உள்ளுராட்சி மன்றங்களை இலக்காக கொண்டு கட்சிகள் தம்மை பலப்படுத்துகின்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டுவரும் அதேநேரம் தமிழ் தேசிய கூட்டமைப்பானது தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்களினால் உருவாக்கப்பட்டதொன்று. அதனை சீர்குழைப்பதற்கு 2001 – 2023 வரையான காலப்பகுதியில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு தமிழ் நெசனல் அலைன்ஸ் (TNA) சனிக்கிழமை 14 ஜனவரி அன்று உத்தியோகபூர்வமாக பிளவுபட்டது. இலங்கை தமிழரசுக் கட்சியினால் இதுவரை காலமும் நிர்வகித்து வந்த தமிழ் தேசிய கூட்டமைப்பில் அதன் தலைவராக இரா.சம்மந்தன் அவர்களும், செயலாளராக மாவை சேனாதிராஜாவும், பிரதிச் செயலாளராக செல்வம் அடைக்கலநாதனும், பேச்சாளராக எம்.ஏ.சுமந்திரனும் நியமிக்கப்பட்டிருந்தனர்.
இக் கட்சியினுடைய கொள்கையானது தமிழ் தேசியம் தற்போதுவரையான தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆசனங்கள் பற்றி பார்ப்போமாக இருந்தால் பாராளுமன்ற தேர்தலில் 225 ஆசனங்களில் 10 ஆசனமும், மாகாணசபைகளில் 455 சபைகளில் 41 சபைகளும், உள்ளுராட்சி மன்றங்களான 4,462 சபைகளில் 228 சபைகளும் கைப்பற்றியிருந்த நிலையில் இறுதியாக நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் பாரிய பின்னடைவை சந்தித்திருந்தது. அதே நேரம் தமிழீழ விடுதலைப்புலிகளால் உருவாக்கப்பட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு 2004 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் போட்டியிட்டு 22 ஆசனங்களை கைப்பற்றியது. இதன் சராசரி 6.84 இதன்படி 2001 – 2020 வரையிலான தமிழ் தேசிய கூட்டமைப்பின் வீழ்ச்சி பற்றி பார்ப்போமாக இருந்தால் தவறு எங்கே இடம்பெற்றிருக்கின்றது என்பது புலப்படும்.
குறிப்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு 2001 அக்டோபரில் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ் தேசியக் கட்சிகள் ஒரு பொதுக் குடையின் கீழ் போட்டியிடுவதற்காக உருவாக்கப்பட்டது. 2001 அக்டோபர் 20 இல் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் (அ.இ.த.கா), ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (ஈ.பி.ஆர்.எல்.எப்), தமிழீழ விடுதலை இயக்கம் (ரெலோ), தமிழர் விடுதலைக் கூட்டணி (த.வி.கூ) ஆகிய கட்சிகளிடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. இக் கூட்டமைப்பு அரசியல் கட்சியாகப் பதிவு செய்யப்படாததால், 2001 தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு மொத்தம் 348,164 வாக்குகள் (3.89%) பெற்று நாடாளுமன்றத்தில் 225 இல் 15 இடங்களைக் கைப்பற்றியது.
த.தே.கூ உருவாக்கப்பட்ட காலத்தில் இருந்து அது விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்து வந்தது. புலிகளின் ‘விடுதலைப் போராட்டத்தை’ அங்கீகரித்து, அவர்களே இலங்கைத் தமிழரின் ஏகோபித்த பிரதிநிதிகள் என அறிவித்தது. இது அக்கூட்டமைப்புக்குள்ளே பிளவுகளை ஏற்படுத்தியது. வீ.ஆனந்தசங்கரி தலைமையிலான தமிழர் விடுதலைக் கூட்டணியின் உறுப்பினர்கள் சிலர் புலிகளுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்தனர். இதனால் 2004 தேர்தலில் தமது சின்னத்தைப் பயன்படுத்த ஆனந்தசங்கரி நீதிமன்றத்தில் இருந்து தடை உத்தரவு பெற்றார். இதனால் கூட்டமைப்பில் இருந்த தமிழர் விடுதலைக் கூட்டணியின் சில உறுப்பினர்கள் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வீட்டுச் சின்னத்தை மீளக்கொண்டு வந்தார்கள். 2004 தேர்தலில் கூட்டமைப்பு வீட்டுச் சின்னத்தில் போட்டியிட்டு 633,654 வாக்குகளைப் (6.84%) பெற்று 22 இடங்களைக் கைப்பற்றியது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் 2008 இல் இடம்பெற்ற உள்ளுராட்சித் தேர்தல்களிலும், 2008 கிழக்கு மாகாணசபைத் தேர்தலிலும் அரசு சார்பு தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி துணை இராணுவக் குழுவின் அச்சுறுத்தலினால் கூட்டமைப்பு போட்டியிடவில்லை.
