நாடாளுமன்றில் எதிர்க்கட்சித் தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ள 82 வயதான சம்பந்தன் அவர்கள் இலங்கை தமிழ் அரசியல் வரலாற்றில் மிக முக்கியமான இடத்தை வகித்துவருகின்றார். 1933 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 5 ஆம் திகதி இராஜவரோதயம் சம்பந்தன் திருகோணமலையில் பிறந்தார்.சம்பந்தன் கல்ஓயா திட்டத்தின் களஞ்சிய பொறுப்பதிகாரியான ஏ.இராஜவரோதயத்தின் மகனாகும். சம்பந்தன், யாழ்ப்பாணம் புனித பத்திரிசியார், குருணாகல் புனித அன்னம்மாள், திருகோணமலை புனித ஜோசப் மற்றும் மொரட்டுவ புனித செபஸ்தியார் கல்லூரிகளில் பாடசாலை கல்வியைத் தொடர்ந்தார்.
பின்னர், இலங்கை சட்டக்கல் லூரியில் சட்டம் பயின்று சட்டத்தரணி யானார்.சம்பந்தனின் மனைவியின் பெயர் லீலாவதி. சம்பந்தனுக்கு சஞ்சீவன், செந்தூரன் மற்றும் கிரிசாந்தி ஆகிய மூன்று பிள்ளைகள் இருக்கின்றார்கள்.முதன் முதலாக 1977ம் ஆண்டு சம்பந்தன் பாராளுமன்றிற்குத் தெரிவாகியிருந்தார். 1956ம் ஆண்டு சம்பந்தன் இலங்கைத் தமிழரசுக் கட்சியில் இணைந்து கொண்டார். இலங்கைத் தமிழரசுக் கட்சியின் அப்போதைய தலைவர் ஜே.வீ. செல்வநாயகம் 1963 மற்றும் 1970 களில் தேர்தலில் போட்டியிடுமாறு சம்பந்தனை அழைத்தபோதிலும் அதனை அவர் நிராகரித்திருந்தார். 1972ம் ஆண்டு இலங்கைத் தமிழரசுக் கட்சி, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ், ஈழத் தமிழர் ஒற்றுமை முன்னணி, அகில இலங்கை தமிழர் பேரவை உள்ளிட்டன கூட்டாக இணைந்து தமிழர் விடுதலைக் கூட்டணி என்ற கட்சி ஆரம்பிக்கப்பட்டது.
1977ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் சம்பந்தன் தமிழர் விடுதலைக் கூட்டணியின் சார்பில் திருகோணமலை மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றியீட்டினார்.எவ்வாறெனினும் 1983ம் ஆண்டின் நடுப்பகுதியில் சம்பந்தன் உள்ளிட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் பாராளுமன்றை புறக்கணித்திருந்தனர்.கறுப்பு ஜூலை தாக்குதல், 6ம் திருத்தச் சட்டம் உள்ளிட்ட பல்வேறு காரணிகளின் அடிப்படையில் பாராளுமன்ற அமர்வுகளை புறக்கணித்திருந்தனர். தொடர்ச்சியாக பாராளுமன்ற அமர்வுகளை புறக்கணித்த காரணத்தினால், 1983ம் ஆண்டு செப் டெம்பர் மாதம் 7ம் திகதி சம்பந்தன் தனது பாராளுமன்ற உறுப்புரிமையை இழந்தார். 1989ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் சார்பில் சம்பந்தன் திருகோணமலை மாவட்டத்தில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். அதன் பின்னர் 2001ம் ஆண்டு முதல் இதுவரை யில் திருகோணமலை மாவட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட்டு வெற்றியீட்டியுள்ளார்.
