எதிர்க்கட்சிப் பதவியில் தமிழினம் தொடர்ந்தும் இருப்பதை சிங்கள இனவாதக் கட்சிகள் ஒருபோதும் அனுமதிக்காது

433

தமிழ் – சிங்களப் பிரச்சினைகள் என்பது இன்று நேற்று ஆரம்பமானதல்ல. அது வாழையடி வாழையாக தொடர்ந்துவந்த பிரச்சினைகளே. வரலாற்று ரீதியாக உற்றுநோக்குவோமாகவிருந்தால் தமிழினமே இந்த நாட்டை ஆட்சிசெய்தது. சிங்களவர்கள் வந்தேறு குடிகளாகவே இருந்தனர். சிங்களவர்கள் தமக்கேற்ற வகையில் வரலாற்றுப்புத்தகங்களை உருவாக்கி இலங்கைக்கு சொந்தமானவர்கள் சிங்களவர்கள் எனக்கூறிவருகின்றனர். ஆசியாவிலேயே தலைசிறந்த நூலகம் யாழ்ப்பாணத்தில் இருந்தது. இதனைத் திட்டமிட்டு எரியூட்டிய சிங்களவர்களின் நோக்கம் தமிழர்களுடைய வரலாறு மறைக்கப்படவேண்டும் என்பதற்காகவே.

20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அறிவுபூர்வமான சரித்திரப்புத்தகங்களும் அங்கு இருந்தன. திட்டமிட்டவகையில் சிங்களவர்களினால் இந்நூலகம் எரியூட்டப்பட்டது. இது இவ்வாறிருக்க இன்றைய நாட்டின் சூழ்நிலையைப் பொறுத்தவரை எதிர்க்கட்சிப் பதவியில் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பினர் அமர்ந்தி ருப்பது சிங்கள இனவாதக்கட்சிகள் மத்தியில் விரும்பத் தகாததொன்றாகவே இருக்கின்றது. இப்பதவிக்கு எதிராக தமது இனவாதத்தைக் கக்கியவர்களாக இவர்களது செயற்பாடுகள் அமையப்பெற்றுள்ளது. வாசுதேவ நாணயக்கார, விமல் வீரவன்ச, உதய கம்மன்பில போன்றோர் நாடாளுமன்றத்தில் இணைந்து ஒரு எதிர்க்கட்சியினை அமைப்பதற்கு திட்டந்தீட்டி வருகின்றார்கள். காரணம் என்னவென்றால் தமிழ்த்தரப்பினர் இலங்கையில் சுகபோகவாழ்க்கை வாழக்கூடாது என்றும் சிங்கள இனத்திற்கு அடிமைகளாகவே வாழவேண்டும் என்பதும் இவர்களது நோக்கம்.

காலத்திற்குக்காலம் இனவாதத்தைக் கக்குவதற்காக பெதுபலசேனா, ராவண பலய போன்ற கட்சிகளால் சிலர் ஏவிவிடப்படுகின்றனர். குறிப்பாக விடுதலைப்புலிகளின் போராட்டம் மௌனிக்கப்பட்டதன் பின்னர் முஸ்லீம் சமூகத்தினரை அடக்கியொடுக்கும் வழியாக பொதுபலசேனா செயற்பட, இதனைக் கோத்தபாய ஆரம்பித்து வைத்தார். தர்க்கா, கொழும்பை அண்டியபகுதிகள், தம்புள்ளை, அநுராதபுரம் போன்ற இடங்களில் முஸ்லீம் இனத்தவர்கள் தாக்கப்பட்டும் பள்ளிவாசல்கள் உடைக்கப்பட்ட சம்பவங்களும் திட்டமிட்ட வகையில் ஆங்காங்கே இடம்பெற்றது.

