.இலங்கைத் தேசியம் அல்லது சிங்களத் தேசியத்துக்குள் அனைத்து மக்களையும் உள்வாங்கிக் கொண்டு தமிழ்த் தேசியத்தையும் முஸ்லிம் தேசியத்தையும் இல்லாது அழித்து விடுவதே அவர்களின் நோக்கம்.

299

 

இராணுவ ரீதியாகத் தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தை அடக்கிய சிங்கள அரசு, இப்போது வரலாற்று ரீதியாக அவர்களை அடிமைப்படுத்தி, தமிழ்த் தேசியத்தைச் சிதைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது.
தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தின் ஆணிவேரே – வடக்கும் கிழக்கும் தமிழரின் மரபுவழித் தாயகம், தமிழர்கள் ஒரு தேசிய இனம், தமிழ் மக்களுக்கு தன்னாட்சி உரிமை உள்ளது ஆகிய விடயங்கள் தான்.
தமிழ் மக்களின் தாயகக் கோட்பாட்டைச் சிதைத்து, அவர்களின் தனித்துவமான தேசிய அடையாளங்களை அழிப்பதன் மூலம் தன்னாட்சி உரிமைக்கான எழுச்சியையும் கோரிக்கையையும் பலவீனப்படுத்துவது தான் சிங்களத்தின் நாசகாரத் திட்டம்.
தமிழீழ விடுதலைப் புலிகளை இராணுவ ரீதியாகத் சிதைத்துள்ள நிலையில் – எதிர்காலத்தில் புலிகளின் எச்சங்களே நாட்டில் இருக்காத வகையில் – சிங்களம் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
அடுத்த கட்டமாக ‘ஈழம் என்ற வார்த்தையையே இல்லாமல் செய்வதற்கு சிங்கள அரசாங்கம் குறிவைத்திருக்கிறது. ஈழம், தமிழ், முஸ்லிம் போன்ற வார்த்தைகளைக்கொண்ட கட்சிகளின் பெயர்களைத் தடைசெய்ய அரசாங்கம் முயற்சிப்பதாகத் தகவல்கள் வெளியாகின்றன.
இது எதிர்காலத்தில் ~ஈழம் என்ற பெயரிலோ, அல்லது தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தனித்துவமான கட்சிகள் – அமைப்புக்கள் இயங்குவதை, தோன்றுவதை முழுமையாகத் தடைசெய்ய எடுக்கப்படும் நடவடிக்கையாகும்.
தேர்தல் திணைக்களத்தின் ஊடாக அரசியல் கட்சிகளின் பெயர்களை மாற்றியமைக்கக் கொடுக்கப்படுகின்ற நிர்ப்பந்தமானது – தமிழ்த் தேசியத்தை அழிப்பதற்கு சிங்களத்தின் மீது அரசாங்கம் கொண்டிருக்கின்ற கரிசனையையே பிரதிபலிக்கின்றது. இதைச் செய்து விட்டால் நாட்டில் ஒருமைப்பாடு வந்து விடும், பிரிவினை ஏற்படாது என்று கருதுகிறது இலங்கை அரசு.
இந்தச் சட்டம் நடைமுறைக்கு வந்தால் தற்போது தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகள் எதுவுமே இப்போதைய பெயர்களில் இயங்க முடியாது. இனம் ஒன்றைப் பிரதிநிதித்துவம் செய்யும் அல்லது பிரதேசம் ஒன்றின் பிரதிநிதித்துவத்தை வெளிப்படுத்தும் வகையில் அரசியல் கட்சிகள் செயற்படக்கூடாதென்று அரசாங்கம் சட்டம் ஒன்றைக் கொண்டுவருவதன் மூலம் எந்தவகையிலும் ஒருமைப்பாட்டை ஏற்படுத்திவிட முடியாது.
கட்டாயமாக – நிர்ப்பந்தத்தின் பேரில் செய்யப்படும் இத்தகைய எந்த நடவடிக்கையுமே சிறுபான்மை மக்களிடத்தில் இன்னும் அதிகமான வெறுப்பையும் பிரிந்து போகும் எண்ணத்தையுமே ஏற்படுத்தும்.சிங்களம் மட்டும் ஆட்சிமொழி என்ற சட்டத்தைக் கொண்டுவந்தது எத்தகைய நிலையை ஏற்படுத்தியது என்பதை இலங்கை அரசு இன்னமும் புரிந்து கொள்ளவில்லைப் போலும். ஆனால், சிங்கள அரசின் நோக்கம் பிரிவினையைத் தடுப்பதோ ஒருமைப்பாட்டைப் பேணுவதோ அல்ல.அதன் ஒரே நோக்கம் சிங்களத் தேசியத்துக்குள் அனைத்து இனங்களையும், அனைத்து மொழி பேசும் மக்களையும் உள்வாங்கிக் கொள்வது தான்.