சம்பந்தன் பாராளுமன்றத் தேர்தல்களில் போட்டியிட்ட விபரங்கள் வருமாறு,
1977 திருகோணமலை த.வி.கூ – 15144 வெற்றி, 1989 திருகோணமலை மாவட்டம் த.வி.கூ – 6048 தோல்வி, 2001 திருகோ ணமலை மாவட்டம் த.தே.கூ – 40110 வெற்றி, 2004 திருகோணமலை மாவட்டம் த.தே.கூ 47735 – வெற்றி, 2010 திருகோ ணமலை மாவட்டம் த.தே.கூ 24488 – வெற்றி, 2015 திருகோணமலை மாவட்டம் த.தே.கூ 33834 – வெற்றி. இவ்வாறு இவருடைய பாராளுமன்ற வாழ்க்கை வட்டங்கள் அமையப்பெற்றிருக்கின்றது.பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிப் பதவியினை வழங்கி தமிழினத்தை ஏமாற்ற நினைக்கும் சிங்கள பேரின வாதியான ரணில் விக்கிரமசிங்க கடந்த பல ஆண்டுகளாக தமிழினத்தின் விடுதலைக்காகக் குரல்கொடுத்து வந்த தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுடன் புதியதொரு அத்தியாயத்திற்குள் நுழைகின்றார். மைத்திரிபால சிறிசேன, ரணில் விக்கிரமசிங்க, சந்திரிக்கா ஆகியோர் தமிழ்த்தேசியக்கூட்டமைப்புக்கே எதிர்க் கட்சிப்பதவி என்பதனை ஏற்கனவே தீர்மானித்திருந்தனர். இத்தீர்மானம் அமெரிக்கா மற்றும் இந்தியாவின் நிலைப்பாட்டுக்கமைய தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந் தனுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதனால் ஏற்படக்கூடிய சாதக பாதக தன்மைகளைப் பார்க்கவேண்டியுள்ளது. அதற்குமுன்பாக இறைச்சித்துண்டினைக் கவ்விய நாய்கள் போன்று தமிழ்த்தேசியக்கூட்டமைப்பை இன்று அரசு நினைத்துக் கொண்டிருக்கின்றது. காரணம் என்னவென்றால் பதவிகள் மற்றும் சலு கைகள் கிடைக்கும்போது ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்களைப்போல ரணில் போட்ட இறைச்சித்துண்டினை இவர்களும் கவ்விவிட்டார்கள் என்பதே.
இன்னும் சிலரின் கருத்தின்படி அரிசிக்குள் பருப்பினைக் கலந்ததுபோன்றதான நிலைமை தோன்றியுள்ளது என்கின்றனர். தமிழ்த்தேசியம், சுயநிர்ணய உரிமை, இனப்படுகொலை என பேசிக் கொண்டிருந்த தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினர் எதிர்க்கட்சிப் பதவி யினை வழங்கியவுடன் வாய்பிளந்து நிற்கின்றார்கள் எனத் தோன்றியுள்ளது. 1977ஆம் ஆண்டுக்குப்பின்னர் வரலாற்றில் மீண்டும் ஒரு தமிழ்த் தலைவனாக இரா.சம்பந்தன் அவர்கள் பாராளுமன்றில் எதிர்க்கட்சி ஆசனத்தில் அமர்ந்திருப்பது தமிழினம் பெருமைப்படவேண்டிய விடயமாகும். அதற்கும் அப்பால் பாரிய பிரச்சினைகள் இருக்கின்றது.
இனப்படுகொலை என்கின்ற தீர்மானம் வடமாகாணசபையில் நிறைவேற்றப்பட்டதன் பின்னர் இவ்வாறான எதிர்க்கட்சிப் பதவி தமிழ்த்தேசியக்கூட்டமைப்புக்கு வழங்கப் பட்டிருப்பது என்பது பாரிய ஆபத்தான பாதைக்கே தமிழினத்தைக் கொண்டுசெல்கின்றது. பாராளு மன்றத்தில் சம்பந்தன் அவர்களுக்கு எதிர்ப்புக்கள் இருந்தாலும் அவர் எதிர்க்கட்சியாக வரவேண்டும் என அவையில் பல அங்கத்தவர்களும், பெரும்பான்மை இனத்தினைச் சேர்ந்த புத்திஜீவிகளும் விருப்பம் தெரிவித்திருந்தனர். அமிர்தலிங்கம் இருந்த காலப்பகுதியில் தான் ஜூலைக் கலவரம் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது. மீண்டும் அதே அத்தியாயத்திற்குள் தமிழினம் சென்றிருக்கின்றது. ஆனா லும் வித்தியாசங்கள் இருக்கின்றது. தொழில்நுட்பம் பாரிய வளர்ச்சி கண்டுள்ள இந்த நிலையில் உலக நாடுகளின் தலை யீடும் இலங்கையின் மீது காணப்படுகின்றது. விடுதலைப்புலிகளின் போராட்டம் பின்னடைவிற்கு சர்வதேச நாடுகளும் காரணமாக அமைந்தன. இல்லையெனில் விடுதலைப்புலிகளை இலங்கையரசினால் எதுவும் செய்ய இயலா மல் போயிருக்கும் என்றே கூறலாம்.
இன்று தமிழ் மக்களது பிரச்சினை எதிர்க்கட்சியாக ஆசனத்தில் இருப்பதோ அல்லது பதவியினை பெற்றுக்கொள்வதோ அல்ல. கடந்த 50 வருட காலங்களாக இலங்கையில் நடைபெற்றுக்கொண்டிருந்த மனித உரிமை மீறல்கள், இனப்படுகொலைகள் தொடர்பில் தமிழ் மக்களுக்கான தீர்வைக்கொண்டுவருவதற்கு தமிழ்த் தேசியக்கூட்டமைப்பினது பதவி கள் ஒருபோதும் அவசியமாக அமையாது. எதிர்க்கட்சிப் பதவியினை வழங்கியதனுடைய சிங்கள தரப்பின் முக்கிய நோக்கம் என்னவென்றால் தமிழ் மக்களுக்கான போராட்டம் இங்கு நடைபெறவில்லை மாறாக பயங்கரவாதிகளுக்கு எதிரான யுத்தமே இங்கு இடம்பெற்றது. பயங்கரவாதிகளையே நாம் இந்த நாட்டில் கொன்றொழித்தோம் என்று கூறுவதற்கு இந்த எதிர்க்கட்சிப்பதவி அவர்களுக்கு வாய்ப்பாக அமையும்.
