அரசியல் சாசனப் பேரவைக்கான சிவில் பிரதிநிதிகளின் பெயர்கள் இன்று பாராளுமன்றின் அனுமதிக்காக சமர்ப்பிக்கப்பட உள்ளது.பத்து பேர் கொண்ட அரசியல் சாசனப் பேரவையின் மூன்று உறுப்பினர்கள் சிவில் பிரதிநிதிகளாக இருக்க வேண்டுமென 19ம் திருத்தச் சட்டத்தில் விதந்துரைக்கப்பட்டுள்ளது.
இதற்கு அமைய ஐக்கிய நாடுகள் அமைப்பின் சிறுவர் போராளிகள் தொடர்பான முன்னாள் விசேட பிரதிநிதியும் மனித உரிமை செயற்பாட்டாளருமான ராதிகா குமாரசுவாமி, முன்னாள் சட்ட மா அதிபர் சிப்லீ அஸீஸ், சர்வோதய அமைப்பின் ஸ்தாபகத் தலைவர் ஏ.ரீ. ஆரியரட்ன ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர்.பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்றைய பாராளுமன்ற அமர்வுகளின் போது இந்த மூன்று பேரின் பெயர் விபரங்கள் அடங்கிய யோசனையை அனுமதிக்காக சமர்ப்பிக்க உள்ளார்.
அரசியல் சாசனப் பேரவையில் சபாநாயகர் கரு ஜயசூரிய, பிரதமர் ரணில் விக்ரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் ஆகியோர் பதவி அடிப்படையில் அங்கம் வகிக்கின்றனர்.
இதற்கு மேலதிகமாக ஜனாதிபதியின் பிரதிநிதியாக சம்பிக்க ரணவக்க, பிரதமரின் பிரதிநிதியாக அமைச்சர் விஜயதாச ராஜபக்ஸ, எதிர்க்கட்சித் தலைவரின் பிரதிநிதியாக ஜோன் செனவிரட்ன ஆகியோர் அங்கம் வகிக்கின்றனர்.
சிறு கட்சிகளின் பிரதிநிதியாக ஜே.வி.பியின் பிரச்சார செயலாளர் விஜித ஹேரத் நியமிக்கப்பட்டுள்ளார்.அரசியல் சாசனப் பேரவைக்கான அனுமதி கிடைத்தன் பின்னர், பத்து சுயாதீன ஆணைக்குழுக்கள் நிறுவப்பட உள்ளன. எதிர்வரும் ஒக்ரோபர் மாதம் 15ம் திகதிக்கு முன்னதாக இந்தக் குழுக்கள் நிறுவப்படும் என நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.