இராவணன் பற்றிச் சமூக வலைத்தளங்கள் வழியே கட்டமைக்கப்படும் பெருமிதங்களும், தகவல் பிழைகளும் தொடர்ச்சியாக இணையத்தை மட்டும் தங்களின் அறிதல் வழியாகக் கொண்ட குறிப்பிட்ட அளவு மக்களை வரலாறு, பண்பாடு தொடர்பில் புரிதலற்ற நபர்களாக கட்டமைத்துக்கொண்டிருக்கின்றன.
தொன்மங்களாக கருதப்படக்கூடிய புராணங்கள்/ இதிகாசங்களையும், வரலாற்றையும் வேறுபடுத்திக் காணத போது சமூகத்தின் பொது அபிப்பிராயத்திலும் பொதுப்புத்தியிலும் அறியாமையின் அபாயங்கள் கிளைவிடுகின்றன. இலங்கையின் பாராளுமன்றத்தில் ஒரு சிங்கள அரசியல்வாதி இராவணனை சிங்கள மன்னன் என்கிறார். இந்தா நாங்கள் என்ன சளைத்தவர்களா என்று தமிழ் பாராளுமன்ற உறுப்பினர் வால்மீகிக்கு எழுத மை தீர்ந்த போது பிள்ளையார் தன் தந்தத்தை முறித்து எழுதியதே இராமாயணம் என்று மகாபாரதம் எது இராமாயணம் எது என்று தெரியாது குழப்பியபடியே பேசுகிறார்.
அவர் தனிமனிதராக தமிழ்ச்சமூகத்தின் பெரும்பான்மைத்தரப்பின் வரலாறு , தொன்மங்கள் பற்றிய புரிதலின் பொதுப்புத்தியினது பிரதிநிதியாக நிற்கிறார். பாராளுமன்றில் மட்டுமல்ல சமூக வலைத்தளங்களிலும் தமிழ்ச்சமூகத்தின் இலத்திரனியல் வெளிகளிலும் இதே நிலைமை. இராவணன் என்ற தொன்மத்தை தங்களது ஆக்கிக்கொள்ள பேரினவாதிகள் கடந்த பத்தாண்டுகளுக்குள் அது பற்றிய பொது அபிப்பிராயத்தையும் கதைகளையும் உருவாக்கிக்கொண்டு இராவணன் சிங்கள மன்னன் என்ற பரப்புரைகளை முன்னெடுக்கின்றனர். தமிழர்களும் தீவிரமாக இராவணனை ஒரு தமிழ் மன்னனாகவும் தம் ‘முன்னோனாகவும்’ கருதிக்கொண்டு அவனை முன் வைத்து தங்களின் பெருமைகளை பகிர்ந்துகொள்கின்றனர். இந்த இரண்டு பக்கமும் நடப்பவை அனைத்தும் ‘அஞ்சியத்திற்குப் பெறாத’ விதண்டாவாதங்கள். ஏனெனில் இவர்களின் அனைத்து வாதங்களும், இட்டுக்கட்டல்களும் அடிப்படையான ஒரு உண்மையை காணமுடியாத அளவுக்கு மழுங்கி இருக்கின்றன. இராவணன் என்பது தொன்மக்கதையே அன்றி வரலாற்றுப்பாத்திரம் அல்ல என்ற உண்மைதான் அது.
இலங்கை, இந்தியச்சூழல் முழுவதும் நன்கு அறியப்பட்ட இராவணத் தொன்மம் ஒரு புராண , இதிகாச தொன்மமேயன்றி ஒரு வரலாற்றுப்பாத்திரம் கிடையாது. புராண, இதிகாசங்களின் முதல் வாய்மொழி மரபு வரை வியாபித்திருக்கும் இராவணன் என்ற தொன்மம் ஒரு வரலாற்றுப்பாத்திரம் என்பதற்கு எந்த அறிவியல் பூர்வமான சான்றுகளும் கிடையாது. இராமாயணக் கதை நிகழ்ந்த காலமோ நிகழ்ந்ததற்குரிய வரலாற்றுச்சான்றுகளோ கிடைக்கவில்லை. இலக்கிய மூலாதாரங்கள் என்ற வகையில் எழுதப்பட்ட அனைத்தையும் வரலாறாக எடுக்க முடியாது. குறிப்பாக புராண, இதிகாசத் தொன்மங்களை கதைகளை காலவரிசைப்படுத்தி அடுக்கிவிட முடியாது.(பஞ்சாங்கம்.க:2011) இலக்கியங்கள் நடந்ததை நடந்தபடி கூறுவன அல்ல அவற்றுக்குரிய எல்லைகள் வரலாற்றின் எல்லைகள் அல்ல. வரலாறு புராண இதிகாச கதைகளை/ தொன்மங்களை வரலாற்று மூலாதாரங்கள் மூலம் உறுதிப்படுத்துவதுண்டு. ஆனால் அவற்றை வரலாறாக கொள்வதில்லை. இந்தியாவின் மிகப்பெரிய தொன்மங்களில் ஒன்றான இராமாயணம் அத்தைகைய ஒன்றுதான்.
தொன்மங்கள் பொய்யா? அல்லதுஅவை தேவையற்றவையா என்ற கேள்வி இப்பொழுது எழலாம். தேவைதான். சமூகத்தையும் பண்பாட்டையும் புரிந்துகொள்வதற்கு தொன்மங்கள் சமூக அறிவியலில் பெரிய பங்கெடுக்கின்றன. கலையாக்கங்களில் முக்கிய பகுதியாக இருக்கின்றன, மானிடவியல் போன்ற ஆய்வுகளில் , சமூக உளவியலில் தொன்மங்களின் பங்கு முக்கியமானது.தொன்மத்தை அறிந்து
இராம – இராவண கதைகள் வெவ்வேறு வடிவங்களிலும் வெவ்வேறு அரசியல் பண்பாட்டு பின்னணியிலும் பயிலப்படுகின்றன. வெவ்வேறு சூழல்களில் இராவணனை வெவ்வேறு விதமாக சித்தரிக்கப்படுகிறான். அடிப்படையான ஒரு கதையை வைத்துக்கொண்டு அதன் அர்த்தங்கள், அறங்கள், நிலக்காட்சிகள், பண்பாடுகள், தத்துவ தரிசனங்களை மாற்றியமைத்துக்கொள்கிறார்கள். ஆய்வாளர் அ. கா. பெருமாளின் ‘இராமன் எத்தனை ராமனடி’ என்று நூலொன்று உள்ளது. இராம தொன்மங்கள் அது அறியப்படும் பல்வேறு வகையான பண்பாடுகளைக் குறித்து ஆய்வு செய்யும் நூலது. உலகில் பல்வேறு இராமாயணங்கள் உண்டு, அத்தனை இராமர்களும் உண்டு. உலகம் முழுவதும் இத்தனை மாற்றுப்பிரதிகள் கொண்ட காவியங்கள் குறைவு. இராம கதை இடம் , இனம், மதம் என்று பல்வேறு விதமாகக் சொல்லப்பட்டுக்கொண்டே இருக்கிறது. எல்லா இந்திய மொழிகளிலும் பெரும்பான்மையான தெற்காசிய மொழிகளிலும் இராமாயணங்கள் இயற்றப்பட்டுள்ளன. இந்திய இராமர்கள் தவிர சீன, மலேசிய, கம்போடிய இராமர்களும் இருக்கிறார்கள். இந்துக் கடவுளாக வழிபடப்படும் இராமன் பவுத்தக் கடவுளாகவும் சமணக் கடவுளாகவும் சித்தரிக்கப்படுகிறான். பெருங்காப்பியங்களாக மட்டுமன்றி உள்ளூர் நாட்டார் வழக்கிலும் இராமகதைகள் ஏராளம் உள்ளன. என்று அவருடைய உரையாடல் விரிந்து செல்கிறது. (பெருமாள் அ. கா: 2010 )
