உலகக் கிண்ணத் தொடரில் பெரும் தவறு நிகழ்ந்தது – மரைஸ் எராஸ்மஸ்

122

2019 உலகக் கிண்ணத் தொடரில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று முதல் முதலாக உலகக் கிண்ணத்தை கைப்பற்றியது தங்களது பெரும் தவறு காரணமாக நிகழ்ந்தது என்று நடுவர் மரைஸ் எராஸ்மஸ் (Marais Erasmus) தெரிவித்துள்ளார்.

இவரும் குமார் தர்மசேனாவும் நடுவர் பொறுப்பை ஏற்றிருந்த அந்தப் போட்டி ஏகப்பட்ட சர்ச்சைகளைக் கிளப்பியது.

முதலில் ஆட்டம் சமநிலை ஆனதே நடுவரின் தவறு. இரண்டாவதாக சூப்பர் ஓவரில் இரு அணிகளும் சமநிலை எட்டியபோது 04 ஓட்டங்களின் எண்ணிகையில் இங்கிலாந்தை சாம்பியனாக அறிவித்தது கடும் விமர்சனங்களுக்கும் கேலிகளுக்கும் கிண்டல்களுக்கும் ஆளானதை மறக்க முடியாது.

இதனிடையே, இங்கிலாந்து பதிலுக்கு துடுப்பாடும் போது முக்கியமான கட்டத்தில் ஓவர் த்ரோவுக்கு 5 ரன்களுக்கு பதிலாக 6 ஓட்டங்களை அளித்தது எங்களுடைய பெரும் தவறு என்று இப்போது அந்தப் போட்டியின் நடுவர் மரைஸ் எராஸ்மஸ் ஒப்புக் கொண்டுள்ளார்.

பென் ஸ்டோக்ஸும், அடில் ரஷீத்தும் இரண்டாவது ஓட்டத்தை முடிக்கவே இல்லை. அவர்கள் ஓட்டத்தை பூர்த்தி செய்யவே இல்லை. அதற்குள் பென் ஸ்டோக்ஸ் மட்டையில் பட்டு பவுண்டரிக்குப் பறந்தது தான் ஆட்டம் டை ஆகப் பெரும் காரணமாக அமைந்தது.

இது நடுவர்களான தங்களின் மாபெரும் தவறு என மரைஸ் எராஸ்மஸ் தெரிவித்துள்ளார்.

“உலகக் கிண்ணத்திற்கு அடுத்த நாள் காலை நான் என் ஹோட்டல் அறைக் கதவைத் திறந்தேன். காலை உணவுக்காகச் சென்று கொண்டிருந்தேன். குமார் தர்மசேனாவும் அதே சமயத்தில் தன் அறைக் கதவை திறந்து என்னை நோக்கி, ‘நாம் நேற்று பெரிய தவறொன்றை இழைத்தோம் கவனித்தீர்களா?’’என்றார்.

அப்போதுதான் எனக்கே செய்த பெரும் தவறு தெரிந்தது. ஆனால் மைதானத்தில் அந்தச் சம்பவம் நிகழ்ந்த போது 6 ஓட்டங்களை கொடுத்தோம். அதாவது அடில் ரஷீத்தும், பென் ஸ்டோக்ஸும் குரொஸ் செய்யவே இல்லை என்பதை உணராது ஒருவருக்கொருவர், அது 6 ஓட்டங்கள் என்றே கூறிக்கொண்டோம். இதுதான் பெரும் தவறு.” என்றார் மரைஸ் எராஸ்மஸ்.

விதிகளின்படி ஒரு ஓட்டம் பிளஸ் ஓவர் த்ரோ என்றால் 4 ஓட்டங்கள் என மொத்தம் 5 ஓட்டங்கள் தான் கொடுக்கப்பட்டிருக்க வேண்டும்.

கப்தில் த்ரோ அடித்த போது ரஷீத்தும் குரொஸ் செய்யவில்லை, பென் ஸ்டோக்ஸும் குரொஸ் செய்யவில்லை. பூர்த்தி செய்த ஓட்டங்கள் பிளஸ் ஓவர் த்ரோ ஓட்டங்கள் என்றுதான் விதி எண் 19.8 விளக்குகிறது.

இந்த ஓட்டங்கள் தான் இங்கிலாந்தால் சமநிலை  செய்ய முடிந்தது. ஆட்டம் சூப்பர் ஓவருக்குச் சென்று பிறகு இன்னொரு தவறான கணக்கினால் இங்கிலாந்து உலக செம்பியன் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE