நைஜீரியா நாட்டில், ‘போகோ ஹரம்’ என்ற இஸ்லாமிய பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட, 300 பள்ளி மாணவியரை தேடும் பணிக்கு, அமெரிக்க ராணுவ வீரர்கள், 80 பேரை, அதிபர் ஒபாமா அனுப்பி வைத்துள்ளார்.
மாணவியர் மீட்கப்படும் வரை, அமெரிக்க அதிரடிப்படை வீரர்கள், அங்கேயே தங்கியிருப்பர் என, அறிவிக்கப்பட்டுள்ளது. ஆப்ரிக்க நாடுகளில் ஒன்று, நைஜீரியா. தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு இருந்த போதிலும், துப்பாக்கி ஏந்திய ஆயுதக்கும்பல்கள் ஆதிக்கம் செலுத்தும் அந்நாட்டில், போகோ ஹரம் என்ற இஸ்லாமிய பயங்கரவாத குழு, கடந்த சில ஆண்டுகளாக பிரபலம் அடைந்து வருகிறது.
மாயம்:
அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் கலாசாரம், பண்பாடு, மொழி, பழக்க வழக்கங்களை, ஆப்ரிக்க மக்கள் பின்பற்றக் கூடாது’ என, வலியுறுத்தி வரும், அந்த பயங்கரவாத அமைப்பு, கடந்த மாதம், நைஜீரியாவின் கிராமம் ஒன்றில், வெளிநாட்டு கல்வி கற்பிக்கும் பள்ளியில் படிக்கும், 300 மாணவியரை கடத்திச் சென்றது, அந்த மாணவியர், மேற்கத்திய கலாசாரத்தை பின்பற்றுவது தங்கள் இனத்திற்கும், பாரம்பரியத்திற்கு எதிரானது என்பதால் கடத்தப்பட்டனர் என, அந்த பயங்கரவாதிகள் தெரிவித்து உள்ளனர். கடத்தப்பட்ட மாணவியர், என்ன ஆனார்கள், எங்கிருக்கின்றனர் என்ற விவரம் இதுவரை தெரியவில்லை. மாணவியரை விடுவிக்க வேண்டும் என, உலக நாடுகளின் தலைவர்கள் பலரும், போகோ ஹரம் பயங்கரவாதிகளை கேட்டுக் கொண்டுள்ளனர். எனினும், மாணவியரை இன்னமும் விடுவிக்காததால், சர்வதேச அளவில் இந்த பிரச்னை பூதாகரமாக வெடித்துள்ளது. இந்நிலையில், கடத்தப்பட்ட மாணவியரை கண்டுபிடிக்கவும், அவர்களை மீட்கவும், அமெரிக்க அதிரடிப்படை வீரர்கள், 80 பேரை, அதிபர் ஒபாமா அனுப்பி வைத்துள்ளார். நைஜீரியாவின் அண்டை நாடுகளில் ஒன்றான சாட் நாட்டிற்கு, அமெரிக்க வீரர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். மாணவியர் பத்திரமாக மீட்கப்படும் வரை, அமெரிக்க வீரர்கள் அங்கேயே இருப்பர்; அவர்கள் நைஜீரிய நிர்வாகம் மற்றும் பிற சர்வதேச நிர்வாகங்களுடன் இணைந்து, மாணவியரை மீட்கும் நடவடிக்கையில் இறங்குவர் என, அதிபர் ஒபாமா தெரிவித்துள்ளார்.
தடை:
இதற்கிடையே, ஐக்கிய நாடுகள் சபைக்கான நைஜீரிய நாட்டின் பெண் தூதர், ஜாய் ஓக்வு, ”அல் – கொய்தா பயங்கரவாதிகளுடன் இணைந்து, நைஜீரியாவில் பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டு வரும் போகோ ஹரம் பயங்கரவாத அமைப்பை தடை செய்து, ஐ.நா., உத்தரவிட வேண்டும்,” என, ஐ.நா.,வில் பேசினார். அவர் கோரிக்கை ஏற்கப்படும் என, தெரிகிறது.