ஆனாலும் மஹிந்த ராஜபக்ஷவினுடைய ஆட்சிக்காலத்தில் நழுவிப்போகும் அரசியலிலேயே முஸ்லீம் அரசியல்வாதிகள் ஈடுபட்டனர். இதனால் அரசை தட்டிக்கேட்க இயலாதவர்களாக அரசுடன் இணைந்து இவர்களது செயற்பாடுகள் அமைந்திருந்தது. மனவேதனையோடு சிங்கள இனத்துடன் கைகோர்த்திருந்த முஸ்லீம் இனத்தவர்கள் மீண்டும் மஹிந்த அவர்களை வெறுக்கநினைத்தனர். அப்போதாவது தமிழினத்திற்கு மஹிந்த அவர்கள் இழைத்த கொடு மைகள் இவர்களுக்குப் புரிந்திருக்க வேண்டும். இருந்தும் அவர்கள் ஆளுங்கட்சியாக யார் வருகின்றார்களோ அவர்களுடன் இணைந்து செயற்படுவது ஒரு கீழ்த்தனமான செயலாகும். இவர்களின் வரலாறுகள் இவ்வாறிருக்க, இவர்களும் தமிழ்பேசும் மக்கள் என்பது முக்கியமானவிடயம். மறைந்த அஷ்ரப் அவர்கள் இருந்த காலகட்டத்தில் தமிழரசுக்கட்சியின் வளர்ச்சிக்கு அரும்பாடுபட்டிருந்தார். இவற்றையெல்லாம் மறந்து முஸ்லீம் சமுதாயம் இன்று அரசுடன் கைகோர்த்துள்ளது. இரு இவ்வாறிருக்க தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு முஸ்லீம் பிரதி நிதிகளையும் தம்மகத்தே கொண்டுள்ளது. காரணம் என்னவெனில் அவர்களும் தமிழ்பேசும் மக்களே என்பதனாலாகும். தமிழினம் அடக்கியாளப்படும்போது முஸ்லீம் இனத்தவர்கள் கைகொட்டிச்சிரித்து காட்டியும் கொடுத்தனர். இவர்களது காட்டிக்கொடுப்பானது தமிழ்மக்களின் போராட்டத்திற்கு குந்தகத்தினை விளைவித்தாலும் பாரியளவில் முஸ்லீம் இனத்தினால் தமிழர் விடுதலைப்போராட்டத்தை தோற்கடிக்க இயலவில்லை.

இவ்வாறான நிலையில்தான் சர்வதேச பேச்சுக்கள் இடம் பெறும்பொழுது அதில் தாமும் பிரதிநிதித்துவம் வேண்டும் என அப்போதைய அரசுடன் இணைந்து குளிர்காய்ந்துகொண்டிருந்தனர். வர லாற்று ரீதியாக தமிழினம் ஒடுக்கப்படுகின்றது என்பதை இவர்கள் அறியாதவர்கள் அல்லவே. இனரீதியான அடக்குமுறைகளை தொடர்ந்தும் செயற்படுத்திவந்த சிங்கள பேரினவாத அரசு இன்று தமிழ் மக்களுக்கான சுபீட்சமான நிலைமைகள் உருவாகியுள்ள காலகட்டத்தில் அதனை அவர்களுக்கு வழங்கக்கூடாது என்பதில் இந்த இனவாதக்கட்சிகள் பிடிவாதமாக இருக்கின்றார்கள். அக்காலகட்டத்தில் இனக்கலவரங்கள் உருவாகுவதற்கான அடிப்படைக்காரணங்கள் எதுவாக இருந்தது என்பது அனைவருக்கும் தெரி யும். இன்று சர்வதேச தலையீடு என்பது அவர்களது தேசிய பாதுகாப்பிற்கு அமை வாகவே இலங்கைப் பிரச்சினையில் மூக்கை நுழைத்துள்ளனர். முன்னாள் விடுதலைப்புலிகளின் தளபதியாகவிருந்த கருணா அம்மான் அவர்கள் தினத்தந்தி ஊடகத்திற்கு வழங்கிய நேர்காணல் ஒன்றில் தெரிவித்த கருத்துக்களை இங்கு குறிப்பிட்டுக்காட்டவேண்டியுள்ளது. அதா வது அமெரிக்கா, சீனா, இந்தியா, பாகிஸ்தான் போன்ற நாடுகளின் உதவியு டனேயே விடுதலைப்புலிகளின் போராட்டம் தோற்கடிக்கப்பட்டது. மேற்குறிப்பிடப்பட்ட நாடுகள் அனைத்தும் உயர் தொழில்நுட்பம் உட்பட அதாவது அதிநவீன ஆயுதங்களையும் இலங்கைக்கு வழங்கியதுடன் இந்தியாவும் நேரடியாக யுத்தகளத்தில் நின்றது.

