ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டவாறு 2026 ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியை இந்தியாவும் இலங்கையும் கூட்டாக நடத்தும் என்பதை ஐசிசி மீண்டும் உறுதிசெய்துள்ளது.
2026 ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் 20 அணிகள் பங்குபற்றுகின்ற நிலையில் 2026 ரி20 உலகக் கிண்ண தகுதிச் சுற்றுக்கான முறைமையையும் ஐசிசி அங்கீகரித்துள்ளது.
இந்த வருடம் மேற்கிந்தியத் தீவுகளிலும் மற்றும் ஐக்கிய அமெரிக்காவிலும் கூட்டாக நடைபெறவுள்ள ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் முதல் எட்டு இடங்களைப் பெறும் நாடுகளானது வரவேற்பு நாடுகளான இந்தியாவுடனும் மற்றும் இலங்கையுடனும் இயல்பாகவே 2026 ரி20 உலகக் கிண்ணப் போட்டியில் பங்குபற்ற தகுதிபெறும்.
உலகக் கிண்ணம்
இந்நிலையில் வரவேற்பு நாடுகளின் நிரல்படுத்தல்களைப் பொறுத்து இரண்டு முதல் நான்கு வரையான மற்றைய அணிகள் தீர்மானிக்கப்பட்டு எஞ்சிய எட்டு நாடுகள் பிராந்திய தகுதிகாண் சுற்றுகள் மூலம் ரி20 உலகக் கிண்ணத்தில் இணையும்.
இவ்வாறு இந்த வருடம் நடைபெறவுள்ள ஐசிசி ஆடவர் ரி20 உலகக் கிண்ண அரை இறுதி மற்றும் இறுதிப் போட்டிகளுக்கு இருப்பு (ரிசேர்வ்) நாட்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக நேற்றைய(15) ஐசிசி சபைக் கூட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.
சுற்று போட்டி
அத்துடன் குழு நிலைப் போட்டிகள் (லீக் சுற்று) மற்றும் சுப்பர் எட்டு சுற்று போட்டிகளின் போது ஆட்டத்தின் முடிவை நிர்ணயிக்க இரண்டாவதாகத் துடுப்பெடுத்தாடும் அணிக்கு குறைந்தது ஐந்து ஓவர்கள் வீசப்பட வேண்டும் என தீர்மானிக்கப்பட்டுள்ளது.
எனினும் நொக் அவுட் போட்டிகளில் ஆட்டத்தின் முடிவை நிர்ணயிக்க இரண்டாவதாக துடுப்பெடுத்தாடும் அணிக்கு குறைந்தபட்சம் 10 ஓவர்கள் வீசப்பட வேண்டும் என தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஐசிசி மேலும் அறிவித்துள்ளது