தமிழ் அரசியல்வாதிகளின் குரல் வளையை  நசுக்கிய வரலாறே இன்றுவரை…

44

 

தமிழ்த்தேசியம், தமிழர் உரிமை என்பவற்றை எதிர்க்கண்ணோட்டத்துடன் பார்த்துவரும் தமிழ் மக்கள் மற்றும் தமிழ் அரசியல்வாதிகள் மீதான கசப்புணர்வு நீண்டகால வரலாற்றைக் கொண்டது. இலங்கையில் குடிமக்கள் அரசாட்சி ஆரம்பித்த காலம் முதல் இன்றுவரையான நாட்கள் வரையில் தமிழ்மக்கள் மீதான காட்டுமிராண்டித்தனமான அடக்குமுறைகளும், குரல்வளை நசுக்கல்களும் தொடர்ந்து வந்திருப்பதை வரலாறு உணர்த்தும். அந்நியர்களின் ஆட்சியின்போது இலங்கைக் குடிமக்கள் உள்நாட்டு அரசியல் தலைமைத்துவத்தையே விரும்பினர். இதனால் சுதந்திரத்தை வழங்கிவிட்டுச் சென்ற அந்நியர், நாட்டை ஒற்றையாட்சியின் கீழ் நடத்த ஏற்ற அரசியல் யாப்பையும் உருவாக்கிவிட்டுச் சென்றனர்.

ஆனால் பின்னாளிலேயே இலங்கையில் சிங்கள அரசியல்வாதிகளின் கபட நாடகம் தமிழருக்கு விளங்கியது. அந்நாளில் சிங்களவர்களை நம்பியிருந்த தமிழ் அரசியல்வாதிகள் பலர் வரலாற்றில் ஏமாற்றப்பட்டவர்களானார்கள். அவ் வரலாறு இன்றுவரை தொடரத்தான் செய்கிறது.
அதுபோல பின்னால் வந்த நாட்களில் சிங்கள அரசாங்கம் தமிழர்களைப் பகடைக்காயாக்கும் நிலைப்பாட்டை எடுத்துவந்ததுடன் தமது அரசியலை செம்மையுறச் செய்தும் வரலாயினர். அதற்காக சந்திரிக்கா அரசின் கைப்பொம்மையாக கதிர்காமரும், ரணில் விக்கிரமசிங்கவின் கைப்பிள்ளையாக கருணா அம்மானும், மஹிந்த ராஜபக்ஷவின் கைப்பிள்ளையாக பிள்ளையானும் மாறியமை தமிழ் மக்களின் துரதிஷ்டமே. எனினும் அன்றுமுதல் இன்றுவரை தமிழ்மக்களின் அரசியல் பிரதிநிதிகளாக தமிழரசுக்கட்சி (இந்நாளில் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு) இருந்து வந்திருக்கின்றது.

அரசியல் வரலாற்றில் மலையகத் தமிழரின் குடியுரிமையை இலங்கை அரசாங்கம் பறித்த நிலையிலும், இலங்கை குடியுரிமைச் சட்டத்தை ஏற்றுக்கொள்ள முடியாத நிலையிலும், ஒற்றையாட்சி முறை இலங்கையில் தமிழர் உரிமையுடன் வாழ்வதற்கு உகந்ததல்ல என்பதனாலும் தமிழரசுக்கட்சி உருவானது. ஆனாலும் ஆரம்பம் தொடக்கம் தமிழ் அரசியல்வாதிகள் பெரும்பான்மை அரசாங்கத்தினால் அடக்கியொடுக்கப்படும் நிலைமைக்குள்ளேயே உள்ளாகி வந்திருக்கின்றனர். 1956ம் ஆண்டு தேர்தலில் தமிழரசுக்கட்சி தமிழ்ப் பகுதிகளில் பெரும்பான்மை இடங்களை வென்று, தமிழர் அரசியலில் முன்னணிக்கு வந்தது. அதேவேளை ஆளும் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் அரசாங்கத்திலும் இணைந்திருந்தது. அப்போது மொழிக்கொள்கை முதலான முக்கிய பிரச்சினைகளில் தமிழரின் விருப்பங்களை நிறைவு செய்யும் வகையில் அப்போதைய அரசு செயற்பட்டிருக்கவில்லை. மாறாக சிங்களம் மட்டும் என்ற சட்டத்தை பிரகடனப்படுத்தியது. இதனால் அதற்கு எதிரான போராட்டங்களை தமிழரசுக்கட்சி மேற்கொண்டது. அவையணைத்தும் அரசினால் அடக்கப்பட்டன.

அதேபோல 1958இல் தமிழருக்கு எதிராக நடந்த இனக்கலவரம் தமிழ்மக்களை வெகுவாகவே பாதித்தது. செல்வநாயகம், பண்டாரநாயக்கா ஆகியோரிடையே தமிழ்மக்களின் குறைகளை ஓரளவு நிவர்த்தி செய்யக்கூடிய வகையில் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தமும் சிங்களவரின் கடும் எதிர்ப்புக் காரணமாக கிழித்தெறியப்பட்டது. அதற்கு எதிர்மாறாக ஒற்றையாட்சிக் கொள்கைமீது நம்பிக்கை வைத்து ஆட்சியிலிருக்கும் சிங்கள அரசாங்கத்தோடு ஒத்துழைத்தது தமிழரசுக்கட்சியின் தாய்க்கட்சியான தமிழ்க் காங்கிரஸ் என்பதும் குறிப்பிடத்தக்கது.

