பாடசாலையொன்றின் இல்ல விளையாட்டுப் போட்டிகள் தொடர்பாக அதிபர், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களிடம் பொலிஸார் கேள்வி எழுப்பியமை இனவாத அடக்குமுறை என நாட்டின் முன்னணி ஆசிரியர் சங்கம் ஒன்று கண்டனம் தெரிவித்துள்ளது.
தமிழ் தேசிய மலராக கருதப்படும் காந்தள் (கார்த்திகை பூ) மலரின் வடிவில் இல்லம் ஒன்று வடிவமைக்கப்பட்டுள்ளமை குறித்து பொலிஸார் விசாரணை நடத்தியுள்ளனர்.
பொலிஸாரின் நடவடிக்கையினால் பாடசாலை மாணவர்களின் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண அலுவலகத்தில் கடந்த ஏப்ரல் 2ஆம் திகதி முறைப்பாடு செய்திருந்தது.
இல்ல விளையாட்டுப் போட்டி
பாடசாலைப் பாடப்புத்தகங்களிலும் இடம்பெற்றுள்ள பூக்களின் வடிவத்தை பயன்படுத்தி மாணவர்கள் தமது திறமைகளை வெளிப்படுத்த முடியாத வகையில் நெருக்கடியை ஏற்படுத்துவது இனவாதக் கோணத்தில் செயற்பபடுவதையே காட்டுவதாக இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.
யாழ்ப்பாணம் – தெல்லிப்பளை யூனியன் கல்லூரியின் இல்ல விளையாட்டுப் போட்டிகள் கடந்த மார்ச் 30ஆம் திகதி இடம்பெற்ற நிலையில், அங்கு வந்த இராணுவத்தினரும் பொலிஸாரும் கவச வாகனம் மற்றும் காந்தள் மலர் வடிவத்தில் உருவாக்கப்பட்டிருந்த இல்லங்கள் குறித்து மாணவர்களிடம் விசாரணை நடத்தியதாக பிரதேச ஊடகவியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
பின்னர் இவ்விடயம் தொடர்பில் விசாரிப்பதற்காக கடந்த மார்ச் 31 ஆம் திகதி தெல்லிப்பளை பொலிஸ் நிலையத்திற்கு வருமாறு குறித்த இல்லங்களின் சில மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பொலிஸார் அறிவித்திருந்தனர்.
கடந்த மார்ச் 31ஆம் திகதி தெல்லிப்பளை பொலிஸ் நிலையத்தில் மாணவர்களிடம், அந்த மாதிரிகளை வைத்து இல்லங்களை அமைக்குமாறு ஆசிரியர்களால் மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டதா என பொலிஸார் வினவியுள்ளனர், எனினும் மாணவர்கள், தாம் அன்றாடம் காண்கின்ற விடயங்களையும், தமது பாடப் புத்தகங்களில் பார்த்த விடயங்களையும் வைத்தே இல்லங்களை உருவாக்கியதாக பொலிஸாரிடம் தெரிவித்தனர்.
மேலும், மாணவர்கள் கூறுகையில், தாங்கள் உருவாக்கும் இல்லங்களில் அலங்காரங்கள் குறித்து ஆசிரியர்களுக்கு முன் கூட்டியே அறிவிக்கவில்லை எனவும், வருடத்திற்கு ஒரு முறை மாத்திரமே பூக்கும் காந்தள் மலரை ஏனையவர்களும் பார்ப்பதற்கான வாய்ப்பை வழங்கும் நோக்கில் இவ்வாறு இல்லத்தை உருவாக்கியதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.