தோளுக்கு சீலை போராட்டம் – ஒரு பார்வை

550

 

 

 

தோளுக்குச் சீலை மறுக்கப்பட்ட காலத்தில் நடந்த அவல காட்சி…
ரு நடிகை சினிமாவில் மேலாடை இல்லாமல் நடித்தால், இன்றைய சமுதாயத்தில் சிலர் கொஞ்சம் ஓவராகவே பொங்கியெழுந்து விடுகிறார்கள். அவர்களில் சிலர், இன்னும் ஒருபடி மேலே போய், சம்பந்தப்பட்ட நடிகைக்கே சேலையை இலவசமாக அனுப்பி வைக்கும் போராட்டம் நடத்துகிறார்கள். காரணம் கேட்டால், ‘ஒரு நடிகை மேலாடை இல்லாமல் நடித்தால், கலாச்சாரம், பண்பாடு சீர்கெட்டுப் போய்விடும்’ என்கிறார்கள்.
ஆனால், கி.பி.1800களில் ஒரு நாட்டில் பெண்கள் மேலாடை அணியாமலேயே வாழ்ந்தார்கள் என்றால், அதை நாம் நம்பித்தான் ஆகவேண்டும். அந்த நாடு, எங்கோ எத்தியோப்பியாவிலோ, சோமாலியாவிலோ அல்லது தென் ஆப்பிரிக்காவிலோ இல்லை. நம் தமிழ்நாட்டில்தான் இருந்தது. அதுதான் நாஞ்சில் நாடு.
வருடத்தின் எல்லா நாட்களும் சலசலத்துக்கொண்டு ஓடும் நீரோடைகள், இறைச்சலுடன் பாயும் ஆறுகள், வெள்ளியை உருக்கிக் கொட்டுவது போன்ற நீர்வீழ்ச்சிகள்… என்று கேரளத்தின் ‘அக்மார்க்’ அடையாளங்கள் நிறைய.
இந்த கேரள மாநிலத்தின் தென் பகுதிகளையும், இன்றைய தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டத்தையும் உள்ளடக்கி இருந்த ஒரு சமஸ்தானம்தான் திருவிதாங்கூர். திருவனந்தபுரம் இவர்களது தலைநகரமாக இருந்தது. வெள்ளி நிறத்தில் வலம்புரிச் சங்கு பொறித்த செம்மை நிறக் கொடி, இந்த சமஸ்தானக் கொடியாக திகழ்ந்தது.இந்த சமஸ்தானத்தின் ஒரு பகுதியாக இருந்ததுதான் நாஞ்சில் நாடு. வயலில் உழுவதற்கு பயன்படும் கலப்பைக்கு நாஞ்சில் என்ற பெயரும் உண்டு. இந்த பகுதியில் உழவுத் தொழில் அதிக அளவில் நடந்ததால், இப்பகுதியும் நாஞ்சில் நாடு என்று அழைக்கப்பட்டது. இன்றைய கன்னியாகுமரி மாவட்டத்தின் அகஸ்தீஸ்வரம், பூக்களுக்கு பெயர்போன தோவாளை ஆகிய வட்டங்களை உள்ளடக்கி பகுதிதான் நாஞ்சில் நாடு என்று அழைக்கப்பட்டது.‘நாங்கள் தோளில் சீலை அணிய உரிமை வேண்டும்…’ என்று அவர்கள் போராடத் துவங்க… பல ஆண்டுகளுக்கு பிறகு அதில் வெற்றியும் கிடைத்தது. இந்த வெற்றிக்காக ரத்தம் சிந்திய, மானத்தை தியாகம் செய்த உயிர்கள் ஏராளம்… ஏராளம்…! தாழ்த்தப்பட்ட பட்டியலில் இடம்பெற்ற ஜாதியைச் சேர்ந்த பெண்கள்தான் இந்த கொடுமைகளை அனுபவித்தனர் – தாங்கிக்கொண்டனர்.