30 வருடகாலமாக இடம்பெற்ற யுத்தத்தை மஹிந்தவின் அரசு முடிவுக்குக்கொண்டுவந்ததன் பின் னாள் இந்நாடுகளே பங்கெடுத்தன. சர்வதேச விசாரணைகள் என்று வரும்பொழுது இந்த நாடுகளின் பங்கும் தமிழினப்படுகொலைக்கு உண்டு. இன்று சர்வதேச விசாரணை என்கின்றபொழுது இந்நாடுகளையும் விசாரிக்கவேண்டிய தேவை இருக்கின்றது. விடுதலைப்புலிகளுடன் யுத்தம் இடம்பெற்றதாகவிருந்தால் அப்பாவிப்பொதுமக்கள் கொலை செய்யப்படவேண்டியதன் அவசியம் இருந்திருக்காது. இங்கு இனவாதக்கட்சிகளின் நோக்கமும், தற்போது ஆட்சியில் இருக்கக்கூடிய அர சின் நோக்கம் என்னவென்றால் தமிழினம் என்பது ஒரு தாழ்த்தப்பட்ட இனம் என்ற கண்ணோட்டத்தில் பார்க்கின்றார்கள். டட்லி சேனாநாயக்கா தொடக்கம் சிறி மாவோ வரையும், ஜெயவர்த்தனா – சந்திரிக்கா வரையும், சந்திரிக்கா – மஹிந்த வரை தமிழ் மக்களுக்கான அடக்குமுறைகளைப் பார்க்கின்றபொழுது அவரை விட இவர் என்ற அடிப்படையில் தமிழினத்திற்கெதிரான இனவழிப்பினை நடைமுறைப்படுத்திவந்தனர். சந்திரிக் காவினுடைய ஆட்சி காலத்தின் போது தமிழினத்தையும், விடுதலைப் போராட்டத்தையும் அழித்தொழிக்கும் நடவடிக்கையில் மும்முரமாக ஈடுபட்டிருந்தாலும் அது சாத்தியமற்றதொன்றாக மாறியது. சந்திரிக்கா அம்மையாரின் ஆட்சிக்காலத்தின் இறுதிப்பகுதியில் விடுதலைப்புலிகளின் போராட்டத்தில் ஒரு திருப்புமுனை ஏற்படுகின்றது. இதில் குறிப்பிடப்படவேண்டிய விடயம் விடுதலைப்புலிகள் ஒரு பயங்கரவாதிகள் என அமெரிக்காவிற்குத் தெரியப்படுத்த வேண்டும் என்பதுவே. அக்காலகட்டத்தில் தான் அமெரிக்காவின் இரட்டைக்கோபுரத் தாக்குதலும் இடம்பெற்றது. அப்போது அங்கு ஒரு தீர்மானத்தை அமெரிக்கா முன்னெடுத்தது. அதாவது உலகத்தில் இருக்கக்கூடிய அனைத்து பயங்கரவாத நாடுகளையும் தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரவேண்டும் அல்லது அவர்களை முற்றாக அழித்தொழிக்கவேண்டும் என்பதாகும்.
தமிழர் விடுதலைப்போராட்டத்தை காட்டிக்கொடுக்க லக்ஷ்மன் கதிர்காமர் சகுனியானார். அவரைக் கொண்டே சந்திரிக்கா அம்மையார் விடுதலைப்புலிகளை பயங்கரவாதிகள் என அடையாளப்படுத்தி அவர்களின் போராட்டத்தையும் கொச்சைப்படுத்தி சர்வதேசத்தில் ஒரு பரபரப்பை ஏற்படுத்தினார். அத்துரோகி விடுதலைப்புலிகளால் பின்னர் சுட்டுக்கொல்லப்பட்டார். ஆனாலும் சந்திரிக்கா அரசிற்கு அது பாரிய வெற்றியாக அமைந்துவிட்டது. தொடர்ந்தும் ஆட்சி பீடமேறிய மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் அதனை முன்னெடுத்தார். சிங்களவர் ஒருபோதும் போராடி தமிழினத்தை வெற்றிகொள்ள முடியாது என அவர்களுக்குத் தெரியும். அதற்காகவே அவர் உலக வல்லரசுகளை நாடினார். அத்தனை வல்லரசுகள் மற்றும் தொழில்நுட்பத்துடனும் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபா கரன் தனது படைகளுடன் இறுதிவரை போரிட்டார். இறுதியில் இப்போராட்டம் மஹிந்த ராஜபக்ஷவின் அரசினால் மழுங்கடிக்கப்பட்டது. ஆனால் இன்றும் இப்போராட்டம் சர்வதேச ரீதி யாக பாரிய வளர்ச்சியினைக் கண்டுள்ளது. இந்த நிலையில் விடுதலைப்புலிகளால் உருவாக்கம்பெற்ற த.தே.கூட்டமைப்பானது வரலாற்றில் இன்று ஒரு எதிர்க்கட்சியாகத் திகழ்கின்றது. அனைத்துத் தமிழ் மக்களும் பெருமைகொள்ள வேண்டிய விடயம் என்றாலும் இதனை தொடர்ந்தும் சிங்களப்பேரினவாதிகள் அனுமதிக்கப்போவதில்லை. காலப் போக்கில் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு தொடர்ந்தும் எதிர்க்கட்சிப் பதவியினை தக்கவைத்துக்கொள்ளுமாகவிருந்தால் சர்வதேச ரீதியாக பல விடயங்களை சாதித்துக்காட்டுவார்கள் என்பதும் இவர்களுக்கு நன்கு தெரியும். ஆகவே அதனைக் கருத்திற்கொண்டு சிங்கள தேசம் தமிழினத்திற்கு, த.தே.கூட்டமைப்புக்கு எதிராக பாரிய சதி களை மேற்கொள்கின்றது.

