கடைசி வரை அனல் பறந்த ஆட்டம்! மும்பை இந்தியன்ஸை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு நுழைந்த RCB

89

 

டெல்லியில் நடந்த WPL தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 5 ஓட்டங்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தியது.

எல்லிஸ் பெர்ரி அரைசதம்
மகளிர் பிரீமியர் லீக் தொடரில் நேற்று நடந்த போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) மற்றும் மும்பை இந்தியன்ஸ் (MI) அணிகள் மோதின.

நாணய சுழற்சியில் வென்ற பெங்களூரு அணி முதலில் துடுப்பாடியது. அணித்தலைவர் ஸ்மிரிதி மந்தனா (Smriti Mandhana), சோபி டிவைன் இருவரும் 10 ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர்.

எல்லிஸ் பெர்ரி (Ellyse Perry) அதிரடியில் மிரட்ட, ஏனைய வீராங்கனைகள் சொதப்பினர். பொறுப்புடன் ஆடிய எல்லிஸ் பெர்ரி 50 பந்துகளில் 1 சிக்ஸர், 8 பவுண்டரிகளுடன் 66 ஓட்டங்கள் விளாசி கடைசி ஓவரில் ஆட்டமிழந்தார்.

வாரெஹம் 10 பந்துகளில் ஒரு சிக்ஸர், ஒரு பவுண்டரியுடன் 18 ஓட்டங்கள் எடுக்க பெங்களூரு அணி 6 விக்கெட் இழப்பிற்கு 135 ஓட்டங்கள் எடுத்தது.

பின்னர் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணியில் ஹேலே மேத்யூஸ் 15 ஓட்டங்களும், யஸ்டிகா பாட்டியா 19 ஓட்டங்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

ஹர்மன்பிரீத் 33
அடுத்து பார்ட்னர்ஷிப் அமைத்த நட் சிவர் பிரண்ட் அதிரடியாக 23 ஓட்டங்களும், அணித்தலைவர் ஹர்மன்பிரீத் 30 பந்துகளில் 33 ஓட்டங்களும் விளாசினர்.

மும்பை அணியின் வெற்றிக்கு கடைசி ஓவரில் 12 ஓட்டங்கள் தேவைப்பட்டது. அந்த ஓவரை துல்லியமாக வீசிய ஆஷா சோபனா 6 ஓட்டங்கள் மட்டுமே விட்டுக்கொடுக்க, மும்பை இந்தியன்ஸ் அணி 130 ஓட்டங்களே எடுத்து தோல்வியுற்றது.

அமெலியா கெர் ஆட்டமிழக்காமல் 25 பந்துகளில் 2 பவுண்டரிகளுடன் 27 ஓட்டங்கள் எடுத்தார்.

இந்த வெற்றியின் மூலம் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. 66 ஓட்டங்களுடன் ஒரு விக்கெட் வீழ்த்திய எல்லிஸ் பெர்ரி ஆட்டநாயகி விருது பெற்றார்.

SHARE