அயோக்கியனாக மாறிய அர்ச்சுனா ! அமைச்சர் சந்திரசேகரிடமும் மலையக மக்களிடமும் மன்னிப்புக் கோருகின்றனர் ஈழத்தமிழர்கள் !

அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரை தாக்குவதற்காக அண்மையில் காணொளி ஒன்றில் பா.உ இராமநாதன் அர்ச்சுனா “நாங்கள் கப்பல் ஓட்டியவர்கள், நீங்கள் கப்பலில் வந்தவர்கள்” என மலையக தமிழர்களை இழிவுபடுத்தும் வகையிலான மொழியாடல்களை பயன்படுத்தியிருப்பது பலரையும் அருவருப்படைய வைத்துள்ளது.
பா உ அர்ச்சுனா ஊசி அர்ச்சுனாவாக இருந்த போதே தன்னுடைய சாதியத் திமிரை அப்பப்போ காட்டியதை தேசம்நெற் பல தடவைகள் அம்பலப்படுத்தியிருந்தது. 42 பாகை வெப்பநிலையிலும் ரை கட்டிவரும் அர்ச்சுனா தன்னை எப்போதும் கண்காணியாகவே கனவு காண்கின்றார். மற்றவர்களை முட்டாளாகவே காண்கின்றார். பெரும்பாலான முட்டாள்களுக்கு தாங்கள் முட்டாள்கள் என்று விளங்குவதற்கான அறிவு கூட இருப்பதில்லை. அந்த ரகத்தைச் சேர்ந்த டொக்கடர் முட்டாள் தான் இந்த அர்ச்சுனா என்கிறார் சமூக செயற்பாட்டாளர் சோலையூரான். இவ்வாறானவர்களைத் தெரிவு செய்கின்ற அளவுக்கு யாழ்ப்பாணத் தமிழ் தேசியத்திடம் அரசியல் வற்றிப் போய்விட்டது எனவும் சோலையூரான் தேசம்நெற்க்குத் தெரிவித்தார்.
இவ்வாரம் பாராளுமன்ற அமர்வின் போது பா.உக்களான இராமநாதன் அர்ச்சுனா மற்றும் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதன்போது, கழுதைகள் குதிரைகளோடும் தான் யாழ் மக்கள் போட்டோ எடுப்பார்கள் ஆனால் தலைவராக ஏற்றுக்கொள்ள மாட்டார்கள், சந்திரசேகருக்கு தமிழ்பேச தெரியாது, என்.பி.பியின் யாழ்ப்பாண பாராளுமன்ற உறுப்பினர்கள் கத்தரி தோட்டத்து வெருளிகள் என பல வேண்டத்தகாத விடயங்களை கூறினார் இராமநாதன் அர்ச்சுனா. இதே கருத்துப்பட ஐபிசி யும் கீதபொன்கலனும் உரையாடல்களில் கருத்து வெளியிட்டு இருந்ததை தேசம்நெற் சுட்டிக்காட்டியிருந்தது.
இவ்வாறான நிலையிலேயே பாராளுமன்றத்துக்கு வெளியிலும் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரை தமிழ் ஒழுங்காக பேச தெரியாதவர், மலையக பின்புலத்தை சேர்ந்தவர் வசைபாடியுள்ளார் பா.உ இராமநாதன் அர்ச்சுனா. குறிப்பாக நீங்கள் கப்பலில் வந்த வெள்ளைக்காரர்கள் தான் உங்களை கொண்டு வந்தார்கள் போன்ற சொற்பிரயோகங்களை பயன்படுத்தி வழமையான யாழ்ப்பாண சாதிய மேலாதிக்க தமிழ்தேசிய தலைமைகளின் எண்ண ஓட்டத்துக்குள் தானும் இணைந்தவர் என்பதை மீள உறுதிப்படுத்தியுள்ளார் பா.உ அர்ச்சுனா.
கிளிநொச்சியில் உள்ள அதிகப்படியான மலையக தமிழ் மக்களின் வாக்குகளில் பாராளுமன்றத்திற்கு தெரிவான பா.உ சிறீரன் கிளி ஊடகவியலாளர் தமிழ்செல்வனை தோட்டக்காட்டான் என குறிப்பிட்டு தன் யாழ்ப்பாண சாதிய திமிரை காட்டியிருந்ததார். மேலும் மலையக பின்னணியை சேர்ந்த யாருமே தமிழரசுக்கட்சியின் அரசியலுக்குள் நுழைந்துவிடாமலும் கச்சிதமாக பார்த்துக் கொள்கிறார். இந்த நிலையில் வழமையான மலையக தமிழர்களை அடக்கி ஒடுக்கும் தமிழ்தேசிய வாதிகளின் கூட்டணியில் பா.உ அர்ச்சுனாவும் இணைந்துள்ளார் என பல தரப்பினரும் குற்றச்சாட்டி வருகின்றனர்.