முதலமைச்சர் விக்னேஸ்வரன் அவர்களால் வடமாகாணசபையில் கொண்டுவரப்பட்ட இனப்படுகொலை தொடர்பான தீர்மானம் தூக்கி யெறியப்படும். அது எவ்வாறெனில் ரணில் விக்கிரமசிங்கவின் அடுத்த தீர்மானமாக வடகிழக்கு இணைப்பு தொடர்பில் ஒரு நிலைமையை உருவாக்குவார். அது சர்வதேச அழுத்த மயமாக்கப்பட்டதாக இருக்கும். ஆகவே ரணில் விக்கிரமசிங்கவின் ஆதரவான அமெரிக்கா அதனை முன்னின்று நெறிப்படுத்தும். அமெரிக்காவை எதிர்த்து நாம் எதனையும் செய்யமுடியாது. ஆகவே வடகிழக்கினை இணைப்பதே சிறந்தது எனக்கூறுவார்.
இதனை ஏற்றுக்கொண்டு மாகாணசபைத்தேர்தல்கள் இடம்பெறும். வடகிழக்கு இணைந்த தாயகம் என்பது தமிழ்த்தேசியக்கூட்டமைப்பினது நீண்ட கால இலக்காகும். ஆகவே அந்தப்பிரச்சினைக்கான தீர்வும் காணப்படும். இதனையும் சர்வதேசத்திற்கு எடுத்துக்காட்ட முடியும். தமிழினம் வடகிழக்கு இணைந்ததாக இருக்கின்றது என்பதைக்காட்ட அரசு முனையும். எஞ்சியிருப்பது பொலிஸ் மற்றும் காணி என்ற இரு அதிகாரங்கள். பொலிஸ் அதிகாரத்தை ஏற்படுத்த தமிழ் தரப்பிலிருந்து பொலிஸ் உத்தியோகத்தர்கள் தெரிவு செய்யப்படுவதான ஒரு மாயையை உருவாக்கி அதனையும் வெளிஉலகிற்குக் காட்டி தமிழ், சிங்களம் என்ற இரு இனத்தின் பொலிஸாரும் சரிசமமாக பிரதேசங்களில் பணிபுரிவதற்கு வழி யமைத்துக்கொடுக்கப்படும். காணி அதிகாரத்தினைப் பொறுத்தவரை உயர் பாதுகாப்பு வலயங்களாக பிரகடனப்படுத்தப்பட்ட இடங்களைத் தவிர ஏனையவைகளையும் தமிழினத்திற்கு வழங்குவார்கள். இதற்கிடையில் அடுத்த கட்ட பாராளுமன்றத் தேர்தல் ஒன்றிற்கான காய்நகர்த்தல்களை ரணில் விக்கிரமசிங்க அவர்கள் தந்திரமாகச் செயற்படுத்துவார். பாராளுமன்றில் பெரும்பான்மைப் பலத்தினைப் பெறுவதற்கு போட்டி ரீதியாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். மாகாணசபை, உள்ளூராட்சி சபை எனத் தேர்தல்கள் வரும்பொழுது அதில் வெற்றிபெற முயற்சிசெய்வார்.
இவை இவ்வாறிருக்க தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் காய்நகர்த்தல்கள் ஒவ்வொன்றும் ஊசியின் மேல் நடப்பது போன்று இருக்குமேயானால் மாத்திரமே தப்பித்துக்கொள்வதற்கான வாய்ப்புக்கள் இருக்கின்றன. தமிழ் மக்களுடைய போராட்டம் பரிணாம வளர்ச்சிபெற்று இன்று தமிழ் மக்களுக்கான நிரந்தரத்தீர்வினைப் பெற்றுக்கொடுக்கும் நோக்கில் வடமாகா ணசபையில் இனப்படுகொலை என்கின்ற பிரேரணை கொண்டுவரப்பட்டது. தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு எதிர்க் கட்சியாக பதவி வகிப்பது இதனை சீர்குலைக்கும் வகையில் அமைந்துவிடும். இவ்விடயத்தில் மிகவும் அவதானமாக இருக்கவேண்டும்.
