சஜித்தின் எதிர்கால அரசியலுக்கு சவாலாக மாறப் போகும் தேசிய பட்டியல் இழுபறி.!

50

 

ஜனாதிபதி தேர்தலைத் தொடர்ந்து இடம்பெற்ற பொதுத்தேர்தல் முடிந்து கிட்டத்தட்ட ஒரு மாதம் பூர்த்தியாகிறது.
அரசியல் அரங்கில் எதிர்பார்த்தவைகள் சில நடந்த போதிலும் எதிர்பாராதவைகளும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன.
ஆளும் கட்சி உறுதியான அரசாங்கமாக இருந்தாலும் பலமான எதிர்க்கட்சி அவசியம் என்பது ஜனநாயக விழுமியங்களில் ஒன்றாகும். இலங்கையில் நடந்த இரண்டு தேர்தல்களிலும் ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணி அமைத்து போட்டியிட்டது. ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச அந்த தேர்தலிலே 4363035 வாக்குகளைப் பெற்று தோல்வியடைந்தார். அவருடைய தோல்வி பொதுத்தேர்தலில் அவருடைய கூட்டணிக்கு 1968716 வாக்குகளாகி அரை மடங்காக தேய்ந்துபோய் பெரும் பின்னடைவை நோக்கிச் சென்றது. இது கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதையாகியது. இதன் மூலம் இந்த நாட்டு மக்களின் நம்பிக்கையை முற்றாக இழந்த ஒரு அரசியல் தலைவராக சஜித் பிரேமதாச பார்க்கப்படுகின்றார். ஜனாதிபதி தேர்தலிலே சஜித் பிரேமதாச பெற்ற 4363035 லட்சம் வாக்குகளுடன் ரணில் விக்கிரமசிங்க பெற்ற 2299767 வாக்குகளை ஒப்பிடும்போது கிட்டத்தட்ட 66 லட்சத்து 62802 வாக்குகளை இருவரும் பெற்றிருந்தார்கள். இந்த வாக்குகள் ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணி மற்றும் ரணில் விக்ரமசிங்க அணிகளின் தனிப்பட்ட வாக்குகளாக இருந்தாலும் மொத்தத்தில் ஐக்கிய தேசிய கட்சியின் வாக்குகளே அவை. ஐக்கிய தேசிய கட்சியின் சார்பில் ஒரு பொது வேட்பாளர் களமிறக்கப்பட்டிருந்தால் நிலைமை வேறு முடிவுகளாக அமைந்திருக்க ஒரு வாய்ப்பு இருந்தது என்ற ஒரு அபிப்பிராயம் அநேகமான மக்கள் மத்தியில் இன்னும்இருக்கின்றது. எனது முன்னைய கட்டுரைகளில் இது குறித்து விரிவாக எழுதியிருந்தேன். வேட்பாளர் நியமனப்பத்திரங்கள் தாக்கல் செய்வதற்கு முன்பாகவே ரணில் விக்ரமசிங்கவிடம் இருந்து ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணிக்கு ஒன்றாக இணைந்து தேர்தலை சந்திக்கும் நோக்கில் பல தடவைகள் அழைப்புகள் வந்தன. ஆனாலும் அவரது கோரிக்கையை சஜித் பிரேமதாச தொடர்ச்சியாக நிராகரித்து வந்ததன் காரணமாக அந்த முயற்சி கைகூடவில்லை. மாறாக இரு அணிகளும் ஒன்று சேர்ந்திருந்தால் ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் வித்தியாசமான ஒரு கட்டத்தை அடைந்திருக்க வாய்ப்புகள் இருந்தன. ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க பெற்ற 5654915 வாக்குகளுடன் இரண்டாவது வாக்கு எண்ணுதலுக்கு செல்லாமலேயே முடிவுகள் அமைந்திருக்கலாம். இந்த விடயத்தில் கூட சஜித்தின் விடாப்பிடியான போக்கு சுமார் ஆறு மில்லியன் வாக்காளர்களின் எதிர்பார்ப்புகளை சிதறடித்தது என்றும் கருதலாம்.கடந்த கோட்டா அரசில் அரச துறைகளில் அரசியல் பழிவாங்கலுக்கு உள்ளான பலர் எதுவித பிரதிபலனும் இன்றி ஓய்வுபெறும் அவல நிலையை சஜித்தின் இவ்வாறான முடிவுகளால் அடைந்துள்ளார்கள்.
இனி விஷயத்துக்கு வருவோம். சஜித் பிரேமதாசவுக்கு கடந்த பொதுத்தேர்தலில் மகத்தான பாடம் ஒன்றை மக்கள் அவருக்கு படிப்பித்திருக்கின்றார்கள். தனது தோல்விக்கும் தனது கூட்டணிக்கு ஏற்பட்ட பெரும் பின்னடைவுக்கும் என்ன காரணம் என்பதை அவர் அலசி ஆராய்ந்து கண்டறிய வேண்டும். அவர் இன்னும் அது சம்பந்தமாக பின்னோக்கி நினைத்துக் கூட பார்க்கவில்லை என்பது அவருடைய அண்மைக்கால நடவடிக்கைகளில் இருந்து புரிகிறது. உதாரணமாக பொதுத்தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணி பெற்ற 40 ஆசனங்களில் ஐந்து தேசிய