மைத்திரிக்கு எதிரான தடைக்கால உத்தரவு தொடர்ந்தும் நீடிப்பு!

158

 

சுதந்திரக் கட்சியின் தலைவராக முன்னாள் அதிபர் மைத்திரிபால சிறிசேனவிற்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட இடைக்காலத் தடையுத்தரவை எதிர்வரும் மே மாதம் 09 ஆம் திகதி வரை நீடிக்குமாறு கொழும்பு மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் பதவியில் நீடிப்பதற்கு மைத்திரிபால சிறிசேனவிற்கு எதிராக விதிக்கப்பட்ட இடைக்கால தடையுத்தரவு தொடர்பான வழக்கு இன்று(18) நீதிமன்றத்தில் முன்னெடுக்கப்பட்ட நிலையிலேயே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் அதிபர் சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவினால் தாக்கல் செய்த மனுவொன்றின் அடிப்படையில் முன்னாள் அதிபர் மைத்திரிபால சிறிசேனவிற்கு சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் பதவியில் நீடிப்பதற்கு எதிராக இடைக்காலத் தடை விதிக்கப்பட்டது.

மனு தாக்கல்
தாக்கல் செய்யப்பட்ட மனுவில் மைத்ரிபால சிறிசேன அதிபர் பதவியில் இருந்து விலகிய போதிலும் கட்சியின் தலைவர் பதவியில் நீடிப்பது சட்டத்திற்கு முரணானது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்நிலையில் இது தொடர்பான வழக்கு கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் இன்றையதினம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இதேவேளை சிறிலங்கா சுதந்திரக் கட்சியில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட நியமனங்கள் தொடர்பில் கட்சியின் பதில் பொதுச் செயலாளரால் தேர்தல்கள் ஆணைக்குழுவில் ஆட்சேபனை முன்வைக்கப்பட்டுள்ளது.

தேர்தல்கள்
கட்சி யாப்பிற்கமையவே அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட வேண்டுமென தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு சுட்டிக்காட்டியுள்ளதாக கட்சியின் பதில் பொதுச் செயலாளர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் துஷ்மந்த மித்ரபால தெரிவித்துள்ளார்.

மேலும் இன்று இடம்பெறவுள்ள தேர்தல்கள் ஆணைக்குழு கூட்டத்தின் போது சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் அரசியல் குழு கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள தீர்மானம் தொடர்பிலும் மற்றும் அதற்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள ஆட்சேபனை குறித்தும் ஆராயப்படவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

SHARE