பயங்கரவாதம் என்ற போர்வையில் தமிழர்களின் காப்பரணான விடுதலைப் புலிகளை வெற்றிகொண்ட பின்னர் நடத்திய விழாவில் பேசிய மகிந்த ராஜபக்ஸ – இனிமேல் நாட்டில் சிறுபான்மை இனங்கள் என்று எதுவுமில்லை என்று கூறியிருந்ததை மறந்து விடக்கூடாது.அதாவது அனைத்து இனங்களையும் சிங்களத்துக்குள் உள்வாங்கிக் கொள்வது தான் அவரது திட்டம். இது சாத்தியமானால் – தமிழ்த் தேசியமே இல்லாமல் போய், அனைவரும் சிங்களத் தேசியத்துக்குள் சிக்கிக் கொள்ள நேரிடும். இப்படியான நிலையில் இருந்து தனித்துவமான வகையில் தமிழ்த் தேசிய இனத்தால் போராட்டங்களை முன்னெடுக்க முடியாத நிலை ஏற்படும்.இலங்கைத் தேசியம் அல்லது சிங்களத் தேசியத்துக்குள் அனைத்து மக்களையும் உள்வாங்கிக் கொண்டு தமிழ்த் தேசியத்தையும் முஸ்லிம் தேசியத்தையும் இல்லாது அழித்து விடுவதே அவர்களின் நோக்கம்.
இது வெறுமனே மகிந்தவின் கனவு மட்டுமல்ல. ஐ.தே.க.வின் எண்ணமும் கூட. போர் முடிந்த சில நாட்களின் பின்னர் ஐ.தே.க.வின் தரப்பில் இருந்து இது போன்றதொரு கருத்து முன்வைக்கப்பட்டிருந்ததை மறந்துவிட முடியாது. ஈழம் என்பது அரசியல் ரீதியாகத் தோற்கடிக்கப்படவில்லை. இன்னமும் ஈழம் என்ற பெயரில் அரசியல் கட்சிகள் இயங்குகின்றன. அனைத்துத் தமிழ்க் கட்சிகளினது பெயர்களிலும் ஈழம் என்பது இருக்கிறது. எனவே, ஈழம் என்பதை அரசியல் ரீதியாகவும் தோற்கடிக்க வேண்டும் என்று கூறியிருந்தது ஐ.தே.க.இது, இலங்கையின் இரு பெரும் சிங்களக் கட்சிகளினதும் பேரினவாதச் சிந்தனைகள் ஒன்றுபட்டிருப்பதை வெளிப்படுத்தும் விடயமாகும்.
தமிழ்த் தேசியத்தைச் சிதைத்து சிங்களத் தேசியத்துக்குள் தமிழ் மக்களின் வாழ்வை அடிமைப்படுத்துவதே சிங்களத்தின் திட்டம்.
