சென்னையை துவைத்தெடுத்த ஐதராபாத் அணி: அபிஷேக் சர்மா, மார்க்ரம் அதிரடி

132

 

சென்னை மற்றும் ஐதராபாத் அணிகளுக்கு இடையே நடந்த போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் ஐதராபாத் அணி வெற்றியை பதிவு செய்துள்ளது.

அதிரடியாக விளையாடிய துபே
நடப்பு சேம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியும் விளையாடிய இன்றைய ஆட்டத்தில், நாணய சுழற்சியில் வென்ற ஐதராபாத் அணியின் அணித்தலைவர் கம்மின்ஸ் பந்துவீச்சை தெரிவு செய்தார்.

இதனையடுத்து துடுப்பாட்டத்தில் களமிறங்கிய சென்னை அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்களாக ரச்சின் ரவீந்திரா மற்றும் அணித்தலைவர் கெய்க்வாட் ஆகியோர் களமிறங்கினர்.

இதில் ரவீந்திரா 12 ஓட்டங்களுடனும் கெய்க்வாட் 26 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். பின்னர் கை கோர்த்த துபே – ரஹானே இணை சென்னை அணியை சரிவிலிருந்து மீட்டெடுத்தது.

இவர்களில் அதிரடியாக விளையாடிய துபே அரைசதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 45 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். சிறிது நேரத்திலேயே ரஹானேவும் 35 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.

பின்னர் களமிறங்கிய வீரர்களில் ஜடேஜா 31 ஓட்டங்கள் குவிக்க, மறுமுனையில் டேரில் மிட்செல் 13 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தோனி 1 ஓட்டம் மட்டுமே எடுத்தார்.

மார்க்ரம் 36 பந்துகளில் 50 ஓட்டங்கள்
இதனையடுத்து நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் சென்னை அணி 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 165 ஓட்டங்கள் சேர்த்தது. அதிகபட்சமாக துபே 45 ஓட்டங்கள் அடித்தார். ஐதராபாத் தரப்பில் புவனேஷ்வர் குமார், ஷபாஸ் அகமது, உடன்கட், கம்மின்ஸ் மற்றும் நடராஜன் ஆகியோர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

இதனையடுத்து 166 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஐதராபாத் அணியின் ட்ராவிஸ் ஹெட் மற்றும் அபிஷேக் சர்மா இணை சென்னை பந்துவீச்சை சிதறடித்தது.

24 பந்துகளை எதிர்கொண்ட ட்ராவிஸ் ஹெட் 31 ஓட்டங்களில் வெளியேற, சர்மாவுடன் மார்க்ரம் ஜோடி சேர்ந்தார். இருவரும் அதிரடியாக விளையாடி ஓட்டங்களை குவித்தனர். 12 பந்துகளை மட்டும் எதிர்கொண்ட சர்மா 37 ஓட்டங்களில் வெளியேறினார்.

மார்க்ரம் 36 பந்துகளை எதிர்கொண்டு 50 ஓட்டங்கள் குவித்தார். தொடர்ந்து ஷஹ்பாஸ் அகமது, கிளாசன் மற்றும் நிதிஷ் ரெட்டி ஆகியோர் தங்கள் பங்கிற்கு ஓட்டங்கள் சேர்க்க, 18.1 ஓவரில் ஐதராபாத் அணி வெற்றி இலக்கை எட்டியது. 11 பந்துகள் எஞ்சியிருந்த நிலையில் 6 விக்கெட் வித்தியாசத்தில் ஐதராபாத் அணி வெற்றி பெற்றுள்ளது.

SHARE