இலங்கைக்கு ஆதரவாக அமெரிக்காவால் கொண்டுவரப்படவுள்ள பிரேரணை குறித்து, இன்று (திங்கட்கிழமை) ஜெனீவாவில் கலந்துரையாடல் ஆரம்பமாகவுள்ளது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் அங்கத்துவம் வகிக்கும் நாடுகளிடம் இதுகுறித்து கருத்துக்கள் கேட்டறியப்படவுள்ளன.
ஜெனீவா கூட்டத்தொடரில் கலந்துகொண்டுள்ள பிரதிநிதிகளிடம் குறித்த பிரேரரணையின் பிரதிகள் ஏற்கனவே கையளிக்கப்பட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.
இலங்கைக்கு ஆதரவாக அமெரிக்காவால் கொண்டுவரப்படவுள்ள பிரேரரணையில், 26 விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக நல்லிணக்கத்தை ஏற்படுத்துதல், மனித உரிமையை நிலைநாட்டுதல், வடக்கில் இராணுவத்தினர் வசமுள்ள காணிகளை விடுவித்தல் என்பன இவற்றில் முக்கியமான விடயங்களாகும்.
அத்துடன் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் யோசனைகளை செயற்படுத்த வேண்டுமெனவும் குறித்த பிரேரணையில் கோரப்பட்டுள்ளது.
அத்துடன், ஐ.நா அறிக்கை குறித்த இலங்கையின் தீர்மானத்தை அமெரிக்கா வரவேற்றுள்ளது. நீதியை நிலைநிறுத்துவதற்கான பொறிமுறை, பக்கச்சார்பற்ற விசாரணை, காணாமல் போனவர்கள் தொடர்பில் ஆராய்தல், காணாமல் போதலுக்கான சூழலை தடுப்பதற்கு இலங்கை கொண்டுள்ள கரிசனை ஆகியவற்றை அமெரிக்க வரவேற்றுள்ளது.
தற்போது வெளியிடப்பட்டுள்ள ஐ.நா விசாரணை அறிக்கையில் கூறப்பட்டுள்ள விடயங்கள் செயற்படுத்தப்பட்டுள்ள விதம் மற்றும் இலங்கையின் மனித உரிமைகள் தொடர்பான மேம்பாடு தொடர்பில் ஐ.நாவின் 33ஆவது கூட்டத்தொடரில் மீளாய்வு செய்யவேண்டுமென அமெரிக்கா கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பான சர்வதேச மட்ட கலந்துரையாடலை ஐ.நாவின் 34ஆவது கூட்டத்தொடரில் மேற்கொள்ள வேண்டுமெனவும் பிரேரணையில் கூறப்பட்டுள்ளது.
குறித்த பிரேரணை தொடர்பில் இலங்கை இன்றைய தினம் வெளியிடப்படவுள்ள கருத்துக்கள் முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது.
பிரேரணை தொடர்பில் வாக்கெடுப்பு நடைபெறாமல் இணக்கப்பாட்டுக்கு அமைவான தீர்மானமொன்றுக்கு வரலாமென கருதப்படுகிறது.
அதுகுறித்து எதிர்வரும் 24ஆம் திகதி அறியக்கிடைக்கும். இலங்கை அரசாங்கத்தின் நிலைப்பாட்டிற்கு அமையவே தீர்மானத்தில் மாற்றம் கொண்டுவரப்படும்.
இன்றைய தினம் ஆரம்பமாகும் விவாதங்களையடுத்து, எதிர்வரும் 30ஆம் திகதி அமெரிக்காவின் பிரேரணை ஐ.நா மனித உரிமை பேரவையில் சமர்ப்பிக்கப்படும்.
இலங்கைக்கு ஆதரவான குறித்த பிரேரணைக்கு மேலும் ஆதரவு திரட்டும் நடவடிக்கையை அமெரிக்கா மேற்கொண்டுள்ளதாக ஜெனீவா தகவல்கள் தெரிவிக்கின்றன.