சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் இடை நீக்கத்தை ரத்து செய்யக் கோரி சுப்பிரமணியன் சுவாமி வழக்கு

269

ஐபிஎல் போட்டிகளில் இருந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை இடைநீக்கம் செய்த உத்தரவை ரத்து செய்யக் கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் சுப்பிரமணியன் சுவாமி மனு தாக்கல் செய்துள்ளார்.
இது தொடர்பாக பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு விவரம்:
சூதாட்ட புகார் காரணமாக சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகளை, ஐபிஎல் போட்டிகளில் இருந்து 2 ஆண்டுகளுக்கு இடைநீக்கம் செய்து நீதிபதி ஆர்.எம்.லோதா தலைமையிலான மூவர் குழு உத்தரவிட்டுள்ளது.
இந்த 2 அணிகளுக்கும் ஐ.பி.எல். போட்டியில் கலந்து கொள்ள தடை விதித்துள்ளது அநீதியாகும். இதற்கான ஆதாரங்கள் உள்ளன.
தற்போது தலைமறைவாக உள்ள லலித்மோடி உள்ளிட்ட சிலரின் சதி காரணமாக இந்த 2 அணிகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், சென்னை உயர்நீதிமன்றத்தில் பிகார் கிரிக்கெட் சங்கமும் வழக்கு தொடர்ந்துள்ளது. அந்தச் சங்கம் நேர்மையான காரணத்துக்காக வழக்கு தொடரவில்லை. எனவே, ராஜஸ்தான் ராயல்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் ஆகிய அணிகளுக்கு ஆர்.எம்.லோதா தலைமையிலான குழு விதித்த 2 ஆண்டுகள் இடைக்காலத் தடையை ரத்து செய்ய வேண்டும் என கோரப்பட்டது.
இந்த மனு உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.கே.கெüல், நீதிபதி டி.எஸ்.சிவஞானம் ஆகியோர் முன்பு திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் சுப்பிரமணியன் சுவாமி ஆஜராகி வாதிட்டார். விசாரணைக்குப் பிறகு, ஏற்கெனவே இது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கு வரும் 23-ஆம் தேதி விசாரணைக்கு வரவுள்ளது. அந்த வழக்கோடு, இந்த வழக்கும் சேர்த்து விசாரிக்கப்படும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

SHARE