கதையில் பிரதான எதிர்நிலையாக இருக்கும் இராவணன் இராமன் அளவிற்கு வெவ்வேறு அர்த்தமும் மாறுதலும் கொண்ட இராவணனாக அறியப்படுகிறான். உதாரணமாக முக்கியமான இராமாயண வடிவமாக அறியப்படும் வால்மீகி இராமாயணம் கடவுள் பூமிக்கு இறங்கி மானுட வடிவமாக வந்தால் அவன் எப்படி ஒரு இலட்சிய புருஷனாக வாழ்வான் என்பதைச் சொல்கிறது. ஆனால் தமிழ்க் காப்பியமான கம்பராமாயணம் மகத்தான குணங்களாலும், இலட்சியமிகுந்த வாழ்க்கையையும் கொண்டு வாழும் ஒருவன் எப்படி தெய்வமாக வைக்கப்படுகிறான் என்பதாக இராம கதையைச் சொல்கிறது. ஏனெனில் தொன்மங்களை புனைவுக்கும், மாற்றத்திற்கும் உட்படுத்த முடியும். ஆனால் வரலாற்றையோ அதில் இயங்கும் பாத்திரங்களையோ தொன்மத்தைப்போல மாற்றியமைக்க முடியாது. அடிப்படையில் வரலாற்றுப்பாத்திரங்கள் சமூக விஞ்ஞான/ விஞ்ஞான ஆய்வுகளினாலேயே அணுகப்படக்கூடியவை. அதாவது வரலாற்றுச்சான்றாதாரங்கள் மூலம் நிறுவப்படக்கூடியவை. ஆனால் தொன்மங்கள் வரலாற்று மூலாதாரங்கள் அற்றவை. முறையான எந்த வரலாற்று , மானிடவியல் ஆய்வுகளாலும் ‘நடந்த உண்மையாக’ நிறுவப்பட முடியாதவை. அவற்றுக்கு இருக்கும் பெறுமானம் என்பது அவை பேசும் பொருளும் அத்தொன்மம் பயிலப்படுவதன் நோக்கமும் தான். உதாரணமாக கடவுள் தான் இந்த உலகத்தைப் படைத்தார் என்பது மதங்கள் சொல்லும் கொள்கையாகும், அது பற்றி தொன்மங்கள் கதைகளை உருவாக்குவதன் மூலம் மத நம்பிக்கையாளர்களும் அதன் மதத்தலைவர்களும் ஒவ்வொரு காலத்திலும் அவற்றை நம்பிக்கை அடிப்படையில் நிறுவுகின்றார்கள். நகுலாத்தை நாவலில் ‘தெய்வத்த இருத்தோணும் எண்டால் அங்கை ஒரு கதையை இருத்தோணும்’ என்று எழுதியிருப்பேன். தொன்மங்களுக்கு அடிப்படையானது அது பற்றிய ‘செய்தி அல்லது கதைகள்’ தாம். வரலாற்றுக்கு கதைகள் மட்டும் போதுவதில்லை. அது ஆதாரங்களக் கோருவது, காலத்தை அறிவது.
யாரேனும் உங்களை கடவுள் இருப்பதற்குரிய வரலாற்று ஆதாரங்களைக் காட்டுங்கள் என்றால் பைபிள், வேதம், குர் ஆன் போன்ற சமய மூல நூல்களையோ அல்லது புராண இதிகாசங்களையோ எடுத்துக்காட்டி விட முடியாது அல்லவா? ஏனெனில் மூல நூல்களில் தொன்மங்கள் வரலாறாக தரவுபடுத்தப்பட்டிருக்காது. மாறாக அவை கதைகள், நம்பிக்கைகள், வழக்காறுகள் போன்றவற்றினாலேயே விளக்கப்படும். நீங்களே யோசித்துப்பாருங்கள் பைபிளையோ கீதையையோ நீங்கள் கதைகள், நெறிகள் என்று சொல்வீர்களா வரலாறு என்று சொல்வீர்களா? வரலாற்றில் இருக்கும் தகவல்கள் சம்பவங்கள் சில சமயங்களில் புராண இதிகாசங்களில் இருக்கலாம் ஆனால் அந்த புராணத்திலோ இதிகாசத்திலோ அவை வரலாறாக கருதப்படுவதில்லை. அதேபோல் வரலாற்றுச் சம்பவங்களை புராணங்கள் எடுத்துக்கொண்டிருக்கலாம், அதனால் அவற்றை வரலாறு என்று சொல்ல முடியாது. நவீன இலக்கியங்களில் நாவலொன்றில் குறிப்பிடப்படும் ஒரு கதை உண்மையில் நடந்து இருக்கலாம் அல்லது கற்பனையாக இருக்கலாம் ஆனால் அது ஒரு வரலாறாக அணுகப்படுவதில்லை. அது ‘புனைவு’ என்றே அணுகப்படும், வாசிக்கப்படும். ஆக இராவணன் என்னும் தொன்மத்திற்கும் அத்தகைய ஒரு பெறுமானமே உள்ளது. குறிப்பாக இராவணனுடைய வரலாற்றுச் சுவடுகள் இருக்கின்றன, இராமாயணத்தின் வரலாற்றுச்சுவடுகள் இருக்கின்றன என்பதெல்லாம் இட்டுக்கட்டப்பட்டவையே தவிர உண்மைகள் இல்லை. அல்லது அவை புராண இதிகாச கதைகளினால் பின்னர் ‘குறிப்படுத்தப்பட்டவையே’ அன்றி அவை வரலாற்று ஆதாரங்கள் அன்று.சொல்லப்போனால் இராமாயணம் நிறையவே fantasy அல்லது அதி கற்பனைகளைக் கொண்ட ஒரு பிரதி. அதனுடைய புனைவுச்சிக்கல், தத்துவ தரிசனம் என்பவற்றுக்கு நிகராக அது எல்லோராலும் அறியப்படுவதற்கும் பிரபலமடைந்ததற்கும் அதன் அதிகற்பனைவாதமும் ஒரு காரணம் இல்லையா? நம்மில் பெரும்பான்மையானோர், வால்மீகி இராமாயணமோ கம்பராமாயணமோ வாசித்திருக்கிறோமா? செவி வழி வந்த இந்தக் கதைகளை பல்வேறு இடங்களில் நபர்களில் கேட்டுத்தெரிந்து கொண்டோம். தொலைக்காட்சி தொடர்களில் பார்த்தோம், படக்கதைகளாக வாசித்தோம். நாம் அவற்றின் மூலம் இராம – இராவண கதையின் அடிப்படையான கதையை அறிந்துகொண்டோம், அதே போல அதன் கிளைக் கதைகளையும் தனித்தனியாக அறிந்துகொண்டோம். இப்போது சொல்வது போல யாரும் அது ஒரு வரலாற்றுக்கதை என்று சொல்லித்தந்த ஞாபகமே இல்லை. ஏனெனில் அதை உண்மை/ வரலாறு என்றால் நாம் யாரும் நம்பமாட்டோம் இல்லையா?
