எக்ஸ்-பிரஸ் பேர்ல் வழக்கு ; மனுவை நிராகரித்த சிங்கப்பூர் நீதிமன்றம்

79

 

எக்ஸ்-பிரஸ் பேர்ள் கப்பலினால் நாட்டிற்கு ஏற்பட்ட பாதிப்பிற்கு இழப்பீடு கோரி அரசாங்கத்தினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்யுமாறு கப்பல் நிறுவனத்தின் காப்பீட்டு முகவர்கள் முன்வைத்த மனுவை, சிங்கப்பூர் சர்வதேச வர்த்தக நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

எக்ஸ்-பிரஸ் பேர்ல் கப்பலில் ஏற்பட்ட தீப்பரவல் மற்றும் கப்பல் இலங்கை கடற்பரப்பிற்குள் மூழ்கியதால், இலங்கையின் கடல்சார் சுற்றுச்சூழல் ஏற்பட்ட பாதிப்பிற்கு இழப்பீடு வழங்குவதற்கு ஏற்கனவே பிரித்தானிய நீதிமன்றம் கால அவகாசம் வழங்கியிருந்தது.

இதன் காரணமாக குறித்த வழக்கை தள்ளுபடி செய்யுமாறு கப்பல் நிறுவனத்தின் காப்பீட்டு முகவர்கள் சிங்கப்பூர் நீதிமன்றத்தில் கோரியதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்தக் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் ஆட்சேபனைகளை தாக்கல் செய்வதற்கு காப்பீட்டு நிறுவனங்களுக்கு உத்தரவிட்டதுடன், எதிர்வரும் 24ஆம் திகதி வரை மீண்டும் கப்பல் நிறுவனத்திற்கு அவகாசம் வழங்கியுள்ளது.

இதன்படி, இந்த வழக்கு எதிர்வரும் ஜூலை மாதம் முதலாம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

இதனிடையே, எக்ஸ்-பிரஸ் பேர்ல் கப்பல் தீக்கிரையானதன் காரணமாக ஏற்பட்ட பாதிப்புகளுக்கு இழப்பீடு வழங்குவதற்காக விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளுக்கு எதிராக சட்டமா அதிபரினால் பிரித்தானிய உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஆட்சேபனை மனுக்களுக்கு எதிரான மனுக்களை தாக்கல் செய்ய கப்பல்நிறுவனத்தின் காப்பீட்டு முகவர்களுக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

இதன்படி, குறித்த காப்பீட்டு முகவர்களுக்கு எதிர்வரும் மே மாதம் 24 ஆம் திகதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக சட்டமா அதிபர் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதேநேரம், கப்பல் நிறுவனத்திடமிருந்து அரசாங்கம் பெறக்கூடிய இழப்பீட்டுத் தொகையை 19.5 மில்லியன் ஸ்டெர்லிங் பவுணாக வரையறுத்து பிரித்தானிய உயர் நீதிமன்றம் உத்தரவும் பிறப்பித்துள்ளது.

இந்த உத்தரவிற்கு எதிராக இலங்கை அரசாங்கம் கடந்த ஜனவரி மாதம் 29 ஆம் திகதி ஆட்சேபனைகளை தாக்கல் செய்திருந்த நிலையில் கப்பல் நிறுவனத்தின் காப்பீட்டு முகவர்கள் முன்வைத்த மனுவை, சிங்கப்பூர் சர்வதேச வர்த்தக நீதிமன்றம் நிராகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

SHARE