பிரபல பின்னணிப் பாடகர், புல்லாங்குழல் கலைஞர் அருண்மொழி அவர்களின் பிறந்தநாள் இன்று….

71

 

 
மல்லிக மொட்டு.. மனசை தொட்டு.. ராஜாவின் செல்ல பிள்ளைக்கு இன்று ஹேப்பி பர்த்டே!
ஒரு இசையமைப்பாளர் போலவே இசைக்கருவிகளை வாசிப்பவருக்கும் புகழ் சேர்ந்துள்ளது என்றால், அது அருண்மொழிக்குத்தான்!! சிறந்த புல்லாங்குழல் இசைக்கலைஞர்… பிரபல பாடகர்… இளையராஜாவின்செல்லப்பிள்ளை!
80’களின் இறுதியில் தொடங்கியது அந்த மெல்லிய பூங்காற்று… 90களில் றெக்கை கட்டி பறந்தது தவழ்ந்தது இசை வானில்!! பொதுவாக பாடகர்களுக்கு இளையராஜா நோட்ஸ் எழுதி தந்து பிறகு பாட வைப்பதுதான் பழக்கம். ஆனால் அது வெஸ்டர்ன் நோட்ஸில் தான் எழுதி தருவார்.
அந்த நோட்ஸ் நிறைய பேருக்கு புரியாது. அதை வரும் பாடகர்களுக்கு விளக்குவதே அருண்மொழிதான். இப்படித்தான் ராஜாவிடம் நெருங்கினார் அருண்மொழி. விரைவில் ஆஸ்தான இசைக்கலைஞர் ஆனார். நெப்போலியன் என்ற பெயரை மாற்றி அருண்மொழி என்று பெயரிட்டதே ராஜா தான். ரமணரின் அருண்மொழித் திரட்டு என்ற நூலின் பெயரில் இருந்து இளையராஜா இந்த பெயரை அவருக்கு சூட்டினார்.
நான் என்பது..நீ அல்லவோ…
ஒரு நாள் வாய்ஸ் ரூமில் மற்றொரு இசைக்கலைஞருக்கு வாசிக்க வேண்டிய ஸ்வரத்தை அருண்மொழி பாடிக் காட்டி கொண்டிருந்தார். அப்போதுதான் இவரது குரலை ஹெட்போனில் ராஜா கேட்க நேர்ந்தது. அடுத்த நாளே ‘நெப்போலியன் இந்த பாட்ட நீங்களே பாடிடுங்க’ என்று ஷாக் கொடுத்தார். அதுதான் சூரசம்ஹாரம் படத்தில் வரும் ‘நான் என்பது நீயல்லவோ தேவ தேவி’. இந்தப் பாடல் மூலம் புதுப்பாடகன் அறிமுகமானார். பிறகு அதே படத்தில் நீலக்குயிலே என்று இன்னொரு பாடலையும் பாட வைத்தார் இளையராஜா.
தனி சுகம்
இதனை தொடர்ந்து அவருடைய குரலுக்கு பொருத்தமான பாடல்களை கொடுத்து அழகு பார்த்தார் ராஜா. அருண்மொழி பாடிய எல்லா பாடல்களுமே சூப்பர் ஹிட்தான். நிறைய இசையமைப்பாளர்களிடம் அருண்மொழி பாடிவிட்டாலும், ராஜாவிடம் பாடிய பாடல்களே தனி ரகம்தான்… தனி சுகம்தான்.
வராது வந்த நாயகன்
‘வராது வந்த நாயகன்’ என்ற பாடலை பார்த்திபனுக்கு பாட நேர்ந்தது. என்ன நேர்ந்ததோ தெரியவில்லை, இதை கேட்டதும் பார்த்திபனுக்கு புல்லரித்துவிட்டது. தனக்கு பொருத்தமான குரல் இப்படி எப்போதும் அமைந்ததில்லை என்று உணர்ச்சிவசப்பட்டு விட்டார். கடைசியில் மற்ற இசையமைப்பாளர்களிடமே அருண்மொழியை கூட்டி சென்று போய் பாடல்களை பாட வைத்திருக்கிறார் பார்த்திபன்.
பலரும் அறியாதது,
அருண்மொழி ஒரு பாடலாசிரியரும் கூட. ‘எனக்கொரு மகன் பிறப்பான்’ படத்தில் எல்லா பாடல்களும் அருண்மொழிதான் எழுதினார். தனது படங்களில் எல்லாம் புல்லாங்குழலுக்கு வேலை வைத்து அருண்மொழியின் திறமையை வெளிப்படுத்துவார் ராஜா. வெறும் பாடல்கள் என்றில்லை.. ரீரெக்கார்டிங்கிலும் பின்னியெடுத்து விடுவார். அப்படி ரீரிகார்டிங்கில் பலரால் பாராட்டப்பட்டது. அஞ்சலி, மௌனராகம் போன்ற பல படங்கள் உள்ளன.
சமத்து பிள்ளை
சரியாக பணியாற்றவில்லை என்றாலோ, தான் சொல்வதை புரிந்துகொள்ளாமல் வேறு ஏதாவது செய்தாலோ பொதுவாக இளையராஜா சற்று கோபப்படுவார். ஆனால் இதுவரை இளையராஜாவிடம் ஒரு திட்டுகூட வாங்காமல் சமத்து பிள்ளையாக இருப்பவர் அருண்மொழிதான்.
உச்சஸ்தாயி
அருண்மொழியின் குரல் ரொம்ப மென்மையானது. எவ்வளவு உச்சஸ்தாயியில் இவர் பாடினாலும் எங்கேயும் பிசிறடிக்காது. அதற்கு ஒரே ஒரு எடுத்துக்காட்டு சொல்ல வேண்டுமானால், ‘வெள்ளிக் கொலுசு மணி’ பாடலில் நீண்ட பல்லவி வரும். அதில் கொஞ்சமும் மூச்சு முட்டாமலும் சரணத்தில் ‘உள்ள போயி நீதான் பாடுகின்ற பாட்டு’ என்னும் வரியை சுதி சுத்தமாக சேர்த்து பாடி இனிமை கூட்டி இருப்பார்.
இசைக்கச்சேரி
குழைத்து தருவார்
“இசைக் கச்சேரிகளில் நூற்றுக்கணக்கான இசைக்கருவிகளுடன் ஆட்கள் நிறைந்திருந்தாலும், கூடியுள்ள மக்கள் உற்று நோக்குவது புல்லாங்குழலுடன் உட்கார்ந்திருக்கும் அருண்மொழியைதான்.” குழலோசையை தேனை போல குழைத்து தரும் அருண்மொழியின் தேவ கானம் நூறாண்டுகளுக்கு மேல் காற்றில் தவழ்ந்து வாழும்!
SHARE