வெடித்து சிதறும் எரிமலை; சுனாமி அச்சத்தால் மக்கள் வெளியேற்றம்

93

 

இந்தோனேஷியாவின் சுலாவேசி தீவின் வடக்குப் பகுதியில் மவுண்ட் ருவாங் எரிமலை வெடித்து சிதறியதை அடுத்து, புதன்கிழமை சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சுனாமி எச்சரிக்கையை அடுத்து 11,000 க்கும் மேற்பட்ட மக்களை வெளியேறுமாறும் உத்தரவிட்டப்பட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் இந்த எரிமலை ஐந்து முறை வெடித்து சிதறியுள்ளதாக இந்தோனேசியாவின் எரிமலை மற்றும் புவியியல் பேரிடர் தணிப்பு மையம் தெரிவித்துள்ளது.

சுனாமியை ஏற்படுத்தக்கூடும் -அதிகாரிகள் கவலை
எரிமலை குழம்பின் வெளியேற்றம் அதிகரித்துள்ளதை தொடர்ந்து அதிகாரிகள் சிவப்பு அபாய எச்சரிக்கை விடுத்த நிலையில் குறைந்தது 800 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

இந்தோனேசியா பசிபிக் நெருப்பு வளையம் என்று அழைக்கப்படும் எரிமலைகள் நிரம்பிய பகுதியில் உள்ளது. இங்கு சிறியதும் பெரியதுமான 120க்கும் மேற்பட்ட எரிமலைகள் உயிர்ப்புடன் உள்ளன. 2,378 அடி உயரத்திலுள்ள ருவாங் எரிமலை உள்ள பகுதியிலிருந்து குறைந்து 6 கிலோமீட்டர் (3.7 மைல்) தொலைவில் இருக்குமாறு சுற்றுலாப் பயணிகளையும் பொதுமக்களையும் அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.

அதேவேளை சமீப காலங்களில் ஏற்பட்ட நிலநடுக்கங்களை தொடர்ந்து ருவாங் எரிமலையில் வெடிப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், 1871 ஆம் ஆண்டு வெடித்து சிதறியதைப் போல எரிமலையின் ஒரு பகுதி கடலில் சரிந்து சுனாமியை ஏற்படுத்தக்கூடும் என்று அதிகாரிகள் கவலை அடைந்துள்ளார்கள்.

அதேசமயம் எரிமலையின் வடகிழக்கில் உள்ள டகுலாண்டாங் தீவு மீண்டும் ஆபத்தில் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்தோனேசியாவின் அனக் க்ரகடாவ் எரிமலை 2018 ஆம் ஆண்டடில் வெடித்து சில பகுதிகள் கடலில் விழுந்து சுமத்ரா மற்றும் ஜாவா கடற்கரையில் சுனாமியை ஏற்படுத்திய நிலையில் , 430 பேர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

SHARE