இராவணனை எடுத்துக்கொள்வோம், இராமாயணம் மூலம் அல்லது இராமர் பற்றிய ஏனைய தொல் கதைகள் மூலம் நாம் இராவணனை அறிகிறோம். அதுவும் நம்முடைய தீவில் வசிக்க கூடிய இரண்டு இனத்தவர்கள் இராவணன் எங்களுடைய மன்னன் என்று அடித்துக்கொள்கிறோம் ஆனால் இலங்கையின் வரலாற்று எழுத்தில் , தொல்பொருள் ஆய்வுகளில் இராவணன் பற்றி உறுதியான தகவலைப் பகிரக்கூடிய ஒரு நாணயக் குற்றியேனும் கிடைத்துள்ளதா?
இராம – இராவண தொன்மங்களுடன் தொடர்புடையவை என்று நம்பப்படுகிற சில பெளதீக கூறுகளைப் எடுத்துக்கொள்வோம். இராமர் பாலம், அசோகவனம் (சீதா எலிய – நுவரேலியா) , இராவணன் வெட்டு (கோணமலை) , அனுமன் காலடி (நெடுந்தீவு) , அனுமன் தள்ளாடிய இடம்(தள்ளாடி – மன்னார்) இவை தவிர சரசாலை (இராமனின் படைக்குரிய சரங்கள் அல்லது அம்புகள் செய்யப்பட்ட இடம்), மட்டுவில் (இராமன் வில்லை ஊன்றிய இடம்) , இராவணன் மீசை (ஒருவகைப் பூண்டு) இப்படி இருக்கும் பெளதீக விடயங்களை- அவற்றின் பெயர்களை பகுத்தறிவோடு நுணுகிப்பார்த்தால் அவை இராம, இராவண கதைகளின் களம் என்பதால் இலங்கையில் புனைவு படுத்தப்பட்ட இடங்களே அன்றி வரலாற்றுக்காலத்தில் இருந்து வந்தது என்பதற்கு எந்த ஆதாரங்களோ தர்க்கங்களோ இல்லை என்பது புலனாகும். இராமர் பாலம் என்னும் இந்திய இலங்கையை இணைக்கும் கடல் மேடை ஓர் இயற்கையான அமைப்பு , ஆய்வுகளின் படி இராமாயணம் எழுதப்பட்டிருக்கலாம் என்று கருதப்படும் நூற்றாண்டுகளுக்கு முன் இயற்கையாக உருவான கடற்படுக்கை என்று ஆய்வுகள் நிறுவியுள்ளன. ஆனால் அது இராமர் இலங்கையை அடைய அவர் நாமம் எழுதிய கல்லைக்கொண்டு வானரங்கள் கட்டிய பாலம் என்பது கற்பனை மட்டுமே அன்றி வேறில்லைத்தானே? ஏற்கனவே இருந்த புவியியல் அம்சம் மீது இராமனுடைய கதை ஏற்றப்பட்டுள்ளது. அதைப்போல் இராவணன் தன் தாய்க்காக மலையைப்பிளந்த இடம் தான் திருகோணமலை இராவணன் வெட்டு என்பது அதன் கர்ணபரம்பரையான தொன்மக்கதை ஆனால் ஆய்வு செய்து பார்த்தால் அந்தப்பாறைக்கு மனித நாகரீகத்தை விடவும் வயது அதிகம் இருக்கும் இல்லையா? அதைப்போல்தான் காலடி போல இயற்கையில் இருக்கும் அமைப்புக்கள் இராமனின் காலடி என்று சொல்லப்படுவதும். இவை அனைத்தும் இராம – இராவண புராணங்களும் , கதைகளும் இதிகாசங்களும் அடைந்த செவ்வியல் தன்மையும் பரவலினாலும் உண்டானவை. தமிழில் வடமொழித் தொடர்புகளின் ஊடாகவும், வாய்மொழி மரபுகளின் ஊடாகவும் இராமர் தமிழ்ச்சமூகத்தினுள் நுழைகிறார். பல்வேறு வகையான இராம கதைகள் சொல்லப்பட்டாலும், தமிழ் நாட்டில் வாழ்ந்த கம்பரால் இயற்றப்பட்ட செவ்வியல் பேரிலக்கியமான கம்பராமாயணம் மு
’மை வண்ணத்து அரக்கி போரில், மழை வண்ணத்து அண்ணலே உன் கைவண்ணம் அங்கு கண்டேன்
என்று இராமரை கரிய கார்முகிலைப் போன்றவன் என்கிறார். வால்மீகி சொல்லாத பல கிளைக்கதைகளை வாய்மொழி மரபில் இருந்து எடுத்து தன் இராம கதையில் இணைக்கிறார். உதாரணத்திற்கு இராமர் பாலம் கட்ட அணிலும் புலுணியும் உதவிய கதை வால்மீகி இராமாயணத்தில் கிடையாது. இப்படி கம்பராமாயணத்தை தமிழ்ப்பண்பாட்டுக்குரிய காப்பியமாக வாசிக்கிற நிறைய உரையாடல்கள் தமிழில் உள்ளன. தமிழ் நாட்டில் இராம கதை செல்வாக்குப் பெற்றிருந்ததைப்போலவே இலங்கையிலும் தமிழ்ச்சமூகத்தில் இராமகதை அது பயின்ற காலங்களில் பிரபலமானது. இரகுவம்சம் என்ற காளிதாச மகாகவி எழுதிய இராமர் பிறந்த வம்சத்தின் கதையை அதே பெயரில் கி.பி. 16 அல்லது 17 நூற்றாண்டுகளில் இலங்கையில் வாழ்ந்த அரசகேசரி என்னும் புலவர் தளுவி இங்கொரு தமிழ் இரகுவம்சத்தைக் எழுதியிருக்கிறார். கம்பர் முதலான எல்லா இராமாயணக் கதைகளிலும் இராவணனுக்கு இராமனுக்கு இணையான அல்லது இராமனுக்கு அதிகப்படியான பராக்கிரமங்களே வழங்கப்படுகின்றது. இங்கே இராமனால் இராவணன் கொல்லப்படுவது அவன் அறம் பிழைத்த களத்தினால் நிகழ்வதாகும். அதாவது பிறன் மனைவியை கவர்ந்தவன் என்ற பெரிய அதர்மத்திற்கான தீர்ப்பாகவே இராணன் வீழ்த்தப்படுகின்றான். அதாவது இராம கதையினுடைய பிரதான முரணாகவும் சரடாகவும் இருப்பது அடிப்படையில் இராவணனைச் சார்ந்தே இருக்கின்றது. அதனால் இந்தியாவில் இராம தொன்மங்களும், இலங்கையில் இராவண இராம தொன்மங்களும் பல்வேறு வடிவங்களில் பகிரப்பட்டன. கதை, வாய்மொழி மரபுகள், கூத்து, நாடகம், மேடைப்பேச்சு, பட்டிமன்றம் போன்ற கலை இலக்கியம் சார்ந்ததாகவே தமிழ்ச்சமூகத்தில் இராவணன் உருப்பெற்று வந்திருக்கிறான். குறிப்பாக இராவணன் பற்றிய மாற்றான உரையாடல்களும் தமிழில் எழுந்து வந்தன. இந்து மதத்தில் மட்டும் இராமர், சீதை, அனுமார் போன்றவர்கள் கடவுளர்களாக அவதாரங்களாக வைக்கப்படவும் அதே வேளை நவீன தமிழ்ச்சமூகம் இராமனையும் இராவணனையும் மறுவாசிப்பிற்கும் உட்படுத்தியது. சனநாயகம் பகுத்தறிவுச்சிந்தனை போன்றவை உருவாகி வரும் காலங்களின் பின்னணியில் இராமர் மீது அறம் சார்ந்த கடுமையான கேள்விகள் கலை இலக்கியங்களிலும் , பொதுப்புத்தியிலும் எழுப்பப்படுகின்றன. அத்தோடு அரசியலிலும் இராமர் ஒரு ஆரிய ஆக்கிரமிப்பின், இந்து மதவாதத்தின் குறியீடாகவும் வழியாகவும் கருதப்படத்தொடங்கினார். அதே வேளை இராவணன் ‘வில்லன்’என்ற பாத்திரத்தில் இருந்து ஒரு இனத்தின் முக்கியமான மன்னன் என்ற இடத்திற்கும் முன்னோர் என்ற பெருமையை நோக்கியும் நகர்த்தப்படுகிறான். இராவணனை, இராமன் மீது தர்க்க பூர்வமான மாற்றுக்கேள்விகளை எழுப்புவதன் மூலம் அறப்பிறழ்வில் இருந்து, காப்பாற்றி இலங்கை வேந்தன் என்றும், அத்தோடு இன அடையாளங்களையும் வழங்குகின்றனர். இவற்றை இராம- இராவண அரசியல் பின்புலங்களை முன்வைத்து விரிவாக உரையாடுவோம்.
