கனடாவின் ஒட்டாவாவின் புறநகர் பகுதியான பாஹிவனில் உள்ள வீட்டில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் படுகாயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த தனுஷ்க விக்கிரமசிங்க இன்று (15) வைத்தியசாலையில் இருந்து வெளியேற உள்ளார்.
ஒரே இலங்கை குடும்பத்தைச் சேர்ந்த 05 பேர் உட்பட 06 பேர் கொலை செய்யப்பட்ட ஒட்டாவா படுகொலைச் சம்பவத்தின் சந்தேகநபரான 19 வயதுடைய இலங்கையர் நேற்று தொலைபேசியின் வாயிலாக ஒட்டாவா நீதிமன்றில் ஆஜரானார்.
இரண்டாவது நாள் விசாரணை 4 நிமிடங்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டது.
கொலைச் சம்பவம் தொடர்பில், சந்தேகநபரின் மனநிலை தொடர்பில் விரிவான மதிப்பீடு செய்யப்பட வேண்டுமென அந்நாட்டின் சட்ட நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
சந்தேகநபர் ஃபேப்ரியோ டி சொய்சா தற்போது ஒட்டாவாவின் கார்லேட்டன் தடுப்பு மையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார், அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது அவர் தனது பெயரையும் பிறந்த திகதியையும் மெல்லிய குரலில் கூறியுள்ள நிலையில், அதிகாரிகள் அதை தெளிவாகவும் சத்தமாகவும் சொல்லும்படி கூறியுள்ளனர்.
நீதிமன்ற விசாரணையின் போது, படுகொலை செய்யப்பட்ட இலங்கை குடும்ப உறுப்பினர்களின் பெயர்களில் உள்ள பிழைகளை திருத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டதுடன், குற்றச்சாட்டில் மாற்றமில்லை என கனேடிய ஊடகம் தெரிவித்துள்ளது.
மேலும் வழக்கின் சந்தேகநபர் மீதான குற்றச்சாட்டுகள் நேற்று நீதிமன்றத்தில் மீண்டும் வாசிக்கப்படவில்லை.
நீதிமன்ற விசாரணையில் பதில் அளிப்பதற்காக சந்தேகநபர் ஆங்கில மொழியை தெரிவுசெய்துள்ளதுடன் அடுத்த விசாரணையை எதிர்வரும் 28ஆம் திகதி நடத்த நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சந்தேக நபரான ஃபேப்ரியோ டி சொய்சா மீது 06 கொலைக் குற்றச்சாட்டுகள் மற்றும் ஒரு கொலை முயற்சி குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு அவர் பாதுகாப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளதாக அவரது சட்டத்தரணி எவன் லைட்டில் தெரிவித்துள்ளார்.
பிரதிவாதியின் சட்டத்தரணி எவன் லைட்டில்,
“அவர் பாதுகாப்புக் காவலில் இருக்கிறார். அங்கு அவர் நன்றாக இருக்கிறார். நான் அவரை வீடியோ அழைப்பினும் நேரிலும் சந்தித்தேன்.”
கேள்வி – என்ன நடந்தது என்ற புரிதல் அவருக்கு இருக்கிறதா?
“மன்னிக்கவும், என்னால் அதற்கு பதிலளிக்க முடியாது. நான் அவருடைய குடும்பத்தை தொடர்பு கொண்டேன். அவர்கள் இதைப் பற்றி மிகவும் வருந்துகிறார்கள்.”
நீதிமன்ற விசாரணையின் போது குற்றம் சாட்டப்பட்டவர் தனது மனநிலையை சாக்காக முன்வைப்பாரா என்றும் கேட்கப்பட்டுள்ளது.
ஒட்டாவா பல்கலைக்கழகத்தின் சட்டப் பேராசிரியர் டெபேன் கில்பர்ட்,
“இந்த குற்றவியல் வழக்கின் தன்மையைக் கருத்தில் கொண்டு, சந்தேக நபரின் மனநிலை குறித்து குறிப்பிடத்தக்க மதிப்பீடு செய்ய வேண்டியது அவசியம். இதன் சிக்கலான தன்மையைக் கருத்தில் கொண்டு, அத்தகைய செயலைச் செய்வது அவசியம். இதன் முழுமையான உண்மைகள் வெளிவர இன்னும் சில மாதங்கள் ஆகலாம்.
சமீபத்திய ஒட்டாவா வரலாற்றில் மிக மோசமான படுகொலை வழக்கின் விசாரணையை சேகரிக்க ஏராளமான ஊடகவியலாளர்கள் நீதிமன்ற வளாகத்தில் காத்திருந்ததாக தெரிவிக்கப்பட்டது.
சந்தேகநபரான ஃபேப்ரியோ டி சொய்சா கொலை செய்தமைக்கான காரணம் இன்னும் உறுதியாகத் தெரியவில்லை என கனேடிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, படுகொலை செய்யப்பட்ட இலங்கை குடும்ப உறுப்பினர்களின் இறுதிக் கிரியைகள் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை மேற்கொள்ளப்படவுள்ளன.