மைத்திரி மற்றும் ரணில் போன்றவர்கள் நல்லவர்களாக த.தே.கூட்டமைப்பின் மத்தியில் வேடமணிந்து உள்ளே குழப்பத்தினை ஏற்படுத்துகின்றனர். தமிழின அழிப்பிற்கு முக்கிய காரணகர்த்தாவாக அன்று அமைச்சர் பதவியில் இருந்தவர்தான் இந்த மைத்திரிபால சிறிசேன அவர்கள். விடுதலைப்புலிகளை முற்றாக அழிக்கவேண்டும் என பாராளுமன்றில் ஆதரவு தெரிவித்தவர்கள் தான் இவர்கள். தமிழரின் வரலாற்றுக்களை எரித்தவர்கள் தான் இந்த ரணில் கூட்டணி. இன்று சர்வதேச, உள்ளூர் விசாரணகள் எனக் கூறிக்கொள்கின்றனர். சர்வதேசத்திற்கு நல்லவர்கள் போல பாசாங்கு காட்டுகின்றார்களே தவிர தமிழினத்திற்கு துரோகம் விளைவிப்பதே இவர்களது திட்டம். எதிர்க்கட்சிப் பதவி என்பது தமிழினத்திற்கு அல்லது த.தே.கூட்டமைப்புக்கோ ஒரு வரப்பிரசாதம் அல்ல. ஒரு வரலாற்று ரீதியான வெற்றி எனலாம். இதனோடு தமிழ் மக்களது பிரச்சினைகள் தீர்ந்துவிடும் என்பதும் அல்ல. பாராளுமன்றில் தமிழர்களுக்கு அந்தஸ்தினை வழங்கியிருக்கின்றோம் என சர்வதேச மட்டத்தில் காட்டி, பின்னர் பெரும்பான்மை இனத்தவர்கள் இதற்கு ஆதரவு தெரிவிக்கவில்லை அவர்கள் 52 ஆசனங்களை வைத்து எதிர்க்கட்சியாக செயற்படவிருக்கின்றார்கள். ஆகவே நீங்கள் தானாக விலகிச்செல்லுங்கள். என இந்த அரசாங்கம் கூறிக்கொள்ளும் நிலைமைதான் தோற்றம்பெறும்.