2009 மே மாதத்தில் ஈழப்போர் முடிவுக்கு வந்தது. 40,000 இற்கும் அதிகமான பொதுமக்கள் இறுதிப்போரில் ஆயுதப் படைகளினால் கொல்லப்பட்டனர். தமிழ் தேசியக் கூட்டமைப்பு இறுதிப் போரில் இழைக்கப்பட்ட போர்க்குற்றங்களுக்கு பன்னாட்டு விசாரணை நடத்தப்பட வேண்டும் என உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் குரல் கொடுத்து வந்தது.
2010 அரசுத்தலைவர் தேர்தலில் கூட்டமைப்பு பொது எதிர்க்கட்சி வேட்பாளரான சரத் பொன்சேகாவை ஆதரித்தது. 2010 மார்ச்சில் கூட்டமைப்பு தனிநாடு என்ற தனது கோரிக்கையைக் கைவிட்டு வடக்கு, கிழக்கு மாகாணங்களின் இணைப்புடனான கூட்டாட்சிக் கோரிக்கையை முன்வைத்தது. 2010 மார்ச்சில் தமிழ்க் காங்கிரஸ் தன் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், மற்றும் செல்வராசா கஜேந்திரன், பத்மினி சிதம்பரநாதன் ஆகியோருடன் கூட்டமைப்பில் இருந்து வெளியேறி தமிழ் தேசிய மக்கள் முன்னணி என்ற கூட்டணியை உருவாக்கினர். 2010 நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டமைப்பு 233,190 வாக்குகளைப் (2.90%) பெற்று 14 இடங்களை மட்டும் கைப்பற்றியது.
2013 மாகாணசபைத் தேர்தல்களில் வட மாகாணத்தில் கூட்டமைப்பு 80மூ வாக்குகளைப் பெற்று 38 இடங்களில் 30 இடங்களை எடுத்து வட மாகாண சபையைக் கைப்பற்றியது. கூட்டமைப்பின் க.வி. விக்னேஸ்வரன் வடமாகாணத்தின் முதலாவது முதலமைச்சரானார்.
2015 அரசுத்தலைவர் தேர்தலில் கூட்டமைப்பு பொது எதிர்க்கட்சி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவை ஆதரித்தது. தேர்தலில் சிறிசேன வெற்றி பெற்றார். ஆனாலும் அவரது அரசியல் கூட்டமைப்பு பங்குபற்றவில்லை.
2015 மார்ச்சில் கிழக்கு மாகாண சபையில் முஸ்லிம் காங்கிரசுடன் இணைந்து ஆட்சி அமைத்தது. இரண்டு கூட்டமைப்பு உறுப்பினர்கள் மாகாண அமைச்சர்களாக நியமிக்கப்பட்டனர்.
2015 நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டமைப்பு 515,963 வாக்குகளைப் (4.62%) பெற்று 16 இடங்களைக் கைப்பற்றியது. இரா. சம்மந்தன் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவரானார்.
2020 ஆம் ஆண்டு ஆகஸ்டில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேல்தலில் கூட்டமைப்பு 327,168 வாக்குகளைப் (2.82%) பெற்று 10 இடங்களைக் கைப்பற்றியது. இரா. சம்மந்தன் தலைவரானார்.
