இரும்புச்சத்து இல்லாமல் போனால்…

425

சோர்வு, தலைவலி, சுவாசிப்பதில் சிரமம், சருமம் வெளிறிப்போய்க் காணப்படுவது, இந்த அறிகுறிகள் உங்களுக்கு இருக்கிறதா? கவனம்! உங்களுக்கு இரும்புச் சத்து குறைபாடு காரணமாக ரத்தச்சோகை ஏற்பட்டிருக்கலாம். இந்தியாவில் 80 சதவிகிதம் பேருக்கு இரும்புச் சத்துக் குறைபாடு இருக்கிறதாம். இரும்புச் சத்துக் குறைபாடு அதிகரிக்கும்போது, அது ரத்தசோகையில் கொண்டுபோய்விடுகிறது.

‘நம் நாட்டில் நடுத்தர வர்க்கத்தினரையும், வறுமைக்கோட்டுக்குக் கீழ் உள்ளவர்களையும்தான் இரும்புச் சத்துக் குறைபாடு அதிகம் பாதிக்கிறது. போதிய சத்துள்ள உணவுகளை எடுத்துக்கொள்ள வழி இல்லாமல் அவர்கள் திண்டாடுவதே இதற்குக் காரணம்” என்று தொடங்குகிறார் மதுரையைச் சேர்ந்த பொதுநல மருத்துவர் வி.ரமேஷ். தொடர்ச்சியாக இரும்புச் சத்துக் குறைபாட்டினால் என்னென்ன பிரச்னைகள் வரும் என்பதை விளக்கினார்.

கவனச்சிதறல்

இரும்புச்சத்துக் குறைபாட்டினால் வரும் முக்கியப் பிரச்னை இது. பொதுவாகக் குழந்தைகளுக்கு இத்தகைய கவனச் சிதறல் ஏற்படும்போது உடனடியாக பெற்றோர்கள், பரிசோதனையை மேற்கொண்டு அது இரும்புச் சத்தின் குறைபாட்டினால் வந்ததா அல்லது வேறு ஏதும் பிரச்னையா என்பதைக் கண்டறிந்து, அதைச் சரிசெய்ய முயற்சிக்க வேண்டும்.

தீவிர நெஞ்சு வலி

ஒருவருக்குத் திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டால், அது மாரடைப்புக்கான அறிகுறியாக இருக்குமோ என்று இ.சி.ஜி எடுத்துப் பார்க்கச் சொல்வோம். ஆனால், சில நேரங்களில் இரும்புச்சத்துக் குறைபாட்டினால் வரக்கூடிய நெஞ்சுவலியாகவும் அது இருக்கலாம். இதை கவனிக்காமல் விட்டால், நெஞ்சு படபடப்பு ஏற்பட்டு வலி தீவிரமாகவும் வாய்ப்புகள் அதிகம்.

மூச்சுத்திணறல்

பலருக்கு மூச்சுத்திணறலைக் கண்டறிவதில் பல குழப்பங்கள் ஏற்படுகின்றன. கஷ்டமான ‘ஜிம் வொர்க்அவுட்ஸ்’களை செய்யும்போது மூச்சு வாங்கினால் அதற்காக பயப்படத் தேவை இல்லை. அதுவே, மாடிப்படிகளில் ஏறுதல், காலையில் உடற்பயிற்சி செய்தல் போன்ற சுலபமான வேலைகளைச் செய்யும்போது மூச்சுத் திணறினால் உடனடியாகக் கவனிக்க வேண்டும். மூச்சுத்திணறலால், சுலபமான வேலைகள் அனைத்துமே கடினமாகத் தெரியும்.

வெளுத்துப் போதல்

கண், நாக்குப் பகுதிகளில் ரத்த ஓட்டம் இல்லாததால், வெளுப்புடன் காணப்படும். உடல் சோர்வின் காரணமாக தசைகளில் வலி உண்டாகும். மேலும், வயதானவர்களுக்கு எலும்புகளில் வலி, ரத்தசோகை போன்ற பல்வேறு வியாதிகளுக்கு வித்திடும். விரல் நகங்களில் குழி விழுந்து, வெளுத்துப்போய் மிக வறட்சியாகக் காணப்படும். இன்னும் சிலருக்கு நகத்தின் வடிவமே மாறி ‘ஸ்பூன்’ போன்ற வடிவத்தில் காணப்படும்.

தடுக்கும் முறைகள்

இரும்புச்சத்துக் குறைபாட்டை ரத்தம், மலம்  பரிசோதனை மூலம் கண்டறியலாம். குறைபாட்டைக் கண்டறிந்தால் இரும்புச்சத்து மாத்திரைகள் கொடுத்தும், மல்ட்டி வைட்டமின் மாத்திரைகள் கொடுத்தும் சரி செய்யலாம். அச்சுவெல்லம், முருங்கைக்கீரை, கடலைமிட்டாய், பேரிச்சம்பழம், பச்சைக் காய்கறிகள் போன்றவற்றைத் தினசரி உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் இந்தப் பிரச்னையைத் தவிர்க்கலாம். இதில் எந்த ஓர் அறிகுறியையும் அலட்சியப்படுத்தாமல், பரிசோதித்து அறிந்து உரிய சிகிச்சை மேற்கொள்ளவேண்டியது அவசியம். ஏனெனில், இரும்பு சக்தியின்மை நம்மை பெருமளவு பாதிக்கும் அளவுக்கு வீரியமானது’ – என எச்சரிக்கிறார் டாக்டர். ஆகவே, இரும்பு மனிதர்களாக இருப்போம்!

 

கர்ப்பிணிகளே கவனம்!

பொதுவாகப் பெண்களுக்குத்தான் அதிக அளவில் இரும்புச்சத்துக் குறைபாடு ஏற்படுகிறது. அதிலும் மாதவிலக்கு மற்றும் கர்ப்ப காலத்தில் இரும்புச் சத்துக் குறைபாடு அதிகமாக இருக்கும். அது தாய் சேய் இருவரையும் பாதிக்கும். இதைத் தவிர்க்க கர்ப்பிணிகள் ஒவ்வொரு மாதமும் ரத்தத்தில் உள்ள சிவப்பு அணுக்களின் எண்ணிக்கையைப் பரிசோதிக்க வேண்டும். அரசு ஆரம்பச் சுகாதார நிலையங்களில் ஒவ்வொரு மாதமும் ஹீமோகுளோபின் அளவைப் பரிசோதிக்கின்றனர். ஒன்பதாம் மாதத்தில், தாயிடம் போதிய ஹீமோகுளோபின் இல்லாதபட்சத்தில், அவருக்கு ரத்தம் செலுத்தப்படும்.

SHARE