சர்வதேச ரீதியாக ஒரு முகத்தைக்காட்டும் இலங்கையின் இனவாதக்கட்சிகள் சம்பந்தனை திருப்திப்படுத்துவதற்காக எதிர்க்கட்சிப் பதவியினைக் கொடுத்துவிட்டு, செல்வம் அடைக்கலநாதனைத் திருப்திப்படுத்துவதற்கு அவருக்கும் ஒரு பதவியினை வழங்கிவிட்டு, ஆயுதக்குழுக்களின் வாயினையும் அடைத்;துவிட்டு, எதிர்க்கட்சி என்ற ஒரு பெயருக்காக பாராளுமன்றில் அமர்ந்திருக்கின்றார்களே தவிர வேறொன்றுமில்லை. இதிலிருந்து நாம் எதனை விளங்கிக்கொள்கின்றோம். அதாவது சிங்கள தேசம் ஒருபோதும் தமிழினம் நிம்மதியாக அல்லது உயர் அந்தஸ்தினைப்பெற்று வாழ்வதை அனுமதிக்காது என்பதுவே. வடகிழக்குப் பகுதிகளில் சிங்கள ஆக்கிரமிப்புக்கள் இல்லாதுபோனால் சிங்களப் பிராந்தியங்களைவிட வடகிழக்கு செல்வந்தப் பிரதேசங்களாக மாற்றம்பெறும். அனைத்து முதலீட்டாளர்களும் வந்துசெல்லக்கூடிய சூழ்நிலைகள் உருவாகும். வடகிழக்குப் பகுதி தமிழர்களுக்குச் சென்றால் முக்கிய வளப்பகுதிகள் சிங்களவர்களுக்கு இல்லாதுபோகும். காட்டுக்குள் தான் சிங்களவர்களின் வாழ்வு அமையும். கரையோர வளம், இயற்கைத் துறை முகம் என்பதும் தமிழினத்திற்கு வழங்கப்பட்ட வரப்பிரசாதம். காட்டிக் கொடுத்த காக்கைவன்னியனின் கதை யையும் படித்திருப்பீர்கள். அதில் தமிழினத்திற்கு நடந்த துரோகச்செயல் என்ன என்பதும் தெரியும். இந்த அரசி னுடைய மாயத்தன்மையிலிருந்து விடுபடுவதற்கான முயற்சிகளையே தமிழ்த்தேசியக்கூட்டமைப்பினர் கையாள வேண்டும். சர்வதேச விசாரணைக்கு மண்தூவுவதற்காகவே த.தே. கூட்டமைப்புக்கு எதிர்க்கட்சிப்பதவி வழங்கப்பட்டிருக்கின்றதே தவிர, இப்பிரச்சினையில் இருந்து விலகிய பின் த.தே.கூட்டமைப்பினரை ஒரு பொருட்டாக அரசு எண்ணாது. எனவே எதிர்காலத்தில் த.தே.கூட்டமைப்பு சிந்தித்துச் செயற்படத்தவறினால் மீண்டும் ஒரு இனக்கலவரம் உருவாகுவதற்கான வாய்ப்புக்கள் இருக்கின்றது என்பதையே கூறிக்கொள்ளமுடியும்.

மறவன்

SHARE