– சமூக செயற்பாட்டாளர் சட்டத்தரணி உதுமான்கண்டு நாபீர் தெரிவிப்பு –

தமிழ் தேசிய அரசியல் வரலாற்று ஆளுமைகளுள் தவிர்க்க முடியாத ஒருவராக செயல்பட்ட இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜாவின் மறைவு தமிழ் மக்களுக்கும் இலங்கை தமிழரசு கட்சிக்கும் பாரிய இழப்பாகும் என சமூக செயற்பாட்டாளரும் நாபீர் பவுண்டேஷன் நிறுவனமான சட்டத்தரணி உதுமான் கண்டு நாபீர் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
‘மாவை சேனாதிராஜா தனது 64 வருட அரசியல் பயணத்தில் அரசியல் தலைவராக தமிழ் மக்களுக்காக கடும் பணியாற்றியுள்ளார்.
யுத்தம் முடிவுறுவதற்கு முன்னரும் பின்னரும் இவரது அரசியல் முன்னெடுப்புகள் பல்வேறு பரிணாமங்களை கொண்டுள்ளதுடன் மக்கள் விடுதலைக்காக போராட்டங்கள் பலவற்றை செய்து சிறைவாசம் அனுபவித்தவர். ஜனநாயக நீரோட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த காலங்களில் இவரது குரல் அடக்குமுறைக்கு எதிரான மக்களின் குரலாக நாடாளுமன்றத்தில் ஓங்கி ஒலித்தது.
இவரது பிரிவில் துயருறும் அன்னாரது குடும்பத்தாருக்கும் உலக வாழ் தமிழ் மக்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கின்றேன் என சமூக செயற்பாட்டாளரும் நாபீர் பவுண்டேஷன் நிறுவனருமான சட்டத்தரணி உதுமான் கண்டு நாபீர் குறிப்பிட்டுள்ளார்.