தமிழ்ச்சமூகத்தில் இராமனும் இராவணனும்
கொலனித்துவத்தின் பின்னர் இந்திய சுதேச அரசுக்குள் மெல்ல மெல்ல வளர்ந்த இந்து மதவாதம் இன்றைக்கு அம்மதவாதிகளிடம் மொத்த ஒன்றிய அரசின் அதிகாரத்தையும் தூக்கி வழங்குமளவிற்கு உருப்பெருத்துள்ளது. தமிழ்நாடு உட்பட்ட ஒரு சில மாநிலங்களைத்தவிர இந்த இந்து மதவாதத்திற்கு மண்டியிட்டன, இவ் மதவாதம் இஸ்லாமிய எதிர்ப்பு, ஹிந்தி திணிப்பு, இந்துமத அடையாளங்களுக்கான வன்முறை, பண்பாடுகளுக்கு எதிரான மூட நம்பிக்கைகள், சாதியம், ஆணாதிக்கம் போன்ற பிறழ்வுகளினால் வளர்த்தெடுக்கப்பட்டது. அதற்காக இந்துக்கடவுளர்களில் முக்கியமான இராமரையே பிரதான மையமாக கொண்டு இனவாதமும், கலவரங்களும், படுகொலைகளும் இன்றைக்கு வரைக்கும் நடக்கின்றன. இராம பக்தரான இந்தியாவின் தந்தை காந்தியார் இராம நாமத்தை உச்சரித்தபடியே அவர்களால் கொல்லப்படுகிறார். ஆர் எஸ் எஸ், இந்துத்துவா போன்ற மதவாத பாசிச அமைப்புக்களின் பிரதான இரட்சகராக இராமரே நிலைபெறுகிறார்.
அயோத்தியில் 1992 இல் இராமர் பெயரைச் சொல்லி அங்குள்ள மசூதியை இடித்தார்கள் , பெரிய கலவரமும் வன்முறையும் வெடித்தது. அக்கலவரம் இந்தியாவின் ஆன்மாவை உலுக்கியது. அத்தோடு ஹிந்தியை திணித்துக்கொண்டு வட இந்தியாவில் வியாபித்திருந்த மத வாதத்தைக் கொண்டு அதிகாரத்தைக் கைப்பற்ற இன்றைக்கு வரைக்கும் இராம நாமம் ஜெபிக்கும் இந்திய மதவாத அமைப்புகள் இயங்கிக்கொண்டே இருக்கின்றன. இன்றைக்கு ஆட்சியில் இருக்கும் மோடிதலைமையிலான பா.ஜ.க கட்சி தீவிரமாக இராமர் பெயரில் இந்தியாவை மத வாத நாடாக மாற்றி ஆட்சி செய்கிறது. இந்தியாவின் ஆன்மா செத்துக்கொண்டிருக்க பல்லாயிரம் கோடி செலவில் இராமருக்கு கொவில் எழுப்புகிறது. இந்துத்துவ அமைப்புக்கள் இராம கோசத்துடன் படுகொலைகள், வன்செயல்களில் ஈடுபடுகின்றனர். மேலும் வட இந்தியாவைப் பொறுத்த வரையிலும் இன்றைக்கு வரைக்கும் இராவணன் கொடுமையான அரக்கன், அறமற்று பிறன் மனைவியைக் கவர்ந்தவன். இராமரின் பிரதான சத்துரு. அங்கே தசரா என்னும் பண்டிகையில் ஒவ்வொரு வருடமும் இராவணனின் பேருருக்கள் கொழுத்தப்படுகின்றன. இராவணன் வீழ்த்தப்பட்டுக்கொண்டே இருக்கிறான். இந்தப்பின்னணியில் திராவிட இயக்கம், அதுசார் கருத்தியலும் செயற்பாடுகளும் 20ஆம் நூற்றாண்டில் இந்த இராமரை மையம் கொண்ட மதவாத, மொழி அக்கிரமிப்புகளுக்கு எதிராக எழுந்து வருகின்றன. ஹிந்தி எதிர்ப்பு, தொடங்கி இராமர் வழியாக நுழையும் மதவாதம் வரை அக்கருத்தியல் முட்டுக்கட்டை போடுகின்றது. அதன் ஊடாக வரும் சாதி, மதவாதம் என்பவற்றுக்கு எதிராக தமிழ்நாட்டில் பலமான இயக்கமும் கருத்தியலும் எழுந்து நிற்கின்றது. அதனுடைய பகுத்தறிவுத்திரையை இன்றுமட்டும் இந்து மதவாதிகளால் அதை தகர்க்க முடியவில்லை.
பிரதான அரசியலில் இந்த மதவாத எதிர்ப்பு, சாதிய எதிர்ப்பு ,சனாதன எதிர்ப்பு முதலியன நடக்கும் போது முன்பு சொன்னதைப் போல் கலை இலக்கியங்களில், மேடைப்பேச்சுகளில் இராமர் – இராவணன் பற்றிய பகுத்தறிவு வாதத்தின் தாக்கம் மிக்க மாற்று உரையாடல்களும் கேள்விகளும் அதிகமாக எழுகின்றன. முக்கியமாக சீதையின் நடத்தையில் சந்தேகம் கொண்டு இராமன் அவளை அக்கினிப்பிரவேசத்திற்கு இழுப்பதன் கதையைச் சுட்டிக்காட்டி அவனுடைய அறத்தின் மேல், கேள்விகள் எழுப்பப்படுகின்றன. தமிழில் புதுமைப்பித்தன் எழுதி பிரபலமான ‘சாபவிமோசனம்’ என்ற கதை அகலிகையின் பார்வையில் சீதையின் அக்கினிப்பிரவேசத்தை அவளோடு உரையாடுவது போல் அமைக்கப்பட்ட ஒரு நல்ல கதைப்பிரதி. இராமன் மீது கடுமையான கேள்விகளை எழுப்பும் அதே வேளை இராவணனை வேறொரு நியாத்தினால் அதே ராமாயணக் கதையில் குறிப்பிடப்படும் நிகழ்வுகளை வேறு விதமாக பட்டிமன்ற மேடைகள் விவாதிக்க ஆரம்பித்தன. இராவணன் தங்கை நாகரிகமாக மனித உருக்கொண்டு இராமன் மீது அன்பை வெளிப்படுத்துகிறாள். ஆனால் அவனும் அவன் தம்பியும் அவளை அவமானப்படுத்தி அங்கவீனம் செய்கின்றார்கள் அதற்கு பழி தீர்க்கவே இராவணன் , சீதையை கைபடாமல் பூமியோடு பெயர்த்துக்கொண்டு செல்கிறான். இராமனோ அவளைச் சந்தேகப்பட்டு அக்கினியில் இறங்கு என்கிறான். இராவணனோ அவளை நெருங்காமல் இருக்கிறான். இதன் மூலம் பட்டிமன்ற்ற உணர்ச்சிப்பேச்சுக்கள் பிறன் மனைவியைக் கவர்ந்து வந்தவன் என்ற இராமாயணத்தின் பிரதான புனைவுச்சிக்கலை ‘ஒருமாதிரி’ அவிழ்த்து இராவணனை விடுவிக்கிறார்கள். சில வருடங்களுக்கு முதல் இயக்குனரான மணிரத்னம் ‘இராவணன்’ என்ற பெயரில் இராவணனை கதாநாயகனாக கொண்ட ஒரு வெகுசன புனைவை சினிமாவாக உருவாக்குகிறார். அது தமிழ்ச்சமூகத்தில் கணிசமான வரவேற்பையும் பாராட்டையும் பெறுகின்றது. யாரும் இதற்காக ‘வரலாற்றை மாற்றிவிட்டாய்’ என்று மணிரத்தினத்துடன் சண்டைக்குப்போகவில்லை. தொன்மங்கள் புனைவு, கலையாக்கம் போன்றவற்றில் மறுபிரதியாக்கம் செய்யவோ மாற்றப்படவோ கூடியவை. அது அவற்றின் முக்கியமான சமகாலப் பங்களிப்பு.
