வாகனத் திருட்டு, வீடு உடைப்பு, தங்க சங்கிலி பறிப்பது போன்றவற்றைக் குறைக்கும் விசேட செயற்திட்டமொன்று ஆரம்பிக்கப்படவுள்ளது.
அதற்கமைய, மே மாதம் முதலாம் திகதி முதல் இந்த நடவடிக்கையை அமுல்படுத்த மூன்று மாத கால இலக்கு வழங்க பொலிஸ் மா அதிபர் தேஷ்பந்து தென்னகோன் நடவடிக்கை எடுத்துள்ளார்.
பாதாள உலக குழுக்களை ஒடுக்குவதற்காக அமுல்படுத்தப்பட்டுள்ள யுக்திய நடவடிக்கையுடன் இணைந்து இதற்கான செயற்திட்டத்தை மே மாதம் முதலாம் திகதிக்கு முன்னர் வழங்குமாறு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்களுக்கு நேற்று பொலிஸ் மா அதிபர் உத்தரவிட்டுள்ளார்.
மக்களுக்கு ஆபத்து
இந்த விசேட நடவடிக்கைக்காக பொலிஸ் பிரிவுகளில் 60 வீதமான பொலிஸ் உத்தியோகத்தர்களை பொலிஸ் நிலையங்களுக்கு வெளியே நெடுஞ்சாலை கடமைகளில் உடனடியாக ஈடுபடுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
பொதுமக்கள் குற்றச் செயல்களுக்கு அச்சமின்றி வாழக்கூடிய சமூகத்தையும் சூழலையும் உருவாக்குவதே பொலிஸாரின் தொலைநோக்குப் பார்வையாகும்.
அவ்வாறான நோக்கமுமான போதிலும் பொலிஸாரால் அந்த தொலைநோக்குப் பார்வையை அடைய முடியவில்லை என பொலிஸ் மா அதிபர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பொலிஸாரின் கவனம் வேறு தேவைகளுக்குப் பயன்படுத்தப்பட்டமையே இதற்குக் காரணம், எனவே இந்தப் புத்தாண்டு விடியலின் பின்னர் பொலிஸாரின் கவனம், குற்ற செயல்கள் அற்ற சமூகத்தை உருவாக்குவதை இலக்காகக் கொள்ள வேண்டும் என பொலிஸ் மா அதிபர் அறிவுறுத்தியுள்ளார்.
விசேட பாதுகாப்பு
மே முதலாம் திகதி முதல் மூன்று மாதங்களுக்குள் விசேட செயற்திட்டத்தை நடைமுறைப்படுத்தவும், கடந்த வருடம் பதிவான 32 சதவீத வன்முறைக் குற்றங்களை மிகக் குறைந்த மட்டத்திற்குக் குறைக்கவும் பொலிஸ் மா அதிபர் இலக்கு நிர்ணயித்துள்ளார்.
இனிமேல் பெண்கள் தங்க நகையை அணிந்து செல்லும் சூழலும், பொதுமக்கள் மார்க்கெட்டுக்கு மோட்டார் சைக்கிள், வாகனங்களில் செல்லக்கூடிய சூழலும் உருவாக்கப்பட வேண்டும் என பொலிஸ் மா அதிபர் வலியுறுத்தியுள்ளார். .