இத்தனைக்கு மத்தியிலும் அமெரிக்கா தனது தேசிய பாதுகாப்பிற்காகவும் ரணில் விக்கிரமசிங்க அவர்களை தனது கைக்குள் வைத்துக் கையாண்டு வந்தது. இனியும் கையாளப்போகின்றது. அதுபோன்றே இந்தியாவும் அந்த நிலைப்பாட்டிலேயே இருக்கின்றது. இதில் தேசியப்பாதுகாப்பிற்கு பாதகம் ஏற்படும் என்கின்றதான காரணத்தினால் மைத்திரி, ரணில், சந்திரிக்காவின் தலைமையில் மஹிந்தவின் ஆட்சி கவிழ்க்கப்பட்டது. இதற்குப் பக்கபலமாக அமெரிக்காவும், இந்தியாவும் இருந்தது. இத்தனைச் சம்பவங்களையும் த.தே. கூட்டமைப்பினரும், அதனது தலை மைகளும் நன்கு அறிந்துள்ள நிலையில் எதிர்க்கட்சிப் பதவியினை ஏற்றுக் கொண்டமையானது ஒரு சவாலாக அமை யும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. தமிழ் மக்கள் பெருமை கொள்ளும் அதே நேரம் மறுபக்கத்தில் வேதனையும் காத்திருக்கிறது. தாயகத்தின் விடுதலைக்காகப் போராடி மடிந்த மாவீரர்களின் கனவும், தேசியத் தலைவரது கனவும், தேசியத்தை நேசித்த மக்களது கனவும் இதனால் குழிதோண்டிப்புதைக்கப்படுகின்றது.
எதிர்க்கட்சியில் இருந்துகொண்டு தமிழ்த்தேசியம், சுயநிர்ணயம் பற்றிப்பேசுவது சாத்தியமற்றது. இனப்படு கொலையினை முன்வைத்த பிரதிநிதி களும் த.தே.கூட்டமைப்பின் ஊடாகவே வந்தவர்கள். தற்பொழுது இரு சாராருக்கும் இடையில் முறுகல்நிலை உருவாவதற்கான வாய்ப்புக்கள் இருக்கின்றது. இதனை சுமுகமான முறையில் தீர்த்துக்கொள்ளவேண்டும். சர்வதேச மட்டத்தில் த.தே.கூட்டமைப்பு வாதப் பிரதி வாதங்களை முன்வைப்பதற்கு சாதகமான தன்மைகள் அற்ற நிலை மையே இதனால் காணப்படும். எதிர்க்கட்சியாக இருந்துகொண்டால் அனைத்து விடயங்களுக்கும் குரல்கொடுப்பதற்கு நேரம் செலவழிக்கவேண்டியேற்படும். அன்றைய தமிழ்த்தலைவரால் எதிர்க்கட்சி ஆசனத்தில் அமர்ந்துகொண்டு சாதிக்க முடிந்தது என்ன? என்ற கேள்வியும் எழுப்பப்படுகின்றது. கற்ற தமிழ்த்தலைவர்கள் அனைவருமே தமிழ் மக்களின் போராட்டத்தைக் காட்டிக்கொடுத்த வரிசையிலேயே இடம்பெறுகின்றனர். அந்தவரிசையில் சம்பந்தன் அவர்களும் நோக்கப்பட்டாலும் போரின் வலி தெரிந்தவர் என்ற ரீதியில் நிதானத்துடன் செயற்படுவார் என்பதே மக்களது எதிர்பார்ப்பு.
சர்வதேச நாடுகளின் பார்வையில் இலங்கை எப்படி இருக்கவேண்டும் என்பதனை ரணில் விக்கிரமசிங்க அவர்கள் நன்கு அறிந்துவைத்திருக்கின்றார். இவருடைய குள்ளநரித் தந்திரங்களை த.தே.கூட்டமைப்பு அறிந்திராதவர்கள் அல்ல. த.தே.கூட்டமைப்புக்கு இன்னமும் வலுச்சேர்ப்பதற்காக மக்கள் களமிறங்கியுள்ள நிலையில் மீண்டுமொரு முறை மக்கள் ஏமாற்றமடைகின்றனர் என்பதேயாகும். தேசியத்தலைவரின் பெயரை உச்சரித்து வாக்குகேட்ட தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு இனி மேல் எவ்வாறு மக்கள் மத்தியில் சென்று வாக்குக்கேட்கப்போகின்றது. தந்தை செல்வா கூறியதைப்போன்று தமிழ் மக்களை இனிக் கடவுள்தான் காப்பாற்றவேண்டும். எதிர்க்கட்சிப் பதவி யினை தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு பெற்றுக்கொண்டாலும் அதற்கேற்ற வகையில் காய்நகர்த்தல்களை மேற்கொள்ளவேண்டும். இல்லையேல் தமிழ் மக்களுக்கான தீர்வுகளைப் பெற்றுக்கொடுக்க இயலாது என்பதுதான் உண்மை.
இரணியன்