இவை தவிர தலித் இயக்கங்கள் சார்ந்த கலை இலக்கிய சமூக உரையாடல்களும், பார்ப்பனர்களின் தெய்வமான இராமனை எதிர்க்க அல்லது இராமன் மூலம் வைக்கப்படும் ஒடுக்குமுறைகளை எதிர்க்க இராவணனை தங்களின் முன்னோனாக காட்டவும் முற்படுகின்றனர். அல்லது இராவணனை ஒரு லட்சிய, குறியீட்டுப்பாத்திரமாக மாற்றுகின்றனர். இயக்குனர் பா. இரஞ்சித் ‘காலா’ என்ற படத்தில் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக போராடும் காலா தன்னை ‘இராவணன்’ என்று பெருமையும் கர்வமுமாக அழைத்துக்கொள்கிறார். இங்கே தொன்மம் என்ற அல்லது கதையின் யதார்த்தம் என்று பார்க்கப்போனால் கூட தென்படும் முரண் என்னவென்றால் வர்ணாச்சிரமத்தின் பிரகாரம் இராமன் சத்திரியக் குலத்தையும், இராவணன் பிராமண குலத்தையும் சார்ந்தவன்.
இவை தவிர இராவணன் அரக்கன் இல்லை, அவன் அரக்கன் என்று சொல்லப்பட்டதற்கு காரணம் அவன் அவ்வளவு பராக்கிரமம் பொருந்தியவன், அவனுக்கு பத்துதலைகள் என்ற சித்தரிப்பு அவனுக்கு பத்து மூளைகளின் திறன் இருந்தது, பத்துக்கலைகளிலே வல்லவன் என்பதைக்குறிக்கிறது போன்ற ஏராளம் மேடைப்பேச்சுக்கள் கடந்த மூன்று தசாப்தங்களுக்குள் தமிழ்ச்சமூகத்தின் பொதுப்புத்தியில் புகட்டப்பட்டன. ஒரு தொன்மக் கதையில் வரக்கூடிய பாத்திரத்திற்கு இவ்வளவு விளக்கம் ஒப்பிப்புகள் மேடைப்பேச்சுக்கு உவப்பாக இருக்கலாம். ஆனால் இவற்றை வரலாறு என்று அறுதியிட முடியாது. இவை தவிர புலிகளுக்குப் பிறகான சில தமிழ்த்தேசியம் பேசக்கூடிய சீமான் போன்றவர்களின் உணர்ச்சிசார்ந்த மேடைப்பேச்சுக்களில் இராவணன் பற்றிய கொக்கரிப்புகள் அதிகமாயின. முப்பாட்டன் முருகன் என்பதைப்போல், முன்னோன் இராவணன் என்று மேடைகளில் கூக்குரல்கள் அதிகப்பட்டன. இலத்திரனியல் மேடைகளான சமூக வலைத்தளங்களிலும் இந்த சிந்தனைத்தளமற்ற வெற்று உரையாடல்கள் அதிகமாயின. குறிப்பாக இதுதான் ‘நம் வரலாறும் பெருமையும்’ என்ற அர்த்தமற்ற குரல்கள் ஏராளமாக வந்தன. இவ்வகையான பெருமிதங்கள் , வட்சப் வரலாறுகள் கடந்த பத்து வருடங்களில் சகட்டு மேனிக்கு வளர்த்தெடுக்கப்பட்டதன் மைய நிலம் இந்தியாவோ தமிழ் நாடோ அன்று , நன்றாக உற்றுப்பார்த்தால் இலங்கையும் புலம்பெயர் நிலமுமே இப்பரப்புரையின் பெரிய பங்காளிகளாக இருக்கிறார்கள்.
இலங்கை தமிழ்ச்சமூகத்தில் இராவணன்
தமிழ்நாட்டு சமூகமும் சமகாலப் பண்பாடும் இராவணனை எடுத்துக்கொள்வதற்கும் இலங்கைத்தமிழ்ச்சமூகம் இராவணனை எடுத்துக்கொள்வதற்கும் இருக்கக் கூடிய பிரதான வேறுபாடு அவற்றின் எதிராளிகளே. தமிழ்நாட்டின் திராவிட கருத்தியல், தலித்திய கருத்தியல் போன்றவற்றிற்கு எதிராளியாக இராமர் என்ற பலமான ஆக்கிரமிப்பு புள்ளி இருக்கிறது. இலங்கைத்தமிழ்ச் சமூகத்திற்கு இராவணனை எடுத்துக்கொள்ள பிரதானமான எதிராளியாக ’சிங்கள இனவாதம்’ இருக்கிறது. இராவணனை சிங்கள மன்னன் என்று சொல்லத்தொடங்கியதுதான் பெரியளவில் இராவணனை தமிழனாக்கும் எத்தனங்களைத் தூண்டி விட்டது . நன்றாக நினைவு படுத்திப்பாருங்கள், கடந்த பத்து வருடங்களுக்கு முன்னர் இலங்கைத் தமிழ்ச்சமூகத்தில் இராவணன் பற்றி தமிழ் நாடு எடுத்துக்கொண்ட கரிசனை இலங்கைத்தமிழ் மக்களுக்கு இருக்கவில்லை இல்லையா? சரி பிழைகளின் அப்பால் தமிழர்களின் பிரதான அரசியல் சக்தியாக தங்களை மாற்றிக்கொண்ட விடுதலைப்புலிகள் ஏன் சோழர்களையே தங்களின் இலட்சிய புருசர்களாகக் கொண்டனர். கரிகாலன் என்ற பெயரில் தொடங்கி புலிக்கொடிவரை தங்களை ‘மீண்டும் சோழர்களாகவே’ காட்டிக்கொண்டனர். ஏன் அவர்கள் இராவணனை தம் முன்னோன் என்று சொல்லவில்லை என்ற கேள்வி இருக்கிறது? இதற்கு விடுதலைப்புலிகள் ஒரு தொன்மத்தை, அதுவும் புராண இதிகாசங்களில் பெண் கவர்ந்தவன் என்றும் அரக்கன் என்றும் சித்தரிக்கப்படும் ஒருவனைக்காட்டிலும், வரலாற்றில் நிலைகொண்டவர்களையே விரும்பியிருக்கக் கூடும். அதாவது ஒரு கற்பனையைக் கொண்டு அவர்கள் தங்களை உருவாக்க விரும்பியிருக்க மாட்டார்கள். சீமான் சொல்வது போல ‘பாட்டன் இராவணன் பிள்ளைகள் என்று புலிகள் மார்பிலடித்துக் கொண்டதில்லை. எந்த விடுதலைப்போராட்ட இயக்கங்களும் தம் வரலாறாகவோ , கடந்த காலமாகவோ இராவணனை எடுத்துக்கொண்டதில்லை. தொன்மம் என்ற அளவில் கூட சமகால வாழ்க்கைக்கு எந்த விதத்திலும் பயனில்லாத பாத்திரம் அது.
