சாதனை தமிழருக்கு லண்டனில் பாராட்டு

538

பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில் நடைபெற்ற யூ.கே மற்றும் தமிழ்நாடு வர்த்தக சங்க கூட்டத்தில், மகாராஷ்டிர தமிழ்ச் சங்க இணைச் செயலரும் தோசா பிளசா அதிபருமான பிரேம் கணபதி கவுரவிக்கப்பட்டார். இதற்கான ஏற்பாடுகளை யூ.கே மற்றும் தமிழ்நாடு வர்த்தக சங்கத் தலைவர் ரவிபாலன் செய்திருந்தார்.

சாதனை தமிழர்: தூத்துக்குடி, நாகலாபுரத்தைச் சேர்ந்தவர் பிரேம் கணபதி. 10ம் வகுப்பு படித்தவர். மும்பையில் ஆயிரத்து 200 ரூபாய் சம்பளத்தில் வேலை கிடைக்கும் என்ரு நம்பி வந்த இவருக்கு கிடைத்ததோ ஒரு டீக்கடையில் வேலை. பின்னர் பேக்கரியிலும் உணவகத்திலும் வேலை கிடைத்தது. அப்போது மற்றொருவருடன் சேர்ந்து வீதியோர உணவகம் அமைக்கும் முயற்சியில் இறங்க, அதுவும் நிலைக்காமல் போனது.

இப்படி தொடர்ந்து ஏமாற்றத்தைச் சந்தித்த பிரேம் கணபதி, தனது சகோதரர்கள், நண்பர்கள் உதவியுடன் மும்பையில் உணவு விற்பதில் நல்ல எதிர்காலம் இருப்பதை உணர்ந்து, 150 ரூபாய்க்கு கை வண்டி ஒன்றை வாடகைக்கு எடுத்துக் கொண்டு தானே சமைத்து தெருத் தெருவாய் விற்பனை செய்யத் தொடங்கினார். காலை 5.30 மணிக்கு சமையல் வேலையைத் தொடங்கி மதியம் 3.30 வரை வீதிகளில் அலைவார். ஒவ்வொரு மாலையும் இரண்டு மணி நேரம் ஓய்வில் இண்டர்நெட் சென்டர் ஒன்றுக்கு சென்று தொழில் மேம்பாடு குறித்த கட்டுரைகளை வலைபோட்டுத்தேடி வாசிப்பார். அம்மாவின் சமையல் குறிப்புகளும் கை கொடுத்தது. ஐந்தாண்டுகளில் படிப்படியாய் வளர்ச்சி நிகழ்ந்தது.

பிரேம்சாகர் தோசா ப்ளாஸா: 1998ல் அவர் தொடங்கிய பிரேம்சாகர் தோசா ப்ளாஸா இன்று அமெரிக்கா, துபாய், ஆஸ்திரலியா, நியுசிலாந்து, கத்தார், தன்சானியா, மஸ்கட் என வெளிநாடுகளிலும் விரிவடைந்து செல்கிறது. டெக்டோனால்ட் போன்ற சர்வதேச சங்கிலி உணவகங்களைத் தன் முன்னுதாரணமாகக் கொண்டு தோசா ப்ளாஸா தொடர் சங்கிலிகளை பிரான்சைஸி மூலம் உருவாக்கிய பிரேம் கணபதி 2015 இல் 100 கிளைகளை உலகெங்கும் திறக்கும் இலக்கைக் கொண்டுள்ளார். திக்குத் தெரியாமல் காலம் நிறுத்தினாலும் திசைகளை ஜெயிக்கும் உள்ள உறுதியும் ஓயாத உழைப்பும் எத்தகைய தொழில் சாம்ராஜ்யத்தை உருவாக்கிக் கொடுக்கும் என்பதற்கு பிரேம் கணபதி ஒரு பிரமாதமான எடுத்துக்காட்டு.

SHARE