காஸா பேச்சுவார்த்தை தொடர்பான பேச்சுவார்த்தை நீடிப்பு

82

 

காஸாவில் போர் நிறுத்தம் மேற்கொள்ளவும், ஹமாஸிடம் உள்ள பிணைக் கைதிகள் விடுவிக்கப்படுவதற்கும் எகிப்து தலைநகர் கெய்ரோவில் நடைபெற்று வந்த பேச்சுவார்த்தை மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

முஸ்லிம்களின் புனித மாதமான ரமலான் அடுத்த வாரம் தொடங்குகிறது.

அதற்கு முன்னதாக, காஸாவில் இஸ்ரேலுக்கும், ஹமாஸ் அமைப்புக்கும் இடையே நடைபெற்று வரும் போரை நிறுத்தி வைக்கவும், போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் அளிப்பது, ஹமாஸ் அமைப்பினரால் பிணைக் கைதிகளாகக் கடத்திச் செல்லப்பட்டவர்கள் விடுவிக்கப்படுவது ஆகியவை தொடர்பாக கெய்ரோவில் கடந்த 2 நாள்களாக பேச்சுவார்த்தை நடைபெற்றது.

எனினும், பேச்சுவார்த்தையின் இறுதிநாளான செவ்வாய்க்கிழமையும் இரு தரப்பினருக்கும் இடையே குறிப்பிடத்தக்க உடன்பாடு எட்டப்படவில்லை.

அதையடுத்து, பேச்சுவார்த்தையை நீட்டிக்கும் வகையில் கெய்ரோவில் தங்கியிருக்க ஹமாஸ் பிரதிநிதிகள் ஒப்புக்கொண்டுள்ளனர்.

ரமலான் தொடங்குவதற்கு முன்னர் போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்படுத்தப்படவேண்டும் என்ற சூழலில், அதற்கான கடைசி நேர முயற்சியாக இந்தப் பேச்சுவார்த்தை நீட்டிப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேலுக்குள் தரை, வான், கடல் வழியாக ஹமாஸ் படையினர் கடந்த (07.10.2023) ஆம் திகதி நுழைந்து 1,200-க்கும் மேற்பட்டவர்களை படுகொலை செய்தனர்.

அத்துடன் சுமார் 240 பேரை அங்கிருந்து அவர்கள் பிணைக் கைதிகளாகக் கடத்திச் சென்றனர்.

அதையடுத்து, ஹமாஸ் அமைப்பினரை முற்றிலும் ஒழித்துக் கட்டப்போவதாக சூளுரைத்த இஸ்ரேல், காஸாவில் வான்வழியாகவும், தரைவழியாகவும் தீவிர தாக்குதல் நடத்தி வருகிறது.

இந்த நிலையில், சர்வதேச முயற்சியின் பலனாக இஸ்ரேல்-ஹமாஸ் இடையே கடந்த ஆண்டு நவம்பர் மாதம் மேற்கொள்ளப்பட்ட 7 நாள் போர் நிறுத்தத்தின்போது இஸ்ரேல் சிறைகளில் இருந்து 240 பாலஸ்தீன கைதிகள் விடுவிக்கப்பட்டனர்.

அவர்களுக்குப் பதிலாக இஸ்ரேலில் இருந்து பிணைக் கைதிகளாகக் கடத்திச் செல்லப்பட்ட 105 பேரை ஹமாஸ் அமைப்பு விடுவித்தது.

எனினும், போர் நிறுத்தத்தை மேலும் நீட்டிப்பதற்கான பேச்சுவார்த்தை முறிந்ததைத் தொடர்ந்து காஸா மீதான தாக்குதலை இஸ்ரேல் மீண்டும் தொடங்கியது.

4 30,631 காஸா சிட்டி, மார்ச் 5: காஸாவில் இஸ்ரேல் சுமார் 5 மாதங்களாக நடத்திவரும் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 30,631-ஆக அதிகரித்துள்ளது.

இது குறித்து காஸா சுகாதாரத் துறை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:

காஸாவில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 97 பேர் உயிரிழந்தனர்;

123 பேர் காயமடைந்தனர். இத்துடன், இந்தப் பகுதியில் கடந்த (07.10.2023) முதல் இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 30,631-ஆக அதிகரித்துள்ளது.

இஸ்ரேல் குண்டுவீச்சில் இதுவரை 72,043 பேர் காயமடைந்துள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

SHARE