ஆனால் இன்றைக்கு தமிழ்த்தேசியம் பேசக்குடிய அதை நம்பக்கூடிய பெரிய தரப்பொன்று இராவணைக் கொண்டாடி, அவனை முன்னோனாக முன்வைக்கிறது. குறிப்பாக உணர்ச்சி நிலைப்பட்ட எந்த வரலாற்று, பண்பாட்டுப் புரிதலும் அற்ற மேற்படையான தர்க்கங்களுடன் இராவணனைக் தங்களைத்தம்பட்டம் அடித்துக்கொள்கிறது. இது ஒரு வகையில் மக்களை அரசியல் மயப்படுவது, பகுத்தறிவு மயப்படுவது போன்றவற்றிலிருந்து தூரமாக்க கூடிய ஆபத்தாகவே கருத வேண்டியுள்ளது.
ஆயினும் இராவணன் தொடர்பாக தமிழ்சமூகத்திடம், குறிப்பாக இன்றைய தலைமுறைகளிடம் எழுந்துள்ள பதட்டத்தையும் அதன் பின்னணியில் உள்ள உளவியலையும் நான் இவ்வாறு புரிந்துகொள்ளப்பார்க்கிறேன்; நாற்பது வருடங்களுக்கு மேற்பட்ட இனவன்முறை, போர்- பேரழிவிற்குப்பின்னர், போரில் தோற்கடிப்பட்ட ஒரு இனக்குழு தனக்குள் ஒரு பேரச்சத்தை புதைத்துக்கொண்டே 2009 இற்குப்பின்னர் இந்த நிலத்தில் வாழ்ந்துவருகின்றது. அதற்கு இன்றைக்கு வரைக்கும் ‘புலிகளைப்போன்ற’ அரசியல் சக்தியோ தலைமையோ கை கூடவில்லை என்ற எண்ணமே பெரும்பான்மையாய் இருக்கிறது. இவ் அச்சத்தை ஊக்குவிக்கும் வண்ணமே இலங்கையின் அரசியல் சூழலும் பண்பாட்டுச்சூழலும் பேரினவாத , மதவாத சூழல்களால் அச்சுறுத்தப்படுகின்றது, இராணுவ பிரசன்னம் தொடங்கி , மரபுரிமைகள், அடையாளங்களை அழிப்பது, பெளத்தமயமாக்குவது , தொடங்கி சிறுபான்மை இனங்கள் மீது தொடர்ந்தும் பண்பாட்டுப் போரையும் ஒடுக்குமுறையையும் மேற்கொண்டே வருகின்றது. முக்கியமாக தமிழர் வரலாறு மற்றும் மரபுரிமைகள் மீதே இனவாதத்தின் சமகால ஆக்கிரமிப்பு வலுப்பட்டுள்ளது. நமக்கு இந்த நிலத்தின் உரித்து காலப்போக்கில் இல்லாமல் போகுமோ என்ற அச்சமும், நமக்கொரு வரலாறு உண்மையில் இருக்கிறதா? சிங்கள மன்னர்களின் வரலாறு அளவிற்கு நம்மிடம் என்ன இருக்கிறது ? இந்த தீவிற்கு அவர்கள் சொல்வது போல் நாங்கள் வந்தேறியவர்களா ? நம்முடைய முன்னோர்கள் யார் எவர்? என்ற கேள்விக்கெல்லாம் அறிவியல் பூர்வமான பதில்கள் எங்களுக்குத்தெரியாது. சிங்களவர்களுக்கு துட்டகைமுனுவைப் போல எங்களுக்கு தோற்காத பாராக்கிரமம் மிக்க சிங்கள மன்னர்களை விடவும் உயர்ந்த , இலங்காபுரியையே நிர்மானித்த ஒரு மாபெரும் முன்னோன் தமிழர்களின் உளவியலுக்கு தேவைப்படுகிறார். மீட்பர்களை எதிர்பார்த்து காத்திருக்கும் இந்த சமூகத்திற்கு உள்ளிருந்து சிந்திக்கும் இயல்பு இவ்வளவு மழுங்கிப்போயிருப்பது ஆச்சரியமான ஒன்றல்ல. நம்முடைய அறியாமைதான் நாம் வரலாறு அற்றவர்களோ என்ற தாழ்வுச்சிக்கலை உருவாகியுள்ளது. நம்முடைய வரலாறு பற்றிய பொய்களையும் பெருமிதங்களையும் வைத்துக் கொண்டு எந்த ஒடுக்குமுறையையும் எதிர்கொள்வது சாத்தியமற்றது. உரிமை சுதந்திரம் போன்றவை துரித உணவுகள் போல் கிடைப்பதில்லை. இனவாதத்தை முந்திக்கொண்டு நம்முடைய சோம்பேறித்தனமும் வீண் பெருமையும்தான் நம்மை அழிக்கப்போகிறது.
வரலாறு , பண்பாடு தொடர்பான புரிதலின்மையால் உருவாகிவரும் தாழ்வுச்சிக்கலும் அதன் மூலம் எழும் பயமும் தொடர்ந்தும் பொது நம்பிக்கைக்குள் உறுதியாக இருப்பதற்கு என்ன காரணம்? முற்று முழுதாக இது நம் அறியாமை மட்டும் சார்ந்தது அல்ல ஆதிக்க தரப்பும் , இனவாத தரப்பும் சிங்களை மக்களையும் இப்படியே வைக்கவே முயற்சி செய்கிறார்கள். அவர்களுக்கான பிரதான அரசியல் அதிகாரத்துக்கான மூலதனங்களில் ஒன்று தமிழர்களுக்கு எதிராக பிரச்சாரம் செய்யத்தக்க வரலாற்று பாத்திரங்கள். துட்ட கைமுனு, விஜபாகு போன்ற வரலாற்றுப்பாத்திரங்களை முன்னிலைப்படுத்துவதுபோல் , இராவணன், கந்தன் முதலான புராண, இதிகாச தொன்மங்களையும் எடுத்துக் கொள்கிறார்கள். கடந்த பத்தாண்டுகளில் அல்லது அதற்குச் சற்று முன்னர் சிங்கள இனவாத அமைப்புக்கள் கட்சிகள் ஆரம்பித்து வைத்த ஒன்று இந்த இராவணனை சிங்களமயப்படுத்தும் நடவடிக்கை. ’ராவண’ என்ற அடையுடன் சிங்கள இனவாத, மதவாத கட்சிகள் உருவாகி வந்தன, புதிய கட்டுக்கதைகள் உருவாகின, சிகிரியா போன்றவை இராவணனால் அமைக்கப்பட்டவை என்ற புரட்டு வரலாறுகள் சமூக வலைத்தளங்களில் எழுதப்பட்டன. சில பிக்குகள் கூட இராவணனையும் புஷ்பக விமானத்தையும் தேடி குகைகளுக்குள் சென்று வந்த வீடியோக்கள், செய்திகள் இலங்கை முழுவதும் பரவின. சுவர் ஓவியங்களில் சிங்களப்பிராந்தியங்களில் சிங்கள இராவணன்கள் புஜங்களைத் தூக்கிக்கொண்டு நின்றார்கள். புஷ்பக விமானத்தில் பறந்து செல்கிறார்கள். இந்த வேடிக்கைகளுக்கு மத்தியில் இன்றைக்கு ஒரு அரசியல் தலைவர் தன் உத்தியோகபூர்வமான பாராளுமன்ற உரையில் இராவணன் சிங்கள மன்னன் என்கிறார். அதை மறுக்கவோ,பேசவோ அங்கிருக்கும் தமிழ் அரசியல் தலைவர்களுக்கு வரலாறும் தெரியவில்லை தொன்மமும் தெரியவில்லை. நாட்டின் முக்கியமான மேடையில் ஒரு தமிழ் அரசியல் தலைவர் ‘இராவணன் ஒன்றும் வரலாற்றுப்பாத்திரம் அல்ல, அது ஒரு புராணப்பாத்திரம், இங்கே அதை வரலாறு என்று வாதிடுவதே அபத்தமானது ’ என்றல்லவா எதிர்வினையாற்றியிருக்க வேண்டும். அவர்கள் பொய் சொல்கிறார்கள் என்றால் அதை பொய் என்று அறிவார்ந்து தர்க்கங்களுடனும் ஆதாரங்களுடனும் பேச வேண்டும். அதை விட்டு விட்டு ‘இப்ப பார் நான் இதை விட சிறந்த புரட்டொன்றை’ அவிழ்க்கிறேன் என்று கிளம்புவதை என்னவென்று சொல்வது ?