இதேவேளை, புலம்பெயர் தமிழர் எல்லாம் கழிப்பறை கழுவத்தான் செல்கிறார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அரச்சுனா தெரிவித்தமைக்கு வடமராட்சி வடக்கு கடற்றொழிலாளர் சமாச உப தலைவர் நாகராசா வர்ணகுலசிங்கம் கடுமையான எதிர்ப்பை வெளியிட்டுள்ளார்.
அர்ச்சுனா அமைச்சர் சந்திரசேகரை நோக்கி கூறிய “இக்கூற்றுக்காக முழுத் தமிழினமும் இலங்கைத் தமிழர்கள் அமைச்சரிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும். ஏனென்றால் இதை அமைச்சர் ஒருவருக்கு எதிரான கூற்றென்று ஒதுக்கி விட முடியாது. ஒரு சமூகத்துக்கு எதிரான கூற்று” என்கிறார் கனடாவில் இயங்கும் பதிவு இணையத் தளத்தின் ஆசிரியர் நவரட்ணம் கிரிதரன்.
அவர் மேலும் குறிப்பிடுகையில், “உண்மையில் அவர் கூறியிருந்திருக்க வேண்டியது ‘நாங்கள் கப்பலோட்டியவர்கள். நீங்கள் எமக்கு வழிகாட்டியாகவிருந்த கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி மண்ணிலிருந்து வந்தவர்கள்’ என்றே.
சுதந்திரமடைந்த நாட்டில் நாடற்றவர்களாக்கப்பட்டார்கள். அதற்கு எம் தமிழ்த் தலைவர்கள் , ஜி.ஜி.பொன்னம்பலம் உட்படப் பலரும் உடந்தையாகவிருந்தார்கள் என்பது வரலாறு. வடகிழக்கு எல்லைகளில் குடியேறி அதன் காரணமாகவும் துன்பத்தினை அனுபவித்தவர்கள் அவர்கள். இந்நிலையில் இவ்வாறானதொரு கூற்று அம்மக்கள் மீது ஏவிவிடப்பட்ட கேவலமான, துவேசம் மிக்க வசையாகவே கருதப்படும்.
அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் நீண்ட காலமாகப் பாராளுமன்ற உறுப்பினராக இருப்பவர். ஒரு புரட்சிகர அமைப்பின் போராளியாக இருந்தவர். இந்நிலையில் அவரைப்பார்த்து இவ்விதம் வசை பாடியிருப்பது கண்டிக்கத்தக்கது. வருந்தத்தக்கது. மன்னிப்புக் கேட்கப்பட வேண்டியது. கூறியவர் கேட்காதிருந்தாலும் , நாம் அனைவரும் மலையக மக்களிடம் மன்னிப்புக் கேட்போம்: ‘எம்மை மன்னித்து விடுங்கள்’ என்கிறார் கனடாவில் இயங்கும் பதிவு இணையத் தளத்தின் ஆசிரியர் நவரட்ணம் கிரிதரன்.
அர்ச்சுனாவுடைய கூற்று ஈழத்தமிழ் சமூகத்தை அதிர்ச்சி அடையச் செய்துள்ளதுடன் வெட்கித் தலைகுனியவும் செய்துள்ளது. ஈழத்தமிழர்களின் பல்வேறு தளங்களில் செயற்படுபவர்களும் பா உ அர்சுனாவின் சாதியவாதம், பிரதேச வாதம், இனவாதம் என்பனவற்றை மிக வன்மையாகக் கண்டித்து கருத்துக்களைப் பதிவு செய்து வருகின்றனர். அர்ச்சுனா இதுவரை பல்வேறு கழிசறையான மொழியாடல்களைக் கையாண்ட போதும் தற்போது பயன்படுத்திய வார்த்தைகள் அர்ச்சுனா எப்படிப்பட்ட மனிதர் என்பதை அம்பலப்படுத்தி உள்ளது. தமிழ் தேசியத்தை முன்நிறுத்தும் அர்ச்சுனா மலையகத் தமிழர்களை கள்ளத் தோணிகள் என்கிறார், சிறிதரன் வடக்கத்தையான் என்கிறார், கஜேந்திரகுமாரோ மலையகத் தமிழர்களின் வாக்குரிமையைப் பறித்தவர்களின் பரம்பரையில் நின்று அரசியல் செய்கின்றார்.