புலிகள் இயக்கத்தில் இருந்து கருணா பிரிந்து சென்று தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியை உருவாக்கினார். ஆனால், பின்னர் கருணாவைத் தனித்து இயங்க சிங்களத் தேசியம் விடவில்லை. வளைத்துப் போட்டு சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்குள் உள்வாங்கிக் கொண்டது. பிள்ளையான் தலைமையிலான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பெயரை மாற்றும்படி மகிந்தவும் அவரது சகோதரர்களும் கருணாவும் பெரும் நெருக்கடிகளைக் கொடுத்தனர்.ஆனால், அது சாத்தியமற்றதாகிப் போக, அந்தக் கட்சியையே இல்லாதொழிக்கும் வகையில் ஒவ்வொருவராக சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்குள் கொண்டு வரும் இரகசிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இந்த நடவடிக்கைகளின் இறுதிக் கட்டத்தில் பிள்ளையானும் சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்குள் உள்வாங்கப்படுவார். இது தான் சிங்களத் தேசியத்தின் சதி.கிழக்கில் மோசடிகளின் மூலமும், கிழக்கைப் பிரதிநிதித்துவம் செய்வதாகக் கூறிக்கொண்ட கட்சிகளின் முதுகில் சவாரி செய்தும் சிறிலங்கா சுதந்திரக் கட்சி ஆட்சியைப் பிடித்தது. வெற்றிலையின் கீழ் பிராந்தியக் கட்சிகளைப் போட்டியிட வைத்து கிழக்கில் வெற்றி பெற்றது போன்று – வடக்கிலும் அழுத்தங்களைக் கொடுத்து தமிழ்க் கட்சிகளை அதேபோன்று போட்டியிட வைத்திருக்கிறார் மகிந்த ராஜபக்ஸ.அரசாங்கத்தின் நிர்ப்பந்தங்களால், வடக்கில் ஈ.பி.டி.பி., சிறி ரெலோ, ஈரோஸ் போன்ற கட்சிகள் வெற்றிலைச் சின்னத்துக்குள் உள்வாங்கப்பட்டிருக்கின்றன. இந்தத் தேர்தலில் எப்படியாவது வெற்றிலையை வெற்றி பெறவைத்து தமிழ்த் தேசியம் சிதைக்கப்பட்டு விட்டது – சிங்களத் தேசியமே வடக்கிலும் கிழக்கிலும் ஆதிக்கம் செலுத்துகிறது என்பதை சிங்கள மக்களுக்கும், வெளியுலகுக்கும் பிரகடனம் செய்வது தான் மகிந்தவின் திட்டம்.வடக்கே பருத்தித்துறை தொடக்கம் தெற்கே தெய்வேந்திர முனை வரைக்கும் ஒரே கொடி – சிங்கக்கொடி தான் பறக்கிறது என்று கூறிப் பெருமைப்பட்ட சிங்களத்தின் அடுத்தகட்ட நடவடிக்கையே இது.வடக்கில் யாழ்ப்பாணத்தில் இருந்து தெற்கே தங்காலை வரைக்கும் சிறிலங்கா சுதந்திரக் கட்சி தான் ஆட்சி செய்கிறது என்ற சிங்களத் தேசியத்தை உசுப்பிவிடும் முயற்சியில் இறங்கியிருக்கிறது மகிந்தவின் அரசு. சிங்களத் தேசியத்தின் இந்த இரகசியச் சதிக்கு தமிழ் அரசியல் சக்திகள், ஊடகங்கள் பலவும் பலியாகிக் கொண்டிருப்பது தான் வேதனையான விடயம்.
தமிழீழ விடுதலைப் புலிகள் இராணுவ ரீதியாகப் பலமமாக இருக்கும் வரைக்கும் அவர்களோடு இருந்து – அவர்களின் பின்னணியில் இயங்கிய இந்தச் சக்திகள் இப்போது சிங்களத் தேசியத்துக்கு வால் பிடிக்க முற்படுவது தான் வேடிக்கை.வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் அவசரகாலச் சட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவிக்காமல் இருந்திருக்கிறார். காரணம் கேட்டால், இடம்பெயர்ந்த வன்னி மக்களை குடியமர்த்த அரசின் உதவி தேவையாம். அதற்காகவே எதிர்க்கவில்லை என்று சப்பை நியாயம் சொல்கிறார்.அவசரகாலச் சட்டத்தைப் பயன்படுத்தித் தான் இலங்கை அரசு மூன்று இலட்சம் மக்களையும் ஆடு, மாடுகளைப் பட்டியில் அடைப்பது போன்று – முகாம்களுக்குள் அடைத்து வைத்திருக்கிறது என்பது அவருக்குத் தெரியாதா என்ன?இதே அவசரகாலச் சட்டம் தான் இடம்பெயர்ந்த மக்களின் மீள்குடியமர்வுக்குத் தடையாக இருக்கிறதென்று புரியாதா என்ன?ஆனாலும் இப்படியொரு நியாயத்தைச் சொல்லித் தப்பிக்க முனைகிறார் என்றால் தமிழ்த் தேசியம் தூங்கிக் கொண்டிருக்கிறது என்று நினைத்துக் கொண்டிருக்கிறாரா அவர்?
