராணுவத்தினாலும் அநியாயமாகக் கொல்லப்பட்ட அப்பாவிகளுக்கான நீதி 18 மாதங்க்களில் கிடைக்குமா என்பது சந்தேகம்தான்.

SHARE