பிரகீத் காணாமல் போன சம்பவம் குறித்து இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் அறிந்திருக்கவில்லை?

295

லங்கா ஈ நியூஸ் ஊடகவியலாளர் பிரகீத் எக்நெலிகொட காணாமல் போன சம்பவம் குறித்து இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் அறிந்திருக்கவில்லை என குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நடத்திய விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.பிரகீத் காணாமல் போன சம்பவம் குறித்து கடந்த வாரம் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கடந்த வாரம் இராணுவப் புலனாய்வுப் பிரிவின் உயர் அதிகாரி ஒருவரிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.
இந்த விசாரணையின் போது காணாமல் போன சம்பவம் பற்றி எதுவும் அறிந்திருக்கவில்லை என குறித்த உயர் அதிகாரி தெரிவித்துள்ளார். எக்நெலிகொட கடத்தல் தொடர்பில் தற்போது கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வரும் கிரித்தலே முகாமைச் சேர்ந்த அதிகாரிகள் எந்தவொரு விடயத்தையும் உயர் அதிகாரிகளுக்கு அறிவிக்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
கிரித்தலே முகாமிலிருந்து கொழும்பு வந்தமை, கொழும்பிலிருந்து எக்நெலிகொடவை கிரித்தலே முகாமிற்கு அழைத்துச் சென்றமை குறித்து அறிவிக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, எக்நெலிகொடவிற்கு புலிகளுடன் தொடர்பு இருக்கவில்லை என்பதும் விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.
எக்நெலிகொட கடத்தல் காணாமல் போதல் தொடர்பிலான விசாரணைகளில் முன்னுக்குபின் முரணான தகவல்கள் காணப்படுவதனால் யார் உண்மையாகவே எக்நெலிகொடவை கடத்தச் சொன்னது என்பது பற்றி விசாரணைகள் தொடர்ந்தும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த சம்பவம் தொடர்பில் இராணுவம் மற்றும் ஏனைய தரப்பினர் உள்ளிட்ட 50 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

SHARE