இளம் குடும்பஸ்தர் மீது பொலிஸார் தாக்குதல்

95

 

பொலிஸ் நிலையத்திற்கு சென்ற இளம் குடும்பஸ்தர் மீது பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கடுமையாக தாக்குதல் மேற்கொண்டுள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த சம்பவமானது இன்று (02.03.2024) காலை மன்னார் பொலிஸ் நிலையத்தில் இடம்பெற்றுள்ளது.

மன்னார், பள்ளிமுனை கிராமத்தை சேர்ந்த 42 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவரே இவ்வாறு தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார்.

தாக்கப்பட்ட குடும்பஸ்தர்
மன்னார் பள்ளிமுனை கிராமத்தில் நேற்று (01) மாலை மன்னார் பொலிஸ் நிலையத்தை சேர்ந்த இரு பொலிஸார் சென்று பிரிதொரு நபரின் பெயரை கூறி அவரை விசாரித்து உள்ளனர்.

இந்நிலையில் குறித்த குடும்பஸ்தரின் வீட்டிற்கு சென்ற பொலிஸார் வீட்டின் உரிமையாளரை கேட்ட போது அவர் இல்லை என தெரிவித்துள்ள நிலையில் அவரின் இரு கையடக்க தொலைபேசிகள் மற்றும் அவருடைய மோட்டார் சைக்கிளையும் மன்னார் பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றுள்ளனர்.

இதனையடுத்து குறித்த குடும்பஸ்தர் இன்றைய தினம் (02.04.2024) காலை மன்னார் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்த நிலையில் அங்குள்ள அதிகாரிகள் மன்னார் பொலிஸ் நிலையம் சென்று முறைப்பாட்டை பதிவு செய்து விட்டு வருமாறு கூறியுள்ளனர்.

மன்னார் பொலிஸ் நிலையம் சென்ற குடும்பஸ்தர் பொலிஸாரிடம் மோட்டார் சைக்கிளின் ஆவணங்களை வழங்கியதுடன் பொலிஸார் எடுத்துச்சென்ற கையடக்க தொலைபேசி மற்றும் மோட்டார் சைக்கிளை கேட்டுள்ளார்.

இதன்போது மன்னார் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி குடும்பஸ்த்தரை கூரிய ஆயுதம் ஒன்றினால் பல தடவைகள் தாக்கியுள்ளார்.

இவ்வாறு தாக்குதலுக்கு இலக்கான குடும்பஸ்தர் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அத்துடன் தாக்குதலுக்கு இலக்கான குடும்பஸ்தரின் மனைவி மன்னார் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

SHARE