சிங்கள அரசியல்தலைவரின் உரையோடு தமிழ் வலைத்தளங்கள் பொங்கிக் கொட்டின. திரும்பவும் முழுவேகத்தில் வட்சப் இராவண வரலாறுகள் பகிரப்பட்டன. யூ டியூப் சனல்கள் ‘யாரிந்த இராவணன்’ போன்ற நவீன மாற்று வரலாறுகளை அடித்துவிடத்தொடங்கின. இராவணன் ஒரு தமிழ்மன்னன். எம்முன்னோன் என்ற கூச்சல் அதிகப்பட்டது. இவற்றோடு, இலங்கை சைவ நம்பிக்கையில் இராவணத்தொன்மம் சைவத்தின் ஒரு பகுதியாகவும் இருந்து வந்தது. இசைக்கலைஞனாக, சிவபக்தனாக சிவன், அம்மன் கோவில்களில் அவனுடைய சொரூபங்கள் உண்டு, வாகனங்கள் உண்டு. (உதாரணம் – நயினாதீவு நாகபூசணி அம்மன்), இது மதம் வழியாக உருவாகி வரும் தொன்மம் சார்ந்த புராணம் சார்ந்த வெளிப்பாடே அன்றி வரலாற்று உரிமைகொண்டாடல்களிலோ அடையாளச் சிக்கல்களிலோ இதுவரை காலமும் பங்கெடுத்ததில்லை. சமீப காலங்களில் யாழ்ப்பாணத்தில் திருட்டுத்தனமாக வைக்கப்படும் லிங்கங்கள் (மூளாய், செம்மணி) இராவணேச்சரங்களாக அழைக்கப்படுகின்றன. இராவணன் சிவபக்தன், சிவபூமியான இலங்கையில் அவனுக்குரியதைக் கொடுப்பதன் மூலம் சைவத்தைப் பாதுகாப்போம் என்று ஒரு கும்பல் கிளம்பியிருக்கிறது. சிங்கள பொளத்த இனவாத ஆக்கிரமிப்புக்களுக்கான பதிலீடாக அல்லது எதிர்ப்பாக இவற்றைக் கருதலாம் என்பது இவர்களின் எண்ணம். ஒரு ஒடுக்கு முறைக்கு எதிராக பொய்யைக் கட்டமைப்பதில் என்ன அறமும் பயனும் இருக்கின்றது என்றே தெரியவில்லை, இதற்கும் பெளத்த பேரினவாதம் செய்வதற்கும் என்ன வித்தியாசம் இருக்கப்போகிறது ?
சரி, ஏன் இராவணனை நம் முன்னோன் என்று சொன்னால் என்ன? பேரினவாதத்திற்கு எதிராக அதை ஏன் வைக்க முடியாது? சிங்களவர்கள் இராவணனை எடுத்துக்கொண்டுவிட்டால் இந்த தீவின் உரிமை தங்களுக்குத்தான் என்று நிறுவியல்லவா விடுவார்கள் இது ஆபத்தில்லையா என்று கேட்கலாம். ஒரு விடயத்தை திரும்பவும் கவனிக்க வேண்டும் சிங்கள இனவாதிகளும் இராவணனை ‘வரலாற்று மன்னனாகவே’ முன் வைக்கின்றனர். சிங்கள பிராந்தியங்களில் துட்டகைமுனுவோடு அருகில் இராவணனும் வரையப்பட்டிருக்கிறான். அங்கேயே தமிழ்ப் பண்பாடு, வரலாறு மீதான அவர்களின் பயமுறுத்தல் நீர்த்துப்போகின்றது. கொஞ்சமும் வரலாற்றுப்புரிதலோ, பகுத்தறிவோ இன்றி இலங்கைத்தமிழ்ச்சமூகம் ஒரு தொன்மத்தை வரலாற்று அடையாளமாகவும் பெருமிதமாகவும் மாற்ற எத்தனப்பட்டுத்துடிகிறதோ அதையே அவர்களும் செய்கிறார்கள்.
அடிப்படையில் நவீன வரலாற்றுக்கு உள்ள இயல்பும் சிறப்புத்தன்மையும் அதன் விஞ்ஞான அடிப்படையிலான அணுகுமுறைகளும் ஜனநாயகமும் தான். நவீன வரலாறு புனைவைப் புனைவாயும், தொன்மத்தை தொன்மமாயும் பிரித்தறியும் கட்டமைப்புகளை ஏராளம் உருவாக்கிக் கொண்டுள்ளது. அவ்வளவு எளிதாக ஒரு தொன்மத்தை எடுத்து வந்து இது வரலாறு என்றால் சமகால வரலாறு குட்டிக்கலைத்துவிடும். வரலாற்றை எழுதுவதில் நிறையவே அரசியல் இருக்கிறது. வாதங்கள் இருக்கின்றன. ஆனால் இந்த தொன்மமும் எதிர் வரலாறு என்ற கருத்தில் அடிப்படையான பிரித்தறிதல் முறைகள் நன்றாகவே கோட்பாட்டு ரீதியில் வளர்த்தெடுக்கப்பட்டுள்ளது. மேலும் நம்முடைய சமகாலம் ஏட்டுச்சுவடிகளில் எழுதப்பட்ட கறையான் கொள்ளத்தக்க, மன்னர்களையும் ஆதிக்க தரப்பை மட்டும் எழுதி வைக்கும் வரலாற்று எழுத்தைச் சார்ந்ததல்ல. சமகாலம் என்பது அனைத்தையும் பதிவு செய்யக்கூடிய, விஞ்ஞான முறைப்பட்ட தெளிவாக ஆவணப்படுத்தக் கூடிய வரலாற்று எழுத்தின் காலத்தில் நாம் வாழ்கிறோம். வேண்டுமானால் குறுகிய காலத்திற்கு மக்களை அதைக்கொண்டு ஏமாற்றலாம். பகுத்தறிவும் சிந்தனை உரையாடலும் வலுக்கும் போது இவை காணாமல் போய்விடும். இராவணனும் அதில் ஒன்றுதான். இராவணனை ஒரு வரலாற்றுப்பாத்திரமாக எந்தவொரு நல்ல ஆய்வேனும் நிறுவியுள்ளதா? இலங்கையில் இருக்கும் எந்தப்பல்கலைக்கழகமாவது இராவணனை வரலாறாக கருதக்கூடிய சான்றுகளை வைத்துள்ளதா? இன்று வரைக்கும் இலங்கையின் அறிவுச்சூழலில் யாரேனும் இராவணனை இலங்கையின் வரலாறு என்று சொல்லியிருக்கிறார்களா? நவீன வரலாற்று எழுத்தும் தொடர்ச்சியும் சமூக வலைத்தளங்களில் எழுதப்படுபவையோ நிறுவப்படுபவையோ அன்று. அவை காளான்களைப் போல ரெண்டுக்கு (Trend) எடுபட்டு பின் கலைந்துபோய்விடும். வரலாற்றிற்கு தொன்மங்களுக்கு இருக்கின்ற புனைவுக்கான திறந்த தன்மை கிடையாது. அதை தக்க ஆதாரமின்றி, அதற்குரிய சரியான தர்க்கமின்றி சிறிது மாற்றினாலே அது தன்னை வரலாறு என்பதில் இருந்து விடுவித்துக்கொண்டுவிடும்.
