வங்கதேசத்தை அதன் சொந்த மண்ணிலேயே வீழ்த்தி தொடரை கைப்பற்றிய இலங்கை! துஷாரா ஹாட்ரிக் சாதனை

102

 

வங்கதேசத்திற்கு எதிரான டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் இலங்கை அணி கைப்பற்றியது.

குசால் மெண்டிஸ் 86
சில்ஹெட்டில் இலங்கை மற்றும் வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான கடைசி டி20 போட்டி நடந்தது.

முதலில் துடுப்பாடிய இலங்கை அணி 174 ஓட்டங்கள் குவித்தது. அதிகபட்சமாக குசால் மெண்டிஸ் 86 ஓட்டங்கள் விளாசினார்.

பின்னர் களமிறங்கிய வங்கதேச அணியில், லித்தன் தாஸ் 7 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். அடுத்து ஷாண்டோ (1), ஹிரிடோய் (0) மற்றும் மஹ்மதுல்லா (0) ஆகியோர் அடுத்தடுத்த பந்துகளில் துஷாராவின் ஒரே ஓவரில் ஆட்டமிழந்தனர்.

ரிஷாட் ஹொசைன்
சவுமியா சர்க்கார் 11 ஓட்டங்களிலும், ஜாகேர் அலி 4 ஓட்டங்களிலும் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். இதனால் வங்கதேச அணி 32 ஓட்டங்கள் எடுப்பதற்குள் 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

அப்போது அதிரடியில் மிரட்டிய ரிஷாட் ஹொசைன், டஸ்கின் அகமது அணியை மீட்க போராடினர். அரைசதம் விளாசிய ரிஷாட் ஹொசைன் 53 (30) ஓட்டங்கள் எடுத்தபோது தீக்ஷனா ஓவரில் அவுட் ஆனார்.

அதன் பின்னர் ஷோரிபுல் இஸ்லாமை 4 ஓட்டங்களில் நுவன் துஷாரா வெளியேற்றினார்.

நுவன் துஷாரா சாதனை
இதன்மூலம் டி20யில் ஒரே போட்டியில் 5 விக்கெட்டுகள் வீழ்த்திய 4வது பந்துவீச்சாளர் என்ற பெருமையைப் பெற்றார்.

அதேபோல் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்திய 5வது இலங்கை பந்துவீச்சாளர் என்ற சாதனையையும் நுவன் துஷாரா (Nuwan Thushara) படைத்தார்.

கடைசி விக்கெட்டாக டஸ்கின் அகமது 31 ஓட்டங்களில் ஆட்டமிழக்க, வங்கதேச அணி 19.4 ஓவரில் 146 ஓட்டங்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதன்மூலம் 28 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இலங்கை அணி, 2-1 என்ற கணக்கில் டி20 தொடரை கைப்பற்றியது.

தொடர் நாயகன் விருதை 86 ஓட்டங்கள் விளாசிய குசால் மெண்டிஸும், ஆட்டநாயகன் விருதை நுவன் துஷாராவும் பெற்றனர்.

SHARE