1965இல் நடைபெற்ற தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி அமைத்த அரசாங்கத்திலும் எதிர்பார்த்த எந்த நன்மைகளும் தமிழ்மக்களுக்கு தமிழ் அரசியல்வாதிகளால் பெற்றுக்கொடுக்க முடியாமல் இருந்தது. 1970இல் நடந்த தேர்தலில் சிறிமாவோ பண்டாரநாயக்கா அம்மையாரின் சிறீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் இடதுசாரிக் கட்சிகள் இணைந்த ஐக்கிய முன்னணி பதவிக்கு வந்தது. இக்கட்சியின் ஆட்சிக்காலத்தில் புதிய குடியரசு அரசியல் சட்டம் உருவாக்கப்பட்டதும், முன்னைய அரசியல் சட்டத்தில் சிறுபான்மையினருக்கு வழங்கப்பட்டிருந்த பாதுகாப்புகளை நீக்கியதும் விசேடமானதாகும். இதனை எதிர்த்த தமிழரசுக்கட்சியின் அனைத்து நடவடிக்கைகளும் பயனற்றுப்போயிருந்தன.

இதன்பின்னர் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய வகையில் தமிழ்மக்களின் பலமான கட்சியாக புனரமைக்கப்பட்டது தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு ஆகும். சுயாட்சி என்ற கோரிக்கையை பொதுவாகவே வலியுறுத்தி வந்திருந்தாலும் காலப்போக்கில் தன்னாட்சி அதிகாரம் என்ற கொள்கையின் கீழ் செயற்பட்டு வரலாயிற்று. இலங்கை அரசாங்கத்திற்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையில் நடைபெற்ற இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்காக அரசுடனும், விடுதலைப்புலிகளுடனும் பேச்சுவார்த்தைகளை நடத்தி வந்திருக்கிறது. இதற்காக பல தமிழ் அரசியல்வாதிகள் அச்சுறுத்தப்பட்டும், கொலை செய்யப்பட்டும் வந்திருக்கின்றனர்.

தமிழ்மக்களின் அரசியல் பிரதிநிதிகள் என்ற வகையில் தமிழ் அரசியல்வாதிகள் காலந்தோறும் இலங்கை அரசாங்கத்துக்கு எதிராகவே குரல் எழுப்பிவந்திருக்கின்றனர். இதனால் பல அச்சுறுத்தல்களை எதிர்கொண்டது மட்டுமல்ல, சிலர் அரசியலுக்காகவே இறந்தும் போயுள்ளனர். 2005 காலப்பகுதிகளில் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிவநேசன், ஜோசப் பரராசசிங்கம், நடராஜா ரவிராஜ் ஆகியோர் படுகொலை செய்யப்பட்டனர்.

ஜனநாயகப் பண்புகளுக்கமைய நாடாளுமன்றம் சென்று அடிவாங்கிய வரலாற்றின் தொடர்ச்சியாக 2005ம் ஆண்டு மார்ச் மாதம் இலங்கை ஆழ ஊடுருவும் படையினரின் கிளைமோர் தாக்குதலில் தமிழத்தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவநேசன் படுகொலை செய்யப்பட்டார். பாராளுமன்ற அமர்வுகளில் பங்கேற்றுவிட்டு திரும்பிச் சென்ற நிலையிலேயே அவரது மரணம் அமைந்திருந்தது. நாடாளுமன்ற பதவிக்குரிய சிறப்புரிமை பற்றி பேசிய நிலையில், பாதுகாப்பு அமைச்சர் ஜெயராஜ் பெர்ணான்டோப்புள்ளே பகிரங்க எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில் இம்மரணம் இடம்பெற்றிருந்தது.

அதனையடுத்து நத்தார் தினத்தன்று இரவுத் திருப்பலியிற் கலந்துகொண்ட தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் திரு.ஜோசப் பரராசசிங்கம் அவர்கள் திருப்பலியில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்டார். பத்திரிகையாளனாக சேவையை ஆரம்பித்து பின் அரசியல்வாதியாகி வடக்கிலும், கிழக்கிலும் இடம்பெறுகின்ற மனிதவுரிமை மீறல்களை வெளியுலகுக்கு வெளிச்சம் போட்டுக்காட்டியவர். தமிழரசுக்கட்சி, தமிழர் விடுதலைக்கூட்டணி என்று தனது அரசியற்பணியை ஆரம்பித்து பல தசாப்த அனுபவங்களைக் கண்டவர்.