அதன் பின்னர் த தே கூட்டமைப்பிற்குள் பல்வேறுதரப்பட்ட பிரச்சனைகள் உருவாக்கப்பட்டது. குறிப்பாக த தே கூட்டமைப்பில் தமிழ் தேசியம் பேசியவர்கள் விடுதலைப்புலிகளின் ஆயுதப்போராட்டம் மௌனிக்கப்பட்டதன் பின்னர் தமிழரசுக் கட்சி தலைமையிலான த தே கூட்டமைப்பிலிருந்து விலக்கப்பட்டனர். த தே கூட்டமைப்பாக முன்னர் செயற்பட்டுவந்த 5 கட்சிகளுள் தமிழர் விடுதலைக் கூட்டணி, தமிழ் தேசிய மக்கள் முன்னணி, ஈ.பி.ஆர்.எல்.எப் போன்ற கட்சிகள் முதல் கட்டமாக விலக்கப்பட்டனர். அதன் பின்னர் தமிழ் தேசிய கூட்டமைப்பாக ரெலோ புளொட் தமிழரசுக் கட்சி செயற்பட்டுவந்த நிலையில் 14 ஜனவரி 2023 ஆம் ஆண்டு உள்ளுராட்சி மன்ற தேர்தலில் தனித்துப் போட்டியிடப்போவதாக கூறி கூட்டமைப்பாக ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு (DTNA) 5 கட்சிகள் பதிவு செய்துகொண்டனர்.
இந்த நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பை பிளவுபடுத்த வேண்டுமு; என்று கூட்டமைப்பு உருவாக்கப்பட்ட காலத்தில் இருந்தே சிங்கள பேரினவாதிகளால் முன்னெடுக்கப்பட்டு வந்தது. அதனை தற்பொழுது ரணில் விக்ரமசிங்க அவர்கள் கட்சிதமாக செய்துமுடித்திருக்கின்றார். இவரே தமிழீழ விடுதலைப்புலிகள் 2004 ஆம் ஆண்டு பிளவுபடுவதற்கும் முக்கியமான சூத்திரதாரியாக இருந்து செயற்பட்டவர். அவரது வெற்றிகரமான நடவடிக்கைக்கு பின்னர் யாழில் இடம்பெற்ற பொங்கல் விழாவில் ரணில் விக்ரமசிங்க அவர்கள் களந்துகொண்டு சிறப்பித்திருந்தார். இதன் போது மக்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டமும் அங்கு இடம்பெற்றது. தமிழ் தேசிய கூட்டமைப்பை பிளவுபடுத்துவதற்கு 2015 ஆம் ஆண்டு ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சி எடுத்துக்கொண்ட முயற்சிகள் தோல்வியில் முடிவடைந்தது. அதன் பின்னர் த தே கூட்டமைப்பை பிளவுபடுத்த வடகிழக்கில் 100 க்கும் மேற்பட்ட சுயேட்சை குழுக்கள் களமிறக்கப்பட்டது அதுவும் தோல்வியில் முடிவடைந்தது. கூட்டமைப்பு பதிவு செய்யப்பட வேண்டும் என ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சி எடுத்த முயற்சிகளும் தோல்வியில் முடிவடைந்தது.
காரணம் தமிழரசுக் கட்சியின் பிடியிலிருந்து ரெலோ, புளொட் கட்சிகள் விலகிவரமுடியாத சூழல் ஏற்பட்டமையே. தற்பொழுது அவ்வாறான சூழ்நிலை மாற்றப்பட்டு உள்ளுராட்சி மன்ற தேர்தல்களுக்காக வடகிழக்கில் கூடுதலான உள்ளுராட்சி மன்றங்களை கைப்பற்ற வேண்டும் என்ற நோக்கில் தாயகம் தேசியம் சுயநிர்ணய உரிமையை மறந்தவர்களாக தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனால் உருவாக்கப்பட்ட த தே கூட்டமைப்பை இராஜதந்திர ரீதியாக பிளவுபடுத்தியிருப்பதை காணமுடிகின்றது. இதன் பின்னணியில் சுமந்திரன், சம்மந்தன் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்குள் வந்தேறிகள் ஆகியோரும் இணைந்தே இதனை பிளவுபடுத்துவதற்கு முழு மூச்சாக செயற்பட்டார்கள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. –
இரணியன்