புத்தாண்டுக்கான கடமைகள் ஆரம்பிக்கும் நாளை (01) அனைத்து அரச நிறுவனங்களிலும் உத்தியோகபூர்வ வைபவம் இடம்பெறும் என பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு அறிவித்துள்ளது.
அமைச்சின் செயலாளர் எஸ்.அலோக பண்டார மூலம் அமைச்சுக்களின் செயலாளர்கள், மாகாண பிரதம செயலாளர்கள், திணைக்களத் தலைவர்கள், அரச கூட்டுத்தாபனங்கள் மற்றும் சட்டப்பூர்வ சபைகளின் தலைவர்களுக்கு அறிவிக்கும் சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
புதிய வருடத்தில் “க்ளீன் ஸ்ரீலங்கா” தேசிய வேலைத்திட்டத்துடன் உத்தியோகபூர்வ செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட வேண்டுமென சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பொதுத்துறை மற்றும் தனியார் துறையுடன் இணைந்து தூய்மையான இலங்கை திட்டத்தை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நாளை (01) ஜனாதிபதி அலுவலகத்தில் ஆரம்பித்து வைக்கவுள்ளார்.
அதற்கமைய அனைத்து அரச நிறுவனங்களின் தலைவர்களும் முழு அரச சேவை ஊழியர்களின் பங்களிப்புடன் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெறும் பணிகளுக்கு சமாந்தரமாக தமது பணியிடங்களில் பணிகளை ஆரம்பிக்க வேண்டுமென பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தெரிவித்துள்ளது.
“க்ளீன் ஸ்ரீலங்கா” நிகழ்ச்சித் திட்டத்தின் தேசிய வைபவத்தை அனைத்து அரச மற்றும் தனியார் இலத்திரனியல் அலைவரிசைகள் ஊடாக ஒலிபரப்புவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதுடன், அனைத்து அரச நிறுவனங்களின் ஊழியர்களும் இதனைக் காணும் வசதியை ஏற்படுத்திக் கொடுக்குமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, அனைத்து அரச ஊழியர்களும் “க்ளீன் ஸ்ரீலங்கா” உறுதிமொழியை வழங்க நேரலையில் இணைய சேவண்டும் என பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தனது சுற்றறிக்கை மூலம் தெரிவித்துள்ளது