புலம்பெயர்வோர், புகலிடக்கோரிக்கையாளர்களால் அதிகம் விரும்பப்படும் நாடாக இருந்த கனடாவின் போக்கு முற்றிலுமாக மாறி வருகிறது.
தினமும் புலம்பெயர்ந்தோருக்கு எதிரான ஏதாவது ஒரு அறிவிப்பை வெளியிட்டுக்கொண்டே இருக்கிறது கனடா. சர்வதேச மாணவர்களுக்கு எதிரான நடவடிக்கைகளைத் தொடர்ந்து, கனடாவுக்கு திடீரென பிரெஞ்சு மொழி மீதான ஆர்வம் அதிகரித்துள்ளது.
இந்நிலையில், இந்தியர்களுக்கெதிரான கனடாவின் நடவடிக்கைகளால் கனடா மீதான மோகம் இந்தியர்களுக்குக் குறையத் துவங்கியுள்ளது. சமீபத்தில், கனடாவிலிருந்து இந்தியாவுக்குத் திரும்ப விரும்பும் இந்தியர்கள் குறித்த ஒரு செய்தி வெளியானது நினைவிருக்கலாம்.
என்ன சொன்னாலும், கனடாவின் பொருளாதாரத்துக்கு புலம்பெயர்ந்தோர் வேண்டும் என்பதை யாரும் மறுக்கமுடியாது. ஆகவே, இப்போது பிரெஞ்சு மொழி பேசும் திறன்மிகுப் பணியாளர்களை ஈர்க்கும் முயற்சியில் இறங்கியுள்ளது கனடா.
இந்நிலையில், தாய் எட்டடி பாய்ந்தால் குட்டி பதினாறடி பாயும் என்பதுபோல, கனடா பெடரல் அரசு ஒரு பக்கம் புலம்பெயர்ந்தோருக்கு எதிராக நடவடிக்கைகள் எடுத்துவரும் நிலையில், கனேடிய மாகாணமொன்றின் புலம்பெயர்தல் அமைச்சர், இனி எங்களுக்கு பிரெஞ்சு மொழி பேசாதவர்கள் வேண்டாம் என்ற ரீதியில் பேசப்போக, அங்கு புதிதாக ஒரு சர்ச்சை துவங்கியுள்ளது.
கனடாவின் கியூபெக் மாகாணம் பிரெஞ்சு மொழியை அதிகாரப்பூர்வ மொழியாகக் கொண்ட மாகாணமாகும். அங்கு வாழ்வோரில் பெரும்பான்மையோர் பிரெஞ்சு மொழி பேசுவோர். இந்நிலையில், கியூபெக்கின் பிரெஞ்சு மொழி ஆணையரான Benoît Dubreuil, பிரெஞ்சு மொழி பேசாத புகலிடக்கோரிக்கையாளர்கள், வேறு எங்காவது செல்லட்டும் என்று சமீபத்தில் கூறியிருந்தார். அதாவது, வேறு ஏதாவது ஒரு கனேடிய மாகாணத்துக்குச் செல்லட்டும் என்று அவர் கூறியிருந்தார்.
Benoît Dubreuilஇன் கருத்துக்கு உடனடியாக எதிர்ப்பு கிளம்பியது. எதிர்க்கட்சியினர் மட்டுமின்றி புலம்பெயர்தல் ஆதரவு விமர்சகர்களும் அவரது கருத்தை கடுமையாக விமர்சித்தனர். உடனடியாக அந்தர்பல்டி அடித்த Benoît Dubreuil, தான் பிரெஞ்சு மொழி பேசாத புகலிடக்கோரிக்கையாளர்களை கட்டாயப்படுத்தி வேறு எந்த மாகாணத்துக்காவது அனுப்பும்படி பரிந்துரைக்கவில்லை என நேற்று விளக்கமளித்தார். அவர்களாக தானாக வேறு மாகாணங்களுக்குச் செல்ல முன்வந்தால் மட்டுமே அப்படிச் செய்யலாம் என்று தற்போது கூறியுள்ளார் அவர்.
அதேபோல, கியூபெக்கின் புலம்பெயர்தல் துறை அமைச்சரான Christine Fréchetteம், தற்காலிகப் பணியாளர்கள் மற்றும் நிரந்தரக் குடியிருப்பு அனுமதி பெறாதவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவருவது வியப்பூட்டுவதாக உள்ளதாகவும், அவர்களுடைய எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருவதாகவும், அதைக் குறைக்கவேண்டும் என்றும், அதனால்தான், நாங்கள் புகலிடக்கோரிக்கையாளர்கள் தொடர்பில் நடவடிக்கை எடுக்குமாறு பெடரல் அரசைக் கேட்டுக்கொள்வதாகவும் தெரிவித்தார்.
மேலும், கியூபெக்கின் பிரெஞ்சு மொழி ஆணையரான Benoît Dubreuilஐப் போலவே, அவரும், அப்படி பிரெஞ்சு மொழி பேசாத புகலிடக்கோரிக்கையாளர்களை வெளியேற்றுவது முற்றிலும் அவர்கள் விரும்பிச் செய்யும் செயலாக இருக்கவேண்டும் என்றும், அவர்கள் கனடாவின் வேறு ஏதாவது ஒரு மாகாணத்துக்குச் செல்வதை ஏற்றுக்கொள்ளவேண்டும் என்றும் கூறியுள்ளார்.