இலங்கை நாடாளுமன்றத்தின் வீட்டு பராமரிப்புத் துறையின் பெண் ஊழியர்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாகக் கூறப்படும் சம்பவத்தில், அத்துறையின் உதவி பராமரிப்பு நிர்வாகி உட்பட மூன்று பேரை பணிநீக்கம் செய்ய சபாநாயகர் டாக்டர் ஜகத் விக்ரமரத்ன முடிவு செய்துள்ளார்.
சம்பவம் குறித்து விசாரணைகளை நடத்திய ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி குசலா சரோஜினி வீரவர்தன தலைமையிலான குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் சந்தேகநபர்களை சபாநாயகர் இந்த முடிவை எடுத்துள்ளார்.
துஷ்பிரயோகங்கள் மற்றும் பாலியல் துன்புறுத்தல்கள்
கடந்த 2023 ஆண்டு ஆகஸ்ட் இல் இந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் நடந்ததாகக் கூறப்படுகிறது.
இந்தத் தகவல் வெளியான பிறகு, இந்த விவகாரத்தை விசாரிக்க நாடாளுமன்றச் செயலாளர் நாயகம் சட்டத்தரணி குஷானி ரோஹணதீரவால் உள்ளக விசாரணைக் குழு நியமிக்கப்பட்டது.
இந்தக் குழு சமர்ப்பித்த முதற்கட்ட விசாரணை அறிக்கையின் அடிப்படையில், சம்பவம் குறித்து மேலும் விசாரணைகளை நடத்துவதற்காக, ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி குசலா சரோஜினி வீரவர்தன தலைமையிலான இந்தக் குழுவை நாடாளுமன்றச் செயலாளர் நாயகம் நியமித்தார்.
இந்தக் குழுவின் அறிக்கை சமீபத்தில் நாடாளுமன்றச் செயலாளர் நாயகத்திடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த பாலியல் துன்புறுத்தல் சம்பவம் தொடர்பாக நாடாளுமன்ற இல்ல பராமரிப்புத் துறையின் 15 ஊழியர்களிடமிருந்து இந்தக் குழு வாக்குமூலங்களைப் பதிவு செய்தது.
புலனாய்வு அதிகாரிகள் வாக்குமூலம்
இதற்கிடையில், நாடாளுமன்றத்தின் தகவல் அமைப்புகள் மற்றும் மேலாண்மைத் துறையில் சில பெண்களுக்கு எதிராக நடத்தப்பட்டதாகக் கூறப்படும் பல்வேறு துஷ்பிரயோகங்கள் மற்றும் பாலியல் துன்புறுத்தல்கள் தொடர்பாக, நாடாளுமன்றச் செயலாளர் நாயகத்தின் உத்தரவின்படி, தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது.
சம்பவத்தை ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரகுமான் கடந்த 7 ஆம் தேதி நாடாளுமன்றத்தில் வெளியிட்டார்.
இதனையடுத்து சம்பவம் தொடர்பாக புலனாய்வு அதிகாரிகள் ஏற்கனவே துறையின் பல ஊழியர்களிடமிருந்து வாக்குமூலங்களைப் பதிவு செய்துள்ளனர்.
இதற்கிடையில், துன்புறுத்தல் சம்பவம் குறித்து வெளிப்புற சுயாதீன விசாரணை ஒன்றை நடத்துமாறும் நாடாளுமன்ற ஊழியர்கள் சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.