இசை நிகழ்ச்சியின் போது மகனுக்கும் நண்பர்களுக்கும் இடையில் ஏற்பட்ட மோதலில் தந்தையொருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளதாக நாரம்மல (Naramala) பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இல-80, கொங்கஹகொடுவ, களுகமுவ, மேவெவ என்ற முகவரியில் வசிக்கும் பிரதீப் குணதிலக்க (43) என்ற ஒரு பிள்ளையின் தந்தையே இவ்வாறு தாக்குதலுக்கு இலக்காகி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.
இவர் மீன் விற்பனையை தொழிலாக செய்து வரும் நிலையில், கடந்த 28 ஆம் திகதி முந்தல் பகுதியில் இடம்பெற்ற இசை நிகழ்ச்சிக்கு மகனுடன் சென்றுள்ளார்.
இசை நிகழ்ச்சியில் மோதல்
இதன்போது இரவு இசை நிகழ்ச்சியில் மகனின் நண்பர்கள் அவரை சுற்றி வளைத்து தாக்க முற்பட்ட போது, இசை நிகழ்ச்சியை பார்த்துக் கொண்டிருந்த தந்தை மகனை நண்பர்கள் குழுவிலிருந்து காப்பாற்றியுள்ளார்.
இதனைத்தொடர்ந்து மீண்டும் இசை நிகழ்ச்சி முடிந்ததும் அதிகாலை 1.45 மணியளவில் தந்தையும் மகனும் வீட்டிற்குச் செல்வதற்காக அரங்கிலிருந்து வெளியே வந்தபோது, இருபது பேர் கொண்ட கும்பல் தந்தையையும் மகனையும் தாக்கியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதன்போது தந்தையை போத்தலால் தாக்கி, ஹெல்மெட்டால் தலையில் அடித்து காயப்படுத்தி கும்பல் உடனடியாக அந்த இடத்தை விட்டு தப்பிச்சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸார் விசாரணை
இதனைத்தொடர்ந்து தாக்குதலுக்கு இலக்கான நபர் உடனடியாக குருநாகல் போதனா வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டு அங்கிருந்த , நாரம்மல மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, கடந்த 30ஆம் திகதி தலையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.
இந்த அறுவை சிகிச்சைக்கு பின் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த அவர், நேற்றுமுன் தினம் 1ம் திகதி உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில், தாக்குதல் நடத்தியவர்களைக் கண்டறிய விசாரணைகளை ஆரம்பித்துள்ள பொலிஸார், சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கருதப்படும் பிரதான சந்தேகநபரை கைது செய்துள்ளதாக தெரிவிக்கின்றனர்.
மேலும், ஏனைய சந்தேகநபர்களை கைது செய்வதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.