இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை 4-1 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியது.
அஸ்வின் அபார பந்துவீச்சு
தரம்சாலாவில் நடந்த 5வது டெஸ்டில், இந்திய அணி முதல் இன்னிங்சில் 477 ஓட்டங்கள் குவித்தது.
அதன் பின்னர் இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்சை தொடங்கியது. முதல் 3 விக்கெட்டுகளை அஸ்வின் கைப்பற்றினார்.
அடுத்து கைகோர்த்த ஜோ ரூட் மற்றும் பேர்ஸ்டோவ் கூட்டணி 56 ஓட்டங்கள் சேர்த்தது. பேர்ஸ்டோவ் 39 ஓட்டங்களில் குல்தீப் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
அதனைத் தொடர்ந்து களமிறங்கிய பென் ஸ்டோக்ஸ் 2 ஓட்டங்களிலும், பென் ஃபோக்ஸ் 8 ஓட்டங்களிலும் அஸ்வின் ஓவரில் போல்டாகி வெளியேறினர்.
ஜோ ரூட் அரைசதம்
மறுமுனையில் நங்கூர ஆட்டம் ஆடிய ஜோ ரூட் (Joe Root) 61வது அரைசதத்தை விளாசினார். பும்ரா பந்துவீச்சில் ஹார்ட்லே (20), மார்க் வுட் (0) ஆட்டமிழக்க, பஷீர் 13 ஓட்டங்களில் ஜடேஜா பந்துவீச்சில் அவுட் ஆனார்.
இறுதிவரை போராடிய ரூட் 84 ஓட்டங்களில் குல்தீப் பந்துவீச்சில் கடைசி விக்கெட்டாக அவுட் ஆக, இங்கிலாந்து அணி 195 ஓட்டங்களுக்கு சுருண்டது.
இதன்மூலம் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 64 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அத்துடன் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 4-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.
யஷஸ்வி ஜெய்ஸ்வால் தொடர் நாயகன் விருதையும், குல்தீப் யாதவ் ஆட்டநாயகன் விருதையும் வென்றனர்.