ஜவ்வு மிட்டாய் – திரை விமர்சனம்

371

சென்னையில் தனது நண்பர்களுடன் சிறு சிறு அடிதடி வேலைகளை செய்து வரும் குமாருக்கு, மதுரைக்கு அருகில் இருக்கும் கிராமத்தில் அட்டூழியம் செய்து வரும் ஒருவனை கொலை செய்யும் பணி வருகிறது.

பணத்துக்காக அதை ஏற்று, தனது நண்பர்களுடன் அந்த கிராமத்திற்கு செல்கிறார் நாயகன். இவர்கள் கொலை செய்யும் நபர் யார் என்பதை கூறும், முனியசாமி என்பவரை தேடி அலைகிறார்கள்.

இறுதியில், அவர் வேறொரு வேலையாக வெளியூர் சென்றிருப்பதால், அவர் வரும்வரை அவரது வீட்டு மொட்டை மாடியில் தங்குகிறார்கள்.

அதே ஊரில், பெரிய மனிதர் என்ற போர்வையில் பெண்களிடம் தவறாக நடப்பதும், புறம்போக்கு நிலங்களையும், விவசாயிகளின் நிலங்களையும் அபகரித்து வரும் ஜெயமணிக்கும் இவர்களுக்கும் பிரச்சினை வருகிறது.

இதேவேளையில், அந்த ஊரில் வசித்து வரும் நாயகி வாகிணி நாயரை நாயகன் ஒருதலையாக காதலிக்க ஆரம்பிக்கிறார். இது, வாகிணியை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஜெயமணிக்கு தெரிய வரவே, இவர்கள் மூவரையும் தீர்த்துக்கட்ட முடிவெடுக்கிறார். அதன்படி, தனது ஆட்களை வைத்து நாயகன் மற்றும் அவரது நண்பர்களையும் அடித்து துவம்சம் செய்கிறார்.

ஆனால், நாயகியின் முயற்சியால் மூன்று பேரும் உயிர் பிழைக்கிறார்கள். பின்னர், ஜெயமணியை பழிவாங்க மூன்று பேரும் துடிக்கிறார்கள். அப்போது நாயகியும் அந்த ஜெயமணியை கொல்ல துடிப்பது இவர்களுக்கு ஆச்சர்யத்தை கொடுக்கிறது.

இறுதியில், நாயகி ஜெயமணியை கொல்ல துடிக்க காரணம் என்ன? இவர்கள் கொலை செய்ய தேடி வந்த ஆள் யார்? நாயகனும், நாயகியும் காதலில் ஒன்று சேர்ந்தார்களா? இல்லையா? என்பதே மீதிக்கதை.

நாயகன் குமார் படம் முழுக்க முகத்தில் தாடியுடன் வந்தாலும், பார்க்க அழகாக இருக்கிறார். வசனங்களும் அழகாக பேசுகிறார். ஆனால் நடிப்பில்தான் ரொம்பவும் முன்னேற்றம் வேண்டும்.

அதிலும், ரொமான்ஸ் காட்சிகளில் ரொம்பவுமே திணறியிருக்கிறார். நாயகி வாகிணி நாயருக்கும் நடிப்பு என்பது சுத்தமாக வரவில்லை. இவர் வில்லனை கொல்ல வேண்டும் என ஆக்ரோஷப்படுவதும், தன்னுடைய சோகக் கதையை நினைத்து வருந்தும் காட்சிகளும் சிரிப்பைத்தான் வரவழைக்கின்றன.

நாயகனின் நண்பர்களாக வருபவர்கள் காமெடி பண்ணுவதாக நினைத்து நமக்கு எரிச்சலைத்தான் கொடுத்திருக்கிறார்கள். இயக்குனர் இப்படத்தின் போஸ்டரில் கிளாமரை அள்ளித் தெளித்து அனைவரையும் தியேட்டருக்கு வரவழைக்க முயற்சி செய்திருக்கிறார். அதில் வெற்றியும் கண்டிருக்கிறார்.

ஆனால், போஸ்டரை பார்த்து படத்தை பார்க்க சென்றால், வெறும் ஏமாற்றமே மிஞ்சுகிறது. படத்தில் எல்லா கதாபாத்திரங்களையும் ரொம்பவுமே நடக்க வைத்திருக்கிறார்.

படம் முடிந்து வெளியே வரும்போது, அவர்கள் நடந்துபோவது மட்டுமே தான் நமது நினைவுக்கு வருகிறது. மற்றபடி எதுவும் மனதில் பதியவில்லை. படத்தின் தலைப்புக்கேற்றார் போல் படத்தை ஜவ்வு மிட்டாய் போல் இழுஇழுவென இழுத்திருக்கிறார்.

மொத்தத்தில் ‘ஜவ்வு மிட்டாய்’ சுவை இல்லை.

SHARE