பட்டியல் ஆகும். அதில் அந்த கூட்டணியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மதும பண்டாராவுக்கு ஒரு ஆசனம் வழங்கப்பட்டு அவர் முதல் நாளே பாராளுமன்றம் சென்ற நிலையில் ஏனைய நான்கு தேசிய பட்டியல் உறுப்பினர்களும் இன்று 12.12.2024 காலை வரை நியமிக்கப்படாமல் வெற்றிடமாகவே இருந்தமை இந்த நாட்டு அரசியலில் ஒரு கோமாளித்தனமான நடவடிக்கையாகவே மக்களால் பார்க்கப்படுகிறது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கொழும்பு மாவட்ட நீதிமன்றில் பெற்றுக்கொண்ட தடை உத்தரவு இல்லாதிருந்தால் இன்னும் இந்த பாராளுமன்ற ஆசனங்கள் நான்கும் வெற்றிடங்களாகவே இருந்திருக்கும். இந்த விடயம் சமகால அரசியலில் போகும் இடமெல்லாம் பேசுபொருளாகி நிற்பதை காணக்கூடியதாகவே உள்ளது. தனது கூட்டணியில் இருந்து இதற்கு பொருத்தமான நால்வரை கடந்த 28 நாட்களில் தெரிவு செய்ய முடியாத ஒரு கையறு நிலையில் சஜித் பிரேமதாச இருந்தார் என்றால் இந்த நாட்டில் முக்கியமான முடிவுகளை எடுக்கக்கூடிய ஜனாதிபதி பதவிக்கு அவர் எந்த அளவுக்கு பொருத்தமானவர் என்ற ஒரு கேள்வி இங்கு உற்றுநோக்க வேண்டிய ஒன்றாகும். இந்த நான்கு தேசிய பட்டியல் எம்பிக்களை தெரிவுசெய்து வெற்றிடங்களை பூர்த்தி செய்ய முடியாத ஒரு தலைவர் இந்த நாட்டை எவ்வாறு வழிநடத்த முடியும் எவ்வாறு தீர்க்கமான முடிவுகள் எடுக்க முடியும் எவ்வாறு இந்த நாட்டுக்கு தலைமைத்துவம் வழங்க முடியும் என்ற ஒரு கேள்வி எழுப்பப்படுவதும் நியாயமானதே. ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணியில் இந்த தேசிய பட்டியல் ஆசனங்களை எதிர்பார்த்து காத்திருந்த பலர் பலத்த ஏமாற்றங்களுக்குள்ளானதும் மிக முக்கியமான விடயம் ஆகும். பேராசிரியர் ஜீ எல் பீரிஸ், தலஸ் அழகப்பெரும, இம்தியாஸ் பாக்கீர் மாக்கார், ஹிருணிக்கா பிரேமச்சந்திர போன்றோர் பெரும் எதிர்பார்ப்புடன் இருந்தார்கள். இவை தவிர கட்சிக்கு உதவிகள் வழங்கிய பல வர்த்தகர்கள் மற்றும் பேராசிரியர்கள் சிலரும் நம்பிக்கையுடன் இருந்தமை தெரிய வருகிறது. கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிரான முதலாவது ஆர்ப்பாட்டத்தை மிரிஹானையில் உள்ள அவரது சொந்த இல்லத்தின் முன்பு முன்னெடுக்க பிரதான காரணமாக அமைந்தவர் ஹிருணிக்கா என்பது நாட்டு மக்கள் அறியாத ஒன்றல்ல. அப்படிப்பட்ட ஹிருணிக்கா தேசிய பட்டியலில் தவறவிடப்பட்டுள்ளமை பெரும் ஏமாற்றம் என்பதும் ஒரு சாராரின் கணிப்பாகும். இப்போது தேசியப் பட்டியல் வழங்கப்பட்டிருப்பவர்களில் மூவர் சிறுபான்மை இனத்தவர்கள் என்ற விவகாரமும் இன்றைய முகநூல் பக்கங்களில் விலாவாரியாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. ஐக்கிய மக்கள் சக்திக்கு கடந்த தேர்தல்களில் இந்த கட்சிகள் எத்தனை இலட்சம் வாக்குகளை பெற்று கொடுத்துள்ளன என்ற கேள்வியும் எழாமல் இல்லை. அதேவேளை இந்த கட்சிகளுக்கு தேசிய பட்டியல் தருவதாக வழங்கிய வாக்குறுதிகள் 2020 பொதுத்தேர்தலின்போது சஜித் பிரேமதாசவினால் அப்பட்டமாக மீறப்பட்ட விடயமும் சுட்டிக்காட்ட வேண்டிய ஒன்றுதான். அதனால்தான் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நீதி கேட்டு நீதிமன்றம் செல்லும் நிலைக்கு சஜித்தின் நடவடிக்கைகள் அடிப்படையாய் அமைகின்றன. இலங்கை அரசியல் வரலாற்றில் தேர்தல் ஒப்பந்தம் செய்து கொண்ட கட்சியொன்று தேசிய பட்டியலில் தனக்கு இடம் வேண்டும் என்று நீதிமன்றத்தை நாடிய முதல் சந்தர்ப்பமும் இதுவே.
எது எப்படியான போதிலும் எதிர்காலத்தில் சஜித் பிரேமதாச மீது நம்பிக்கை வைத்து அரசியல் கூட்டு மேற்கொள்வது என்பது கட்சிகளுக்கிடையே அதிருப்தி தரும் ஒன்றாகவே இருக்கப் போகிறது.
உமர்லெப்பை யாக்கூப்
ஒலி/ஒளிபரப்பாளர்,
சிரேஷ்ட ஊடகவியலாளர்
SHARE