கடைசி சுற்றில் நடப்பு சாம்பியனான சீனாவின் டிங் லிரெனை வீழ்த்தி பட்டம் வென்று சாதனை படைத்தார் இந்திய கிராண்ட் மாஸ்டரான டி.குகேஷ்.

39

 

சிங்கப்பூரில் நேற்று (12) நடைபெற்ற உலக செஸ் சம்பியன்ஷிப்பின் கடைசி சுற்றில் நடப்பு சாம்பியனான சீனாவின் டிங் லிரெனை வீழ்த்தி பட்டம் வென்று சாதனை படைத்தார் இந்திய கிராண்ட் மாஸ்டரான டி.குகேஷ்.
வெற்றிக்கான நகர்த்தலை முடித்ததும் குகேஷின் கண்களில் கண்ணீர் வடிந்தது. நொடிப்பொழுதில் அவர், போர்டு முன் தலை சாய்ந்தார். இதன் பின்னர் போட்டி நடைபெற்ற அறையில் இருந்து வெளியே வந்த அவர், அங்கு காத்திருந்த தனது தந்தையை ஆரத்தழுவினார்.
சம்பியன் பட்டம் வென்ற பின்னர் டி.குகேஷ் கூறியதாவது:
உண்மையில் டிங் லிரென் ரூக்கியை எஃப் 2 இற்கு நகர்த்திய போது, நான் உணரவில்லை. நான் அதை உணர்ந்தபோது, அது என் வாழ்க்கையின் சிறந்த தருணமாக மாறியது. டிங் லிரென் யார் என்று நம் அனைவருக்கும் தெரியும். அவர் பல ஆண்டுகளாக வரலாற்றில் சிறந்த வீரர்களில் ஒருவராக இருந்து வருகிறார். அவர் போராடுவதைப் பார்ப்பதற்கும், அவர் எவ்வளவு அழுத்தத்தை எதிர்கொண்டார் என்பதை பார்ப்பதற்கும், அவர் கொடுத்த போராட்டத்திற்கும். என்னை பொறுத்தவரை அவர், ஒரு உண்மையான உலக சாம்பியன். அவர் ஒரு உண்மையான சாம்பியனைப் போலவே போராடினார். டிங் லிரென் மற்றும் அவரது அணிக்காக நான் மிகவும் வருந்துகிறேன். நான் முதலில் டிங் லிரெனுக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன். அவர், இல்லாமல் இந்த ஆட்டம் ஒரே மாதிரியாக இருந்திருக்க முடியாது.
நான் 6 அல்லது 7 வயதிலிருந்தே உலக சாம்பியன் பட்டத்தை பற்றி கனவு கண்டு வந்தேன். இந்த தருணத்துக்காகவே வாழ்ந்தேன். ஒவ்வொரு செஸ் வீரரும் இந்த தருணத்தை அடையவே விரும்புகிறார்கள். அதில் நான் இருப்பதன் மூலம் எனது கனவு மெய்ப்பட்டுள்ளது. நான் கடவுளுக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன். கேண்டிடேட்ஸ் தொடர் முதல் இங்கு வரை எனது முழு பயணமும் வெற்றியாக அமைந்தது. இது கடவுளின் அருளால் மட்டுமே சாத்தியமாகும்.
இந்த பயணத்தில் என்னுடன் இருந்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். 11 ஆண்டுகளுக்கு முன்பு உலக சாம்பியன் பட்டம் இந்தியாவிடமிருந்து பறிக்கப்பட்டது. 2013ஆம் ஆண்டு நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் ஆட்டத்தை பார்த்துக் கொண்டிருந்தேன். அப்போது அந்த கண்ணாடி கூண்டுக்குள், ஒரு நாள் நானும் இருப்பது மிகவும் அருமையாக இருக்கும் என்று நினைத்தேன். 10 ஆண்டுகளுக்கு முன்பே சாம்பியன் பட்டத்தை மீண்டும் நாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என்ற கனவு எனக்குள் இருந்தது. தற்போது பட்டத்தை வென்றுள்ளேன். இதை விட சிறந்தது எதுவுமில்லை. இவ்வாறு குகேஷ் கூறினார்.
‘தவறை உணர நேரம் ஆனது’: உலக செஸ் சம்பியன்ஷிப்பின் இறுதி சுற்றில் அதிர்ச்சி தோல்வி அடைந்த சீனாவின் டிங் லிரென் கூறும்போது, “நான் தவறு செய்தேன் என்பதை உணர எனக்கு சிறிது நேரம் பிடித்தது. இந்த ஆண்டில் எனது சிறந்த போட்டியை விளையாடினேன் என்று நினைக்கிறேன். நான் சிறப்பாக செயல்பட்டு இருக்க முடியும், ஆனால் 11ஆவது சுற்றில் கிடைத்த அதிர்ஷ்டத்தை கருத்தில் கொண்டு, இறுதியில் தோற்பது ஒரு நியாயமான முடிவே. எனக்கு எந்த வருத்தமும் இல்லை. இனிமேல் நான் தொடர்ந்து போட்டிகளில் பங்கேற்பேன்” என்றார்.
செஸ் உலகில் குகேஷ் சிகரங்களை அடைவதற்கு அவரது பெற்றோர் செய்த தியாகங்களும் நினைகூரப்பட வேண்டியது அவசியம். குகேஷின் தந்தை ரஜினிகாந்த், காது, மூக்கு, தொண்டை நிபுணர், தாய் பத்மா நுண்ணுயிரியலாளர். 2017-18ஆம் ஆண்டு குகேஷ், கிராண்ட் மாஸ்டர் நார்ம் இறுதிக்கட்டத்தை எட்டும் நிலையில் இருந்ததால் உலகின் பல்வேறு பகுதியில் நடைபெற்ற செஸ் போட்டிகளில் பங்கேற்க வேண்டி இருந்தது.
இதனால் ரஜினிகாந்த் தனது பணியை நிறுத்திவிட்டு மகனுடன் பயணிக்க தொடங்கினார். இதனால் வீட்டு செலவுகளை அவரது தாய் பத்மா கவனிக்க வேண்டிய நிலை உருவானது. பல நாட்கள் இவர்கள் நேரில் சந்தித்துக் கொள்ள முடியாத நிலை கூட இருந்துள்ளது. இவர்களது தியாகங்களின் பலனாக குகேஷ் கடந்த 2019-ம் ஆண்டு ஜனவரியில் கிராண்ட் மாஸ்டர் ஆனார். அப்போது அவருக்கு 12 வயது 17 நாட்கள்.
இதன் மூலம் அவர், இந்தியாவின் இளம் கிராண்ட் மாஸ்டர் என்ற பெருமையையும் பெற்றிருந்தார். மேலும் குகேஷின் பயணத்துக்காக சேமித்து வைத்திருந்த மொத்த தொகையையும் அவரது பெற்றோர் செலவழிக்க நேர்ந்தது.
மேற்கொண்டு நிதி தேவைப்பட்ட நிலையில் விஸ்வநாதன் ஆனந்த் அகாடமி வழியாக அதற்கான உதவியும் கிடைத்தது. இதைத் தொடர்ந்து குகேஷின் பயணம் ஏறுமுகமானது. தற்போது உலக சம்பியன்ஷிப்பில் பட்டம் வென்று விஸ்வநாதன் ஆனந்துக்கு பிறகு நாட்டுக்கு பெருமை தேடிக்கொடுத்துள்ளார்.v
SHARE