அமெரிக்க அதிபர் வேட்பாளர் போட்டியில் சொந்த ஊரான தெற்கு கரோலினாவில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நிக்கி ஹேலி தோல்வியடைந்தார்.
இவ்வாண்டு அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது.
இந்தத் தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பில் அதிபர் வேட்பாளரைத் தேர்ந்தெடுக்க போட்டி நடைபெற்று வருகிறது.
இதில் நிக்கி ஹேலியின் சொந்த ஊரான தெற்கு கரோலினாவில் அவருக்கும், அந்நாட்டின் முன்னாள் அதிபர் டிரம்புக்கும் இடையே கடந்த சனிக்கிழமை போட்டி நடைபெற்றது.
இந்தப் போட்டியில் ஹேலியைவிட சுமார் 20 சதவீத புள்ளிகள் கூடுதலாகப் பெற்று டிரம்ப் வெற்றி பெற்றார்.
ஏற்கெனவே அந்நாட்டில் உள்ள ஐயோவா, நியூ ஹேம்ப்ஷைர், நெவாடா மாகாணங்கள் மற்றும் யுஎஸ் வர்ஜின் தீவுகளில் டிரம்ப் வெற்றி பெற்ற நிலையில், தற்போது மேலும் ஓரிடத்தில் அவர் வெற்றி பெற்றுள்ளார்.
இது அதிபர் வேட்பாளர் போட்டியில் இருந்து நிக்கி ஹேலி விலகுவதற்கான அழுத்தத்தை அதிகரித்துள்ளது.
எனினும் தான் போட்டியில் நீடிப்பேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.
அதிபராக டிரம்ப் பதவி வகித்தபோது ஐ.நா.வுக்கான அமெரிக்க தூதராக பொறுப்பு வகித்த நிக்கி ஹேலி, கடந்த 2011 முதல் 2017ஆம் ஆண்டு வரை தெற்கு கரோலினா ஆளுநராகப் பதவி வகித்தார்.