கிளிநொச்சி மாவட்ட 2024 ஆம் ஆண்டுக்கான இறுதிக்காலாண்டின் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம், கிளிநொச்சி மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்று(27) நடைபெற்றது.
குறித்த கலந்துரையாடல் கடற்தொழில் அமைச்சரும் ஒருங்கிணைப்புக்குழு இணைத்தலைவருமான ராமலிங்கம் சந்திரசேகர் அவர்களின் தலைமையின் கீழ் வடமாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் அவர்களின் பங்கேற்புடன் நடைபெற்றது.
குறித்த மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் கிளிநொச்சி மாவட்ட பதில் அரசாங்க அதிபர் எஸ்.முரளிதரன் அவர்களின் வரவேற்புரையுடனும் மாவட்டத்தின் அபிவிருத்தி விடயங்களை உள்ளடக்கிய முன்மொழிவுடன் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இதன்போது மத்திய மற்றும் மாகாண அமைச்சுக்களால் கிளிநொச்சி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பில் விளக்கமளிக்கப்பட்டதுடன், அவை தொடர்பான விடயங்கள் விரிவாக ஆராயப்பட்டன. புதிய ஆண்டில் முன்னெடுக்கப்படவுள்ள முன்மொழிவுகளுக்கான அனுமதிகளும் பெறப்பட்டன.
மேலும், கிளிநொச்சி மாவட்டத்தில் இடம்பெறும் பல்வேறு சட்டவிரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்த விசேட திட்டங்களை வகுத்தல் தொடர்பாகவும் உடனடி நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்துவதற்கான அறிவுறுத்தல்களும் வழங்கப்பட்டன.
இக் கலந்துரையாடலில் யாழ் – கிளிநொச்சி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான க.இளங்குமரன்,ஜெ.ரஜீவன்,ச.சிறீபவாநந்தராஜா,இராமநாதன் அர்ச்சுனா,சிவஞானம் சிறீதரன், செ.கஜேந்திரன், வடக்கு மாகாண பிரதம செயலாளர் எல்.இளங்கோவன், வட மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள், மேலதிக அரசாங்க அதிபர்(காணி), திட்டமிடல் பணிப்பாளர், மாவட்ட செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள், பிரதேச செயலாளர்கள், பொலிஸ் மற்றும் இராணுவ அதிகாரிகள், பல்வேறு திணைக்களங்களின் தலைவர்கள், கிளைத்தலைவர்கள், உத்தியோகத்தர்கள், பொதுஅமைப்புக்களின் பிரதிநிதிகள், பொதுமக்கள், ஊடகவியலாளர்கள் எனப் பலர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.