இலங்கையில் நடக்கும் யாருக்கு இராவணன் என்ற சண்டையும் அப்படித்தான் நீர்த்துப்போகும். இந்த வகையான அர்த்தமற்ற விவாதங்களுக்கு அடித்தளமே கிடையாது. இராவணனைக் காட்டிலும் அடாத்தாக வைக்கப்படும் புத்தரும், லிங்கமும்தான் நடைமுறை சார்ந்த ஆபத்துக்கள் இங்கே. அவற்றைக் கவனிக்க யாருமில்லை. புத்தர் சிலை, விகாரைகள் தமிழர் பிராந்தியங்களில் அடாத்த வைக்கும் போதும், அடையாளங்கள் அழிக்கப்படும் போதும் வராத கோபமும் உணர்ச்சியும் இராவணன் என்றதும் வந்துவிட்டது ஒரு வித நகை முரண் தான். இராவணன் என்றதும் வரக்கூடிய உணர்ச்சியும் பதட்டமுமே ‘எங்கப்பன் குதிருக்க இல்லை’ என்பது போல் தமிழர்களின் வரலாற்றுப்புரிதலைக் காட்டிக்கொடுத்து விடுகின்றது.
நம்முடைய வரலாற்று எழுத்துக்குரிய காலமும் இதுவே , நாம் அதை முறையாக அறிவியல் பூர்வமாக அணுக வேண்டும். வரலாற்றை எப்படி சமகாலத்துக்கும் எதிர்காலத்துக்குமான கச்சாப்பொருளாகப் பயன்படுத்த முடியும் என்பதைச் சிந்திக்க வேண்டும். கூட்டாக உரையாட வேண்டும். வரலாறு என்ற பெயரில் கொண்டுவரப்படும் புரட்டுக்கு எதிரான சமூகத்தின் அறிவார்ந்த தளத்தைத் திரட்ட வேண்டும். நம்மிடம் மூன்று பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட ஆய்வுகளை முன்னெடுக்க கூடிய நிறுவனங்கள் உள்ளன. ஆய்வாளர்கள் இருக்கிறார்கள். வரலாற்று ஆய்வுகள் தொல்லியல் ஆய்வுகள் , மானிடவியல் , சமூகவியல் ஆய்வுகள் நடந்தபடிதான் இருக்கின்றன. இவற்றில் எவருமே இந்தப்பிரச்சினை பாராளுமன்றம் வரை போன பிறகும் வாய் திறக்கவில்லை.
இலங்கைத் தமிழர்கள் தங்களைச் சூழ உள்ள மரபுரிமைகள், தொன்மங்கள், நம்பிக்கைகள், வரலாற்று மூலங்களைப் பற்றி அறியவோ பாதுகாக்கவோ முன்வருவதில்லை. மொத்த நாட்டின் வரலாற்றையும் கரைத்து விழுங்கத்தேவையில்லை. நம் உள்ளூரில் இருக்கும் மரபின், தொன்மையின், பண்பாட்டின் வரலாறு பற்றி அடிப்படையான அறிதலே போதுமானது. வீதியில் கிடக்கும் ஒரு ஆவுரஞ்சிக்கல் எதற்கு இருக்கிறது என்று நமக்குத்தெரியாது. ஒரு பழைய குளம் பாழ்பட்டுக்கிடக்கிறது என்பதை நம் கண்கள் காணாது. ஒவ்வொரு இடமாக நடக்கும் மரபுரிமைகள், அதன் வரலாறுகள் மீதான ஆக்கிரமிப்புக்களைப் பற்றி மிக மிக சிறிய தரப்பே பேசுகிறது, அறிகிறது, போராடுகிறது. ஆனால் வலைத்தளங்களில் இராவணன் பற்றிய பிரஸ்தாபங்களை லட்சக்கணக்கில்பகிர்ந்து விட்டு தங்களின் சமூக, பண்பாட்டு பங்களிப்பு முடிந்து விட்டது, என்று பின்பக்கத்தில் ஒட்டிய மண்ணை மட்டும் தட்டிக்கொண்டு எழுந்து போய் விடுகின்றனர். நாம் யாரை ஏமாற்றுகிறோம்? நம்மை நாமா? வரலாற்றை, அடையாளத்தை , தொன்மங்களை அவற்றின் மீதான சமகால உரையாடல்களை தெரிந்து கொள்வதற்கு விருப்பம் இருந்தால் கைபேசியை ஓரமாக வைத்து விட்டு அறிவார்ந்த தேடல்களை நோக்கிப்போக வேண்டும். உரையாடல்களை விரிவுபடுத்த வேண்டும். அது ஒரு உழைப்பு, மூளை உடல் சேர்ந்து விரும்பி மேற்கொள்ள வேண்டிய தனிமனித மற்றும் கூட்டு உழைப்பு. ஆனால் இங்கே நடப்பவை அதிதுரித வாய்ச்சவடால்களும் பெருமித பீற்றல்களும் மட்டும்தானே. இலங்கைத் தமிழ்ச்சமூகம் எதிர்கொள்ளும் பண்பாட்டு நெருக்கடியும் , அரசியல் நெருக்கடியும் இதனால் இன்னும் வலுப்பெறும். இராவணன் போன்ற தொன்மங்களை பிழையானதும் மோசமானதுமான விபரிப்புகளுடன் தொடர்ந்தும் கொண்டு சேர்ப்பது சிங்கள மக்களிடையே இனவாதத்தை பெருக்குவதில் பெரிய பங்கெடுக்கிறது. எப்படி தமிழ்ப்புலமைச்சூழல் இவற்றை கண்டுகொள்ளவில்லையோ அதையேதான் சிங்கள புலமைத் தரப்பும் செய்கிறது. பல்கலைக்கழகங்கள் கும்பகர்ணனைப் போல உறங்கிக்கொண்டிருக்கின்றன. இந்த மெளனங்களின் கனத்த தீ அச்சத்தைத் தருகிறது. இவர்கள் இம்முறை உண்மையாகவே இலங்கைக்குத் தீ வைக்கத்தான் போகிறார்கள்.