அதைவிட மோசமானது – தந்தை செல்வாவும், பிரபாகரனும் தமிழ்த் தேசியத்துக்காகப் போராடி தோற்றுப் போனவர்களாம் – இனியும் தமிழ்த் தேசியம் பேசிப் பயனில்லை என்று கொச்சைப்படுத்துகிறார்.அரசுக்குக் கால் பிடிப்பதும் வால் பிடிப்பதும் தான் தமிழ் மக்களைப் பாதுகாக்கும் என்று புதிய வழிகாட்ட முனையும் இவர்களெல்லாம் எப்படித் தலையெடுத்தார்கள் என்று ஒருமுறை திரும்பிப் பார்க்கட்டும்.
அதைவிட தமிழ்த் தேசியத்துக்காகப் போராடி மடிந்தவர்கள் எல்லாம் மடையர்கள் போன்று குறிப்பிடும் அவர் ஒரு முறை சிங்களத் தேசியத்துக்கு கால் பிடித்து விட்டவர்களால் என்னத்தைக் கிழிக்க முடிந்ததென்று ஒரு கணம் நினைத்துப் பார்க்கட்டும்.
சிங்களத்துக்குக் கால் பிடிப்பவர்களால் – ஒரே ஒரு நிமிடம் மட்டும், அகதி முகாம்களுக்குள் அடைபட்டுக் கிடக்கும் மக்களை வெளியே கொண்டுவந்துவிட முடியுமா?அதையே செய்ய முடியாதவர்கள் – தமிழ்த் தேசியத்தைக் கொச்சைப்படுத்திக்கொண்டு – அரசுக்குப் பின்னால் நிற்கப் போகிறார்களாம். கூரையில் ஏறியே கோழி பிடிக்க முடியாதவர்கள் வானத்தில் ஏறி வைகுண்டம் போகப் போகிறார்களாம். இவர்களையெல்லாம் தமிழ்த் தேசியத்தின் பிரதிநிதிகளாக நாடாளுமன்றத்துக்கு தெரிவு செய்ததற்காக யாரை நோக முடியும்?
சிங்களத் தேசியத்துக்குள் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களை உள்வாங்கிக்கொண்டு தமிழ்த் தேசியத்தைச் சிதைக்கின்ற சதி இப்போது உச்சகட்டமாக நடந்து கொண்டிருக்கிறது.வடக்கில் கைப்பற்றப்பட்ட பிரதேசங்களில் சிங்களக் குடியேற்றங்களை நிறுவ வேண்டும் என்ற கோரிக்கைகள் தெற்கில் வலுப்பெறுகின்றன. கலப்புக் கிராமங்களை உருவாக்க வேண்டும் என்று கேட்கிறார்கள் சிங்களத்தின் காவலர்கள்.வடக்கில் மீள்குடியமர்வுக்கு முன்னதாக அங்கு சிங்கள மக்கள் வாழ்ந்ததற்கான தடயங்களை கண்டறியும் புதைபொருள் ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட வேண்டும் என்கிறார்கள். இவையெல்லாம் வடக்கும் கிழக்கும் தமிழ் மக்களின் மரபுவழித் தாயகம் அல்ல என்று காண்பிக்க மேற்கொள்ளப்படும் முயற்சிகளே.முப்பதாண்டுப் போரின் பின்பாதிக் காலத்தில் தமிழ் மக்களின் பலம்மிக்க தலைமைச் சக்தியாக விளங்கும் விடுதலைப் புலிகளின் ஆதிக்கம் அதிகமாக இருந்ததால் தமிழ்த் தேசியத்தை வரலாற்று ரீதியாக அழிக்கின்ற முயற்சிகள் எதுவும் கைகூடவில்லை.இந்த இடைவெளியை நிரப்பி சிங்களத் தேசியமே இலங்கைத்தீவு முழுவதும் ஆதிக்கம் செலுத்தியது என்று உறுதி செய்யும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இந்தக் கட்டத்தில் தமிழ்த் தேசியம் சற்று உறங்கிப் போனாலும் அதை விழுங்கி ஏப்பம் விட்டுக்கொண்டு போய்விடும் சிங்களம்.இதனைத் தடுப்பதற்கு தமிழ் மக்கள் அனைவரும் ஒரே குரலாக ஒலிப்பது அவசியம். எம்மிடையே உள்ள வேறுபாடுகள் பலவீனங்களைக் களைந்து ஒரே குரலாக ஒலிப்பது தான் தமிழ்த் தேசியத்தை காப்பாற்ற தமிழீழத் தேசியத்துக்காகப் போராடிய, களமாடிய மாவீர்களின் கனவுக்கு கொடுக்கும் மரியாதையாக அமையும்.
SHARE