முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் ஆட்சியின் போது இடம்பெற்ற கொலைகள் மற்றும் ஊழல் நடவடிக்கைகளை மூடிமறைக்க இடமளிக்கப்போவது இல்லையென பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
பிரதமரின் உத்தியோகபூர்வ வாசல்ஸ்தலத்தில் அமைச்சர்களுடன் நேற்று மாலை இடம்பெற்ற சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இடம்பெற்ற கொலைகள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்கும் பட்சத்தில் தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்படுமென தெரிவித்து இராணுவத்தினர் விசாரணைகளுக்கு தடையாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மஹிந்தவை பாதுகாப்பது தொடர்பில் ஊடகங்கள் முன்னின்று செயற்படுகின்றமை வருத்தமளிப்பதாகவும் ஊடக தர்மத்திற்கு புறம்பான செயற்பாடுகளால் நாட்டில் பாரிய பிரச்சினைகள் தோன்றுவதற்கான வாய்புக்கள் இருப்பதாகவும் அவர் கவலை வெளியிட்டுள்ளார்.
கொலைகள் தொடர்பான விசாரணைகளை சுமூகமான முறையில் முன்னெடுக்கவே தாம் தீர்மானித்திருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதி பெற்றுக்கொடுக்கப்படுமெனவும் குற்றவாளிகள் எவராக இருந்தாலும் தப்பித்துக்கொள்வதை அனுமதிக்கப்போவது இல்லை எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.