பெஷாவர் : பாகிஸ்தானின் பெஷாவர் பகுதியில் விமானப்படை தளம் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு தாக்குதல் நடத்தி உள்ளனர். பாக்., படைகளும் பதில் தாக்குதல் நடத்தியதில் 6 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர்.
பாகிஸ்தானின் பெஷாவர் அருகே உள்ள பதாபர் பகுதியில் விமானப்படை தளம் அமைந்துள்ளது. இங்கு ராணுவ உடையில் வந்த 10 பயங்கரவாதிகள், விமானப்படை தளத்திற்குள் நுழைந்து சரமாரியாக துப்பாக்கியால் சுட்டு, தாக்குதல் நடத்தி உள்ளனர். தகவல் அறிந்து அங்கு வந்த பாக்., ராணுவத்தினர் விமானப்படை தளத்தை சுற்றி வளைத்து பதில் தாக்குதல் நடத்தினர். இதில் பயங்கரவாதிகள் 6 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
ராணுவத்தினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே தொடர்ந்து துப்பாக்கிச் சண்டை நடைபெற்று வருகிறது. விமானப்படை தளம் முழுவதும் ராணுவத்தினரின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. விமானப்படை தளத்திற்குள் பதுங்கி இருக்கும் மற்ற பயங்கரவாதிகளை தேடும் பணி நடைபெற்று வருகிறது. இந்த தாக்குதலுக்கு தெஹ்ரி இ தாலிபன் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.