இவர்கள் எங்கு சென்றாலும், ஆதிக்க ஜாதியினருக்கு மரியாதை கொடுப்பதற்காக தங்கள் மேலாடையை அணியக்கூடாது என்பது, நாஞ்சில் நாட்டை உள்ளடக்கி ஆட்சி செய்த திருவிதாங்கூர் சமஸ்தான மன்னர்களின் கண்டிப்பான உத்தரவு.
‘சமூகத்தில் பெரும் மரியாதைக்குரிய ஒரு மனிதரிடம் ஒரு பெண் தனது மார்பை திறந்து காட்டுவது என்பது, அந்த நபருக்கு சமூகம் அளிக்கும் மரியாதையாகவே கருதப்பட்டது’ என்கிறார், ‘திருவிதாங்கூரின் இயல்பு வாழ்க்கை’ என்ற நூலை எழுதிய ஆங்கிலேயரான சாமுவேல் மேட்டீர். அதை மீறி மேலாடை அணிந்தால் கொடுமையான தண்டனைகளுக்கு ஆளாக்கப்பட்டனர். அதற்கு பயந்தே, மேலாடை இன்றி நடமாடினர், ஒடுக்கப்பட்ட ஜாதியினர்.
இன்னொரு அவல காட்சி…
ஆனாலும், எத்தனை நாட்களுக்குத்தான் மேலாடை அணியாமல் இருப்பது? என்று மனம் புழுங்கிய அவர்களில் சிலர் போராடத் துவங்கினர். அவர்களுக்கு ஆதரவாக அய்யா வைகுண்டர் போன்றோர் குரல் கொடுத்தனர். அந்த தெம்பில் ஆங்காங்கே கலகங்களும் எழுந்து அடங்கின.தோளுக்குச் சீலை உரிமை கேட்டு தாழ்த்தப்பட்டவர்கள் போராடுகிறார்கள் என்பதை அறிந்த சமஸ்தான மன்னன் கோபத்தின் உச்சிக்கே சென்றுவிட்டான். ‘அவர்கள் அப்படித்தான் ஆடை அணியாமல் இருக்க வேண்டும்; மீறி அணிந்தால், அவர்கள் நீங்கள் என்ன வேண்டுமானாலும் செய்யலாம். ஏன்… கொலை கூட செய்யலாம்…’ என்று அரக்கத்தனமாக வாய்மொழியாக உத்தரவிட்டான் மன்னன்.
அதன்விளைவு… மார்பை மறைக்க முயன்ற பெண்கள் ஆடை கிழித்து அவமானப்படுத்தப்பட்டனர். சிலர் கொலையும் செய்யப்பட்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, நாஞ்சில் நாட்டில் உள்ள நெய்யாற்றின்கரை, நெய்யூர், கல்குளம், கோட்டாறு, இரணியல் போன்ற பகுதிகளில் கலவரம் வெடித்தது.
அய்யா வைகுண்டரும் இந்த போராட்டத்தில் பெரும் பங்கெடுத்துக் கொண்டார். தன்னை காண வரும் பெண்கள் கண்டிப்பாக தோளுக்கு சீலை அணிந்துதான் வரவேண்டும் ஆணையிட்டார். அன்றைய காலக்கட்டத்தில், ஒடுக்கப்பட்ட வகுப்பு பெண்கள், தோளுக்கு சீலை அணியக்கூடாது என்று இருந்த வழக்கம் பற்றி தனது அகிலத்திரட்டிலும் பதிவு செய்திருக்கிறார் அவர்.
“பூமக்கள் நீதமுடன் போட்ட தோள்சீலை தன்னைப்
போடாதே என்றடித்தானே சிவனே அய்யா…” என்று குறிப்பிடும் அய்யா,
“என் மக்கள் சான்றோர்கள் இடுப்பில் எடுத்த குடம்
ஏண்டி இறக்கென்றானே சிவனே அய்யா….” என்று, நாடார் குல பெண்கள் இடுப்பில் குடம் வைத்து செல்லக்கூடாது என்று ஆதிக்க ஜாதியினர் கூறியதையும் பதிவு செய்கிறார்.
இதற்கிடையில், மேலை நாட்டில் இருந்து வந்திருந்த கிறிஸ்தவ பரப்பாளர்கள், நாஞ்சில் நாட்டில் நிலவிய சூழ்நிலையை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ள ஆரம்பித்தனர். கி.பி.1780களிலேயே அவர்கள் நாஞ்சில் நாட்டிற்குள் நுழைந்துவிட்டாலும், தோளுக்கு சீலை போராட்டம் தீவிரம் அடைந்தபோது, அதற்காக போராடியவர்களுக்காக தங்கள் சுயநல குரலை எழுப்பினர்.
சமஸ்தான உத்தரவை எதிர்த்து தோளுக்கு சீலை அணிந்த  பெண்கள்…
‘தாழ்த்தப்பட்ட ஜாதியில் பிறந்ததற்காக ஏன் வருத்தப்படுகிறீர்கள்? கிறிஸ்தவ மதத்திற்கு மாறினால் உங்களுக்கு எல்லா உரிமைகளும் கிடைக்கும். திறந்த மார்போடு திரியாமல் தோளுக்கு சீலை அணிந்து கொள்ளலாம். மேலும், உங்களது பொருளாதார – கல்வி வசதிகளுக்கும் ஏற்பாடு செய்து தருகிறோம். உண்பதற்கு சுகாதாரமான – ஆரோக்கியமான உணவும் எங்கள் நிறுவனங்கள் சார்பில் தருகிறோம்…’ என்று கூறிய அவர்களது ஆசை வார்த்தைகள், தாழ்த்தப்பட்டோர் பலரது மனதை மாற்றியது. ஏராளமானபேர் தங்களை கிறிஸ்தவர்களாக்கிக் கொண்டார்கள். தோளுக்கு சீலை அணிந்து மார்பை மறைத்தும் கொண்டனர். அவர்களை பின்பற்றி தாழ்த்தப்பட்ட வகுப்பில் இருந்த பிற பெண்களும் தோளுக்கு சீலை அணிய ஆரம்பித்தனர்.
இது, ஆதிக்க ஜாதியினருக்கு பிடிக்கவில்லை. ‘நீங்கள் எந்த மதத்திற்கு மாறினாலும் தாழ்த்தப்பட்டவர்கள்தான்…’ என்று கூறி, அவர்களை பொது இடங்களில் அவமானப்படுத்தினர். மதம் மாறிய பெண்கள் அணிந்த மேலாடையை கிழித்து எறிந்தனர்.
இந்த பிரச்சினை சென்னை மாகாண நீதிமன்றத்திலும் விசாரணைக்கு வந்தது. நீதிபதிகள் ஆங்கிலேயர்கள் என்பதால் ஒரு சார்பாகவே தீர்ப்பு கூறப்பட்டது. 1847 மார்ச் 19-ம் தேதி ஒரு தீர்ப்பை அவர்கள் வெளியிட்டனர்.
‘ஒடுக்கப்பட்ட இந்துக்கள் மேலாடை அணியவோ, நகைகள் அணியவோ உரிமை அளிக்கப்பட மாட்டாது. ஆனால், கிறிஸ்தவ மதத்திற்கு மாறியவர்களுக்கு இந்த கட்டுப்பாடு பொருந்தாது’ என்று தீர்ப்பு கூறியது சென்னையில் உள்ள ஆங்கிலேயே நீதிமன்றம்.
இந்த தீர்ப்பு ஒடுக்கப்பட்ட மக்களை மேலும் கிளர்த்து எழச் செய்தது. ஆங்காங்கே கலகங்கள் நடந்தன.
சான்றோர் என்கிற நாடார் இனத்தில் உயர் வகுப்பினர் இருந்தனர். இவர்கள் நல்ல வசதியோடு வாழ்ந்ததால், இவர்களது பெண்கள் தோளுக்கு சீலை அணிந்து மார்பை மறைத்துக் கொண்டனர். அதேநேரம், அந்த இனத்தில் மேலும் சில உட்பிரிவுகள் இருந்தன. இந்த பிரிவில் உள்ளவர்களே பனை சார்ந்த தொழிலில் ஈடுபட்டனர் (இன்றும்கூட இந்த பாகுபாடு இந்த சமூகத்தில் உள்ளது. உயர்ந்த அந்தஸ்தில் உள்ளவர்கள், சம அந்தஸ்தில் உள்ள குடும்பங்களில்தான் பெண் கொடுப்பதும், எடுப்பதுமாக உள்ளனர்). இந்த சமூகத்தில் அவர்களே சமஸ்தான கொடுமைகளுக்கு அதிகம் ஆளாக்கப்பட்டனர். இவர்களைப் போன்று, தாழ்த்தப்பட்ட பட்டியலில் இடம் பெற்றிருந்த பிற சமூகத்தினரும் பாதிக்கப்பட்டனர்.
‘கிறிஸ்தவ மதத்திற்கு மாறினால் மட்டும்தான் எங்கள் மானம் காக்கப்படுமா?’ என்று பொங்கியெழுந்த ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாக, அதுவரை போராட்டத்தில் பங்கேற்காமல் ஒதுங்கி இருந்த நாடார் இன உயர் வகுப்பினரும் போராட்டத்தில் பங்கு பெற்றனர். இவர்கள் மெஜாரிட்டியாக இருந்த பகுதிகளில் ஆதிக்க ஜாதியினருக்கு பதிலடி கொடுக்கப்பட்டது.
நிலைமை மோசமானதால் சென்னை மாகாண கவர்னர் இந்த பிரச்சினையில் தலையிட்டார். அதைத்தொடர்ந்து, 1859 ஜூலை 26-ந் தேதி திருவிதாங்கூர் சமஸ்தான மன்னர் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். ‘தோளுக்கு சீலை அணியாத பெண்கள் இனி அதை அணிந்து கொள்ள அனுமதி வழங்கப்படுகிறது. அதேநேரம், மேல் ஜாதிப் பெண்களைப் போன்று ஆடை அணியக்கூடாது…’ என்பதுதான் அந்த அறிவிப்பு.
இதைத்தொடர்ந்து தோளுக்கு சீலை போராட்டம் நிறைவுக்கு வந்தது. ஆனாலும், இந்த சுதந்திர உரிமையைப் பெற நாஞ்சில் நாட்டு வரலாற்றில் படிந்த ரத்தக்கறையை மட்டும் யாராலும் அகற்ற முடியாது.
SHARE