அடுத்து சட்டத்தரணியாக பணியாற்றிய நடராஜா ரவிராஜ் அந்நாட்களில் பாதுகாப்புத் தரப்பினரால் கைது செய்யப்பட்டு, சிறையிலடைக்கப்பட்டு சித்திரவதைக்குள்ளான அப்பாவித் தமிழ் இளைஞர்களை மீட்பதற்கு பாடுபட்டவர். அப்பாவித் தமிழர்கள் பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட இளைஞர் யுவதிகளின் கைது விடயத்தில் ஓரளவேனும் வழக்குகளை எடுத்து விடுதலை பெற்றுக்கொடுக்க ஆர்வமுடன் செயற்பட்டவர். இதனை விட அவர்களுக்கு ஆதரவளித்து வழிகாட்டுவதிலும் கொழும்பில் முன்னின்று பாடுபட்டு வந்தார். போராட்டத்தையும், அதற்கான நியாயங்களையும், மக்கள் அனுபவித்துவந்த சொல்லொணாத் துன்பங்களையும் சிங்கள மக்களுக்கும், சர்வதேசத்திற்கும் உரிய முறையில் கொண்டுசென்றார்.

தமிழ், சிங்களம், ஆங்கிலம் ஆகிய மும்மொழிகளிலும் தேர்ச்சி பெற்றவர். தமிழர் பிரச்சினைகளை வெளிக்கொணர்வதில் உள்நாட்டு வெளிநாட்டு ஊடகங்களைச் செம்மையான முறையில் பயன்படுத்தினார். குறிப்பாகச் சிங்கள ஊடகங்களை மிகச் செம்மையான முறையில் பயன்படுத்தி தமிழர் போராட்டத்தின் நியாயங்களையும், தமிழர் தாயகத்தின் உண்மை நிலைமைகளையும் உடனுக்குடன் சிங்கள மக்களிடம் எடுத்துக் கூறினார். இதனால் இவரது அரசியல் செயற்பாடுகள் இராணுவத்திற்கும், அரசிற்கும் தலையிடியாய் அமைந்தது. இவரது இந்தப் பணிதான் அவரது உயிரைப் பறிப்பதற்கும் முதன்மைக் காரணமாக இருந்தது.

தெற்கிலுள்ள சிங்களக் கடுங்கோட்பாட்டாளர்கள் புலமைவாய்ந்த தமிழ் அரசியல்வாதிகளை எப்போதும் விட்டுவைக்க முயல்வதில்லை என்பதற்கு இச்சம்பவங்களே போதுமானவை. இவர்கள் தவிர பல ஊடகவியலாளர்கள் தமிழ் மக்களின் பிரச்சினைகளை எழுதியதால் மாண்டுபோன வரலாறுகளும் இருக்கத்தான் செய்கின்றன.

இத்தகைய வரலாற்றிலிருந்து மீளெழ முடியாதவர்களாக தமிழ்மக்கள் உள்ளனர். இதனால் தான் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பை இப்போது வடக்கில் பலப்படுத்தியுள்ளனர். ஆனால் வடமாகாணசபையின் ஆட்சியதிகாரத்தை நிலைநிறுத்துவதிலும், கொண்டு செல்வதிலும் பல முட்டுக்கட்டைகளை இலங்கை அரசாங்கமும், தமிழினத்துக்குள்ளேயே இருக்கும் அரச தரப்பு அரசியல்வாதிகளும் போட்டு வருகின்றனர். தமிழ்த்தேசியம் மற்றும் தமிழர் உரிமை ஆகியவை பற்றி தொடர்ச்சியாகப் பேசிக்கொண்டிருக்கும் நிலையில் இன்று சர்வதேச ரீதியாக இதன் பார்வை கவனம் பெற்றிருக்கிறது.
தமிழர்களின் உரிமை பற்றிப் பேசுவதற்கு இலங்கைத்தீவிலுள்ள ஒரே அமைப்பு தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு. இதனால் கூட்டமைப்பிற்குள் இருக்கும் ஒற்றுமையைச் சிதைத்து கட்சியை அடியோடு அழித்துவிடவும் மஹிந்த அரசு சில மாற்றுக்கட்சிகளைப் பயன்படுத்திக்கொண்டு செயற்பட்டுவருகிறது. இவை தவிர சர்வதேச ரீதியிலான போர்க்குற்ற விசாரணை குறித்த பேச்சுக்கள் பலமடைந்திருக்கின்ற நிலையில் அரசாங்கத்தின் நேரடியான கோபம் தமிழ் அரசியல்வாதிகள் மீதே சென்றிருக்கிறது.
தற்போது வடக்கு மாகாண சபையினருக்கும், அரசாங்கத்திற்கும் இடையில் முறுகல் நிலைமை தொடர்ந்து வருகிறது. வடக்கு மாகாண சபை வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதில் சிரமமான சூழல் நிலவுகின்றது. மாகாண சபையில் முன்வைக்கப்படுகின்ற பிரேரணைகள் அரசாங்கத்துக்கு அதிருப்தி ஏற்படுத்துபவையாக அமைகின்றன. தம்மோடு இணைந்து செயற்படவேண்டும் என்பதையே அரசாங்கம் விரும்புகின்றது. ஆனால் அதற்கு இசைந்து போகும் நிலையைத் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு எப்போதும் எடுக்கப்போவதில்லை.

 

மறவன் thinappuyal news

SHARE