இந்த பூமியை பாதுகாப்பது ஓசோன் படலம் என்பது நமது அறிவியல் கண்டுபிடிப்பு, அதில் ஓட்டை விழச்செய்தது அதே அறிவியலால் நடந்த கண் துடைப்பு.
ஓசோன் பாதுகாப்பு தினம் கொண்டாடப்படுவதால், அதை பாதுகாக்கும் விழிப்புணர்வு எல்லோரிடமும் ஏற்படும்.
மழைக்காகவும், ஆக்ஸிஜன் சமநிலைக்கும் காரணமாக உள்ள மரங்களை நடுவது ஒரு முன்னேற்ற நடவடிக்கை.
நம் முன்னேற்றத்துக்கு ஏற்ப அறிவியல் தீங்குகளும் நம்மோடு வளர்ந்திருக்கின்றன. அவை இரண்டுவகை, 1. தீங்கு என தெரியாதவை 2. தீங்கு என்று தெரிந்தும் ஒழிக்க போராடிக் கொண்டிருப்பவை.
ஓசோன் படலம் என்பது இந்த பூமியினுடைய வளிமண்டலத்தின் மேலடுக்கு. அது சூரியனிலிருந்து பூமிக்கு ஒளியோடு வரும் புறஊதாக் கதிர்களை (UV) கிரகித்துக்கொள்கிறது.
இதன்மூலம் பூமியில் உள்ள மனிதன் உட்பட்ட விலங்குகளும், தாவரங்களும் தனது இயல்பு கெடாமல் வாழமுடிகிறது.
ஒருவேளை, ஓசோன் படலம் முற்றிலும் சிதைந்தால், புற ஊதாக்கதிர்கள் கிரகிக்கப்படாமல் அப்படியே பூமியில் விழும், உயிர்களுக்கு புற்றுநோய் போன்ற கொடிய நோய்களும் வெப்பமாதலால் விவரிக்க முடியாத இயற்கை சீற்றங்களும் ஏற்படும்.
இந்த ஓசோன் படலத்தை பிரிட்டிஸ் இயற்பியலாளர் சிட்னி சாப்மென் 1930 ல் முதன் முதலாக கண்டுபிடித்தார்.
இப்படி இந்த பூமியின் பாதுகாப்புக்கு இயற்கையின் நன்கொடையாகவும், அபாய கதிர்களை தடுக்கும் கவச குடையாகவும் உள்ள ஓசோன் படலத்தை மனிதர்கள் உருவாக்கிய சில மோசமான வேதிப்பொருள்கள் (Chemicals) சிதைப்பதை 1970 ல் அறிவியலாளர்கள் கண்டுபிடித்தனர்.
ஓசோன் படலத்தில் ஓட்டை விழுந்ததால், 1906 லிருந்து 2005 ம் ஆண்டு வரை, காற்றடுக்கின் மேற்பரப்பில் 0.74 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை அதிகரித்துள்ளது என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
இந்த வெப்பமாதலால், 2004 ல் ஆசிய நாடுகளில் ஏற்பட்ட சுனாமி, நேபாளத்தின் தலைநகரான காத்மாண்டுவில் ஏற்பட்ட நிலநடுக்கம், 1999 மற்றும் 2014 ல் ஒடிசாவை தாக்கிய கடுமையான புயல், உத்தரகாண்ட் மாநிலம் கேதர்நாத், பத்ரிநாத் நகரங்களில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு, குஜராத்தில் பூகம்பம் என, இதுபோல உலக நாடுகள் முழுவதுமே கடந்த நூற்றாண்டின் இறுதியிலிருந்து சீரழிந்து வருகிறது.
இயற்கை தனது சீற்றத்தால் தந்த பேரிடர்களுக்கு மூல காரணமானது ஓசோன் அடுக்கு சிதைவுதான்.
ஒசோன் (O3) என்பது ஆக்ஸிஜனின் (O2) இன்னொரு வடிவம்தான்.
உயிர்கள் சுவாசிக்க ஆக்ஸிஜன் பயன்படுவதுபோல, ஓசோன் காற்றின் மேலடுக்கில் பூமியின் காவலனாகவே இருந்து, சூரியனிலிருந்து வெளிப்படும் விஷ கதிர்களை விழுங்குகிறது.
அத்தகைய பாதுகாப்பு அடுக்கான ஓசோன் படலத்தை, பூமியிலிருந்து தொழிற்சாலைகளிலும் வாகனங்களிலும் வெளியாகும் கார்பன் மோனாக்ஸைடு, கந்தக(சல்பர்) மோனக்ஸைடு போன்ற. இடைநிலை வாயுக்கள் சிதைகின்றன.
தன் அளவில் இவை நிறைவுபெறாமல் இருப்பதால், காற்றின் மேலடுக்கு நோக்கி பாய்ந்து செல்லும்போது, ஓசோனோடு வினைபுரிந்து அதில் உள்ள ஒரு ஆக்ஸிஜனை பெற்றுவிடுகின்றன.
இதன் காரணமாக, ஓசோன் மூலக்கூறுகள் ஆக்ஸிஜன் மூலக்கூறுகளாக மாறுகின்றன.
கார்பன்மோனாக்ஸைடு (CO) கார்பன் டை ஆக்ஸைடாகவும் (CO2), கந்தக மோனாக்ஸைடு (SO), கந்தக டை ஆக்ஸைடாகவும் (SO2) மாறிவிடுகின்றன.
இந்த காற்று மாசுவினால் ஆக்ஸிஜன், ஓசோன் அளவு வளிமண்டலத்தில் குறைகிறது. நாம் பூமியில் தவறாக உருவாக்கும் காற்று மாசுக்களை குறைத்தாலே போதும் ஓசோன் படலம் தன்னை சரிசெய்துகொள்ளும்.
சூரியனிலிருந்து வரும் புறஊதா கதிர்கள் (UV Rays) ஓசோனால் கிரகிக்கப்படுவதால் ஓசோன் பிரிவது(O2 + O) போலவே, மீண்டும் அதே கதிர்களால் ஆக்ஸிஜனோடு மேலும் ஒரு தனி அணு சேர்ந்து ஓசோனாகாவும் மாறுகிறது.
இந்த இயற்கை சுழற்சி, பூமியில் உள்ள உயிர்களை பாதுகாக்கும் நல்ல ஒரு திட்டமிடல். அதையும் தாண்டி விஷ வாயுக்களை உருவாக்கும் தனது விஷம தவறுகளால் ஓசோன் அடுக்கை நாம் அழிக்க முற்பட்டால், நம் முட்டாள்தனத்துக்கு தண்டனையாக, கடவுள் நம் கையை எடுத்து நம் கண்ணையே குற்றுவது போல் விபரீத முடிவுதான் அமையும்.
மக்களிடம் விழிப்புணர்வை உண்டாக்குவது முதுகைச் சுற்றி மூக்கை தொடுவது. தீங்கான தொழிற்சாலைகளை முடக்குவதுதான், நேரே குத்தி மூக்கை உடைப்பது.
மனிதன் இயற்கையின் பின்னணியில் இருப்பதால், இயற்கையை கெடுக்கும் அறிவியல் கண்டுபிடிப்புகள், நிச்சயமாக மனிதனையும் கெடுக்கும்.
அதை நாம் அனுபவ ரீதியாக புரிந்துகொள்ள ஆகும் கால தாமதத்திற்குள் அவைகள் பயன்பாட்டுக்கு வந்து பாராட்டையும் பெற்று வியாபார காலூன்றி விடுகின்றன.
சரியானதை கண்டுபிடிக்க முடியாமல், கண்டுபிடித்ததை சரியானதாக நினைத்துக்கொள்கிறோமா.!