சஞ்சு சாம்சன், குருகீரட் விளாசல்: வங்கதேச ‘ஏ’ அணியை வீழ்த்தியது இந்திய ‘ஏ’ அணி

349

வங்கதேச ‘ஏ’ அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய ‘ஏ’ அணி 96 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

வங்கதேச ‘ஏ’ அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து மூன்று ஒருநாள் மற்றும் இரண்டு மூன்று நாட்கள் கொண்ட டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறது. இதன் முதல் ஒருநாள் போட்டி இன்று நடந்தது.

இதில் முதலில் இந்திய ‘ஏ’ அணி துடுப்பெடுத்தாடியது. ஆரம்பத்தில் நல்ல தொடக்கம் இருந்தாலும், பின்னர் வந்தவர்கள் சற்று சொதப்ப ஆரம்பித்தனர்.

பின்னர் கடைசியாக களமிறங்கிய வீரர்கள் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதனால் அணியின் ஓட்டங்கள் மளமளவென்று உயர்ந்தது.

இந்திய ‘ஏ’ அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுக்கு 322 ஓட்டங்கள் குவித்தது. விக்கெட் கீப்பர் சஞ்சு சாம்சன் அதிகபட்சமாக 73 ஓட்டங்கள் எடுத்தார்.

தொடக்க வீரர் மயாங் அகர்வால் (56), குருகீரட் சிங் (65), ரிஸி தவான் (56) ஆகியோர் தங்கள் பங்கிற்கு அரைசதம் எடுத்தனர். அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ரெய்னா (16) ஏமாற்றம் அளித்தார்.

தொடர்ந்து விளையாடிய வங்கதேச ‘ஏ’ அணி 42.3 ஓவர்களில் 226 ஓட்டங்களுக்கு சுருண்டது. இதனால் இந்திய ‘ஏ’ அணி 96 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

வங்கதேச வீரர்கள் லித்தன் தாஸ் (75), நசீர் ஹொசன் (52) அரைசதம் எடுத்தனர். இந்திய ‘ஏ’ அணி சார்பில், குருகீரட் சிங் 5, ஸ்ரீநாத் அரவிந்த் 3, ரிஸி தவான் 2 விக்கெட